தூக்குங்க நகர்த்துங்க!ஜூன்-2013


அண்மையில் சென்னை வேளச்சேரியில் பள்ளத்தில் இருந்த ஒரு வீட்டை 6 அடி தூரம் தூக்கி கட்டி மறு சீரமைப்பு செய்திருந்தது ஒரு வட இந்திய தனியார் நிறுவனம். அதன் தொடர்ச்சியாக இன்னும் ஒரு படி மேலே போய் கோவையில் பெரிய பங்களா வீட்டை பாதியாக பிரித்து, அதில் ஒரு பாதியை 35 அடி தூரத்திற்கு நகர்த்தி சாதனை படைத்துள்ளது இன்னொரு தனியார் நிறுவனம். கோவை, சாய்பாபா காலனியில் உள்ள மூன்று தலைமுறை பழமையான மாடி வீடொன்று அதன் உள்ளே உள்ள அனைத்து பொருட்களுடனும் 35 அடி தூரம் நகர்த்தி வைக்கப்பட்டது. வீட்டை நகர்த்தும் இம் முயற்சியை ஹரியானாவைச் சேர்ந்த கட்டுமான கம்பெனி ஒன்று வெற்றிகரமாக செய்து முடித்துள்ளது. இது குறித்து அவ்வீட்டின் உரிமையாளரின் தந்தை ஆறுச்சாமி கூறியபோது, “கோவை மேட்டுப்பாளையம் சாலையில் எனது மகன் தங்கவேலுக்கு சொந்தமாக 2400 சதுர அடி பரப்பளவில் முதல் தளத்துடன் கூடிய வீடு உள்ளது. கடந்த 2000 ம் ஆண்டு கட்டப்பட்ட வீட்டின் தற்போதைய மதிப்பு ரூ.70 லட்சம் ஆகும். வீட்டின் முன்புறம் தங்கவேலுக்குச் சொந்தமாக உள்ள காலி இடத்தில் வணிக வளாகம் கட்ட முடிவு செய்யப்பட்டது. ஆனால், வணிக வளாகம் கட்டுவதற்கு 40 அடி அளவிற்கு இடப் பற்றாக்குறை ஏற்பட்டது. இதற்காக வீட்டை இடித்து புதிய வீடு கட்ட ரூ.1 கோடிக்கு மேல் செலவு ஆகும் என தெரிவிக்கப்பட்டது. இந்நிலையில், சில மாதங்களுக்கு முன்பு ஹரியானாவைச் சேர்ந்த டி.டி.பி.டி. நிறுவனத்தினர், சாய்பாபா காலனியில் உள்ள வீட்டை சில அடிகள் உயர்த்தினர். இதையடுத்து டி.டி.பி.டி. நிறுவனத்தை தொடர்பு கொண்டு கேட்டபோது, வீட்டை இடிக்காமல் எவ்வித பாதிப்பும் இன்றி இடமாற்றம் செய்ய அவர்கள் உறுதியளித்தனர். இதற்கு ரூ.20 லட்சம் வரை செலவாகும் எனவும் தெரிவித்தனர். எனவே, வீட்டை இடிக்காமல் இடமாற்றுவது என முடிவு செய்து, 300 ஜாக்கிகள் மூலம் சுமார் 1.5 அடிக்கு வீட்டை உயர்த்தி அஸ்திவாரத்தைத் துண்டித்து செங்கல் வைக்கப்பட்டது. பின்னர் 300 ரோலர்கள் பொருத்தப்பட்டு, ஒரு நாளைக்கு 3 முதல் 4 அடி வரை வீட்டை பின்னோக்கி நகர்த்தி வந்தனர். இந்த வீட்டின் கழிவுநீர் தொட்டி இணைப்பு மட்டும் துண்டிக்கப்பட்டுள்ளது. குடிநீர், மின்சாரம் உள்ளிட்ட இணைப்புகள் துண்டிக்கப்படவில்லை. ஜன்னல், கதவு போன்றவையும் அகற்றப்படவில்லை. தற்போது 15 பணியாளர்கள் உதவியுடன் 35 அடி தூரத்திற்கு வீடு நகர்த்தப்பட்டுள்ளது” என்றார். டி.டி.பி.டி.நிறுவனத்தின் நிர்வாக இயக்குநர் சுஷில் ஷிசோடியா கூறும்பொழுது, “வீட்டின் சுவர்களுக்கு பாதிப்பு இல்லாமல் 35 அடி தூரத்திற்கு நகர்த்தியுள்ளோம். இம்மாத (மே) இறுதிக்குள் 50 அடி தூரத்திற்கு நகர்த்தி, புதிதாக கட்டப்பட்டுள்ள அஸ்திவாரத்தில் வீடு நிலைநிறுத்தப்படும்” என்று தெரிவித்தார். இனிமேல் விரும்பிய வீட்டை விருப்பமான இடத்திற்கு இடம் பெயர்க்கலாம் போலும்!

மலை உச்சியில் கண்ணாடி பால்கனி! ஜூன்-2013


நான்கு மாடி கட்டிடத்தின் பால்கனியில் நின்று கொண்டு சாலையை வேடிக்கை பார்ப்பதெனில் நமக்கு கொள்ளை பிரியம். ஆனால், அதுவே 4000 அடி உயரத்தில் உள்ள மலை உச்சியில் பால்கனி அமைத்து, பள்ளத்தாக்கை வேடிக்கை பார்ப்பதென்றால் யாருக்குத்தான் பிடிக்காது? இந்த புதுமையான ஐடியாவை செயல்படுத்தி வெற்றி கண்டிருக்கிறது அமெரிக்காவின் அரிசோனா மாகாண அரசு. இங்குள்ள கிராண்ட் கேன்யான் என்கிற கிராமம் மலைப் பள்ளத்தாக்குகளைக் காண விரும்பும் சுற்றுலா பயணிகள் அடிக்கடி வந்துபோகும் இடமாகும். இங்குள்ள சுற்றுலா வளத்தை இன்னும் ஒரு படி உயர்த்த கிராண்ட் கேன்யான் நகராட்சி திட்ட மிட்டது. அதன்படி, எஸ்.என்.என். என்கிற ஆர்க்கிடெக்ட் அமைப்புடன் ஆலோசித்து, இப்படி ஒரு புது வடிவ கண்ணாடியால் ஆன பால்கனியை அமைத்து மவுண்டெய்ன் ஸ்கை வாக் என பெயரிட்டிருக்கிறது. ஒரே சமயத்தில் 120 மக்கள் வரை பார்வையிடக்கூடிய இந்த ஸ்கை வாக்கின் முழு நீளம் 175 அடியாகும். ஆனால், 70 அடி மட்டுமே மலையிலிருந்து வெளியே நீட்டியிருக்கும். மீதி 105 அடி நீளம் மலை உச்சியிலேயே நன்கு பொருத்தப்பட்டிருக்கிறது. அதாவது, ஒரு மடங்கு வெளியேயும், ஒன்றரை மடங்கு உள்ளேயும் பொருத்தப்பட்டிருப்பதால் பாதுகாப்புக்கு 100 சதவீத கியாரண்டி உண்டு. அதுவும் எப்படி பொருத்தப்பட்டிருக்கிறது என்றால், கொண்டை ஊசி வடிவம் கொண்ட இந்த ஸ்கை வாக்கின் இரு முனைகளும் 46 அடி நீளமுடைய 94 போல்ட்டுகளைக் கொண்டு நன்றாக முடுக்கப்பட்டிருப்பதுடன், அதன் மீது கட்டுமானங்களும் எழுப்பப்பட்டிருக்கிறது. பால்கனியின் அகலம் 10 அடியாகவும், அதன் ஒட்டுமொத்த சுற்றளவு 150 அடியாகவும், பால்கனியின் கண்ணாடி தடுப்பு 5 அடியாகவும் உள்ளது. பால்கனி தரைப்பகுதி கண்ணாடியால் அமைந்திருந்தாலும், இரு புறமும் இரும்புத் தகடுகளால் ஆன தடுப்புகளும் உண்டு. 100 மைல் வேகத்தில் காற்று முகத்தில் அறையும் அனுபவத்தை பெறுவதற்காக ஏராளமான சுற்றுலா பயணிகள் வந்து குவிகிறார்கள். தலைக்கு 25 டாலர் கட்டணமாக வசூலிக்கப்படுகிறது. இந்த ஸ்கை வாக் அமைப்பதற்கு 30 பில்லியன் டாலர் செலவானதாக கூறப்படுகிறது. நம்மூர் மலை உச்சிகளிலும், நீர் வீழ்ச்சிகளிலும் இது போன்ற கண்ணாடி பால்கனிகள் பொருத்தப்பட்டால் அவை வரவேற்புக்குரியதே.

கட்டுமான வேலைகளை இணையம் மூலம் கண்காணிக்க! ஜூன்-2013


கட்டுமான வேலைகள் ஒரே இடத்தில் நடக்கும் என்று சொல்வதற்கில்லை. வெவ்வேறு இடங்களில் வெவ்வேறு இயந்திரங்கள், ஆட்களை வைத்து வெவ்வேறு நேரங்களில் வேலைகளைத் தொடர வேண்டும். இவை எல்லாவற்றையும் எளிதில் செய்து முடிக்க உதவுகிறது பில்டிங் பிளாக் என்ற தொகுப்பு. இதைப் பயன்படுத்திக் கட்டுமான வேலைகளை இணையம் வழியாகவே கண்காணிக்கலாம். இதில் கட்டடச் சொந்தக்காரர்களைப் பங்கேற்க வைக்கலாம். கட்டடக் கலை வல்லுநர்கள், பொறியாளர்களை ஒருங்கிணைக்கலாம். மேலாளர்களை நிர்வகிக்கலாம். ஒப்பந் தக்காரர்களைக் கவனிக்கலாம். கட்டுமான வேலையின் ஒவ்வொரு கட்டப் பணியையும் ஆய்வுசெய்யவும், அறிக்கை அளிக்கவும் இணை யத்தைப் பயன் படுத்திக்கொள்ளலாம். களத்தில் என்ன நடக்கிறது என்பது பற்றிய விவரங்களை உடனுக்குடன் இணையத்தில் அளிக்கலாம். செய்ய வேண்டிய வேலையில் ஏதாவது மாற்றங்களைப் புகுத்த வேண்டுமா என்பதை உறுதிப்படுத்திக் கொள்ளலாம். ஏதாவது சந்தேகங்களைக் கேட்பதாக இருந்தாலும் கேட்கலாம். வேலை அடைந்து வரும் முன்னேற்றம் அல்லது தடைகள் போன்றவற்றையும் அறிவிக்கலாம். அறிந்து கொள்ளலாம்.வரைபடங்களைப் பரிமாறிக் கொள்ளலாம்.அவற்றில் திருத்தங்களைச் செய்வதாக இருந்தாலும் செய்யலாம். வேலை நடக்காத நேரங்களிலும் திருத்தங்களை உட்படுத்தி, வேண்டிய நேரத்தில் எடுத்துக் கொள்ளலாம். வேலை செய்பவர்கள் நடந்து கொண்டே பயன்படுத்தி வந்த வாக்கி ‡ டாக்கிக்கெல்லாம் இப்போது அவசியமே இல்லாமல் செய்துவிட்டது வாய்ஸ் மெயில் வசதி.கற்றை கற்றையாகக் காகிதங்களைக் கையாள வேண்டிய தேவையும் கிடையாது. அவ்வளவு ஏன்? எந்தவொரு நிர்வாக முடிவையும் சட்டென்று எடுப்பதற்குத் தேவைப்படும் அத்தனை விவரங்களும் விரல் நுனியில் இருக்குமாறு செய்து கொள்ளலாம். இந்த பில்டிங் பிளாக் மென்பொருளை பயன்படுத்த வேண்டுமெனில், நீங்கள் கார்பொரேட் நிறுவன மாகவோ அல்லது பத்துக்கும் மேற்பட்ட புரஜெக்டுகளை செய்கிற நிறுவனமா கவோத்தான் இருக்க வேண்டும் என்கிற யாதொரு அவசியமும் இல்லை. நீங்கள் ஜி+1 புராஜெக்டில் 4 வீடுகளை மட்டுமே கட்டுகிற கட்டுநராக இருந்தால் கூட உங்களுக்கு இந்த மென் பொருள் பெரிதும் பயன்படும்.இந்த மென்பொருளின் மாதிரியை உங்கள் கணினியில் நிறுவி டிரெயல் பார்க்கலாம். www.digitalcanal.com/buildingblocks.htm என்கிற இணையதள முகவரியில் இதனை பதிவிறக்கம் செய்து பாருங்கள்.

சிவிலுக்கு மட்டுமே இத்தனை சிறப்பு! ஜூன்-2013


நாலு பேரிடம் பெருமையாக சொல்ல வேண்டுமே, நாலு பேர் நம்மை மதிக்க வேண்டுமே என வெற்று பந்தாவிற்கு ஆசைப்பட வில்லையெனில், ப்ளஸ் 2 முடித்த மாணவர்களுக்கு மிக நல்ல தேர்வு சிவில் இன்ஜினியரிங் ஆகும். நம்முடைய வாழ்வுடன் நெருங்கிய தொழில் சிவில் தவிர வேறு எதுவும் இல்லை. இந்தியாவில், தென்கிழக்கு ஆசிய நாடுகளில், ஆப்ரிக்காவில், வளைகுடா நாடுகளில், மத்திய கிழக்கு அரபு நாடுகளில், அடுத்த பத்து வருடங்களுக்கு உயர்தர வேலை வாய்ப்புகளை அள்ளி வழங்கும் வருமானம் உள்ள பிரிவுதான் Civil Engineering..சிவில் என்றாலே வெயில், அழுக்கு, தூசிதானே என யோசிக்கும் உங்களுக்கு சிவிலின் சிறப்புகளை தொகுத்து சொல்வதுதான் இக்கட்டுரை. சிவில் இன்ஜினியர் என்றால் வீடு கட்டுபவர், அல்லது கட்டுமானம் போன்ற துறைகளில் வேலை செய்பவர் என்ற ஒருதலைப்பட்சக் கணிப்பு உள்ளது. இது தவறு. சிவில் இன்ஜினியர் பல வேலைகளைப் பார்க்க முடியும். என்ன மாதிரி? கட்டிடம் அமைக்கவுள்ள தேவைகளை, பொருட்களை நிர்ணயம் செய்யும் அளவாளர் (Quantity Surveyor), நிலம் அளவு நிர்மாணிப்பவர் (Land Surveyor) கட்டிடம், இடம் வடிவம் செய்பவர் (Design Engineer), இடப் பொறியாளர் (Site Engineer), திட்ட மேலாளர் (Project Manager),பாலம் கட்டும் பொறியாளர் (Bridges Engineer), சாலைப் பொறியாளர் (Road Engineer), போக்குவரத்துப் பொறியாளர் (Transport Engineer), கடல்வாழ் கட்டிடம் அமைப்பவர் (Marine Construction), பூகோள நுணுக்க பொறியாளர் (Geo Technical Engineer), கடலைத்தூற்றி நிலமாக்கும் பொறியாளர் (Reclamation Engineer),ஒப்பந்த மேலாளர் (Contract Manager), வாணிப மேலாளர் (Commercial Manager), உற்பத்தியாளர் (Producer), ஒப்பந்தக்காரர் (Contractor), யோசனை டிராயிங், கட்டிட சூபர்விக்ஷன் செய்பவர் (Consultant), இப்படிச் சொல்லில் அடங்காத எண்ணற்ற சேவைகளைப் புரியலாம். “Quantity Surveyor” படிப்பு பற்றி பார்க்கலாம். தகுதி B.E. Civil Engineering or DCE (Diploma in Civil with 3 years experience). . துபாய் போன்ற வளைகுடா நாடுகளில் இவர்களின் குறைந்தபட்ச சம்பளம் ரூ.2 லட்சம், அதிகபட்சம் ரூ.4 லட்சம் ஒரு மாதத்திற்கு. QS/QC என அழைக்கப்படும் பொறியாளர்களுக்கு என்ன வேலை? திட்டம் சம்பந்தப்பட்ட வடிவங்களைப் படித்து சரி செய்தல் (Review), கட்டிடம், திட்டம் சம்பந்தப்பட்ட புனரமைப்பு வேலைகளைப் படித்தல். கட்டமைப்பு வசதிகளை படித்து, அது சம்பந்தப்பட்ட சாலைகள், தெருக்கள், கழிவுநீர் வசதி, குடிநீர்வசதி, Gas Connection, போன்றவற்றை ஆய்ந்து, ஒப்பந்தக்காரர்களின் விலை தயாரித்தல், மனித வளம், பொருட்களின் விலைகளை ஒப்பிட்டு திட்டம் தயாரிப்பது, செய்யத்தக்க செயல்முறைகளைக் கையாளும் விதம் (Feasibility Studies) தயாரிப்பது, ஒப்பந்தம் சம்பந்தப்பட்ட கோப்புகளையும், பத்திரங்களையும் பார்த்தல், வேலைக்குப் பேசப்பட்ட ஒப்பந்தத் தொகைகளை, வேலைகளுக்கு ஏற்ப, வேலைகளை முடித்ததிற்கு ஏற்றவாறு பணம் செட்டில் செய்தல், பட்ஜெட் விபரங்களைத் தயாரித்தல், ஒப்பந்தக்காரர்களின் முடிவான கணக்குகளை செட்டில் செய்தல், மதிப்பீடு செய்து, ஒப்புக் கொள்ளப்பட்ட வேலையின் விலையில் மாற்றங்கள் இருந்தால், அதற்கான வழி முறைகளை ஆராய்ந்து சிபாரிசு செய்தல், வேலை நடக்கும் இடங்ளுக்கு (Field Visit) சென்று திட்டங்களையும், அதன் முன்னேற்றங்களையும், மற்றபடி, , Mechanical/Electrical வேலைகளின் பிற சேவைகளைக் கருத்தில் கொண்டு, சம்பந்தப்பட்ட கோப்புகளைத் தயாரித்து யோசனை வழங்குதல். மேற்சொன்ன வேலைகளுக்கான தகுதிகள்: B.E. Civil/Diploma Civil, நாட்டில் உள்ள கட்டிட வேலைகளின் விபரம், பொருட்களின் தரம், விலை, சந்தையில் உள்ள மாற்றங்கள், ஒப்பந்தக்காரர்களின் விபரங்கள் தகுதிகளை அறிதல், மனிதவளம் செலவுகளைக் கணக்கிடுதல் வேண்டும். மற்ற நாடுகளான இலங்கை, ஆஸ்திரேலியா, கனடா பல்கலைக்கழகங்களில் Bachelor Degree in Quantity Survey சொல்லித் தருகிறார்கள். B.E. Civilபடித்து, இதே வேலையை எடுத்துக் கொள்ளலாம்.Indian Quantity Surveyors Association (IQSA) என்ற அமைப்பில் மாணவர்கள் தொடர்பு கொண்டு வேலைவாய்ப்புகளை, படிப்புகளைத் தெரிந்து கொள்ளலாம்.WEBSITE-_ (IQSA) சென்று பார்த்தால் விபரங்கள் மேலும் அறியலாம். வெளிநாடுகளில் நல்ல சம்பளம் கிடைக்கிறது. ஆதலால் இத்தகைய பணிபுரியும் பொறியாளர்கள், ஒப்பந்தக்காரர் களிடமிருந்து “கையூட்டு” பெற மாட்டார்கள். இயல்பாக இந்தத் தொழிலுக்கு நுழைபவர்களிடம் நேர்மையும், உண்மையும் இருக்க வேண்டும். (Integrity) B.E. Civil/Diploma Civil பயிலும் மாணவர்கள் செய்ய வேண்டியது: QS சம்பந்ததப்பட்ட விபரங்களை கணினி வெப் மூலம் தெரிந்து கொள்ளவும். Charted Institute of Building (CIOB), Royal Institution of Charted Surveyors (RICS), National Institute of Construction Management and Research (NICMAR) போன்ற அமைப்புகளின் செயல்பாடுகளைத் தீவிரமாகத் தெரிந்து கொள்ள வேண்டும். நேரம் கிடைக்கும் பொழுது, நண்பர்கள் மூலம் கட்டிட வேலைகள் நடக்கும் இடத்திற்குச் சென்று பார்வையிடலாம். கொத்தனார், தச்சர், ஃபிட்டர் போன்றவர்களிடம் அடிக்கடி உரையாடி, அனுபவரீதியான தகவல்களைத் தெரிந்து கொள்ளலாம். பாலிடெக்னிக்குகள், பொறியியல் கல்லூரிகள் கட்டாய மாக ஃபீல்டு விசிட் ஏற்படுத்த வேண்டும். கட்டிட நிறுவனங்களுடன் தொடர்பு கொண்டு பயிற்சிகளை அளிக்க வேண்டும். Building Materials, கட்டிடப் பொருட்கள், இயந்திரங்கள், இதில் உள்ள நவீன வளர்ச்சி பற்றி சந்தைக்குச் சென்று மாணவர்கள் அறிந்து கொள்ள வேண்டும். சிவில் இன்ஜினியரிங் படிக்க விரும்புகிறேன். ஆனால், என் வீட்டில் பிளஸ் 2 விற்குப் பின் எலெக்ட்ரானிக்ஸ் இன்ஜினியரிங் படிக்கக் கூறுகின்றனர். சிவில் இன்ஜினியரிங் நல்ல வேலை வாய்ப்பு தரக்கூடிய படிப்புதானா? என்பதுதான் பெரும்பாலான ப்ளஸ் 2 மாணவர்களின் கேள்வியாக இருக்கிறது. அவர்களுக்கெல்லாம் இதுதான் பதில்: ஒரு நாட்டின் முன்னேற்றம் அந்த நாட்டிலுள்ள உள்கட்டமைப்பு வசதிகளான சாலைகள், பாலங்கள், சுரங்கப்பாதைகள், ரயில்வே, விமானப் போக்குவரத்து வசதிகள், கடல்வழிப் போக்குவரத்து அமைப்புகள், சாக்கடை வசதிகள், குடிநீர் வசதிகள், கட்டிடங்கள் போன்றவற்றைப் பொறுத்தே அமைகிறது. இவற்றையெல்லாம் வடிவமைப்பவர்கள் சிவில் இன்ஜினியர்கள்தான். எனவே, ஒரு சிவில் இன்ஜினியராக மாறினால் சிமெண்டினாலும், செங்கலினாலும் கவிதை போன்ற வடிவங்களை உருவாக்கும் வித்தை புரிகிறது. இதனால் காலாகாலத்திற்கும் மக்கள் நம்மை ஞாபகத்தில் வைத்துப் போற்றக்கூடிய சான்றுகளை நமது சந்ததியினருக்கு விட்டுச் செல்லும் வாய்ப்பும் எழுகிறது. இத்துறையில் உள்ள சிறப்புப் படிப்புகள் இவைதான். கன்ஸ்ட்ரக்க்ஷன் இன்ஜினியரிங்: குறிப்பிட்ட வடிவங்களை உருவாக்குவதே இத்துறையின் அடிப்படை அம்சமாகும். ஒரு கன்ஸ்ட்ரக்க்ஷன் இன்ஜினியர் திட்டமிடுதலில் தொடங்கி, வடிவமைத்தல், பட்ஜெட் கன்ட்ரோல், குவாலிடி கன்ட்ரோல், மெட்டீரியல் டெஸ்டிங் என்பதிலிருந்து மேற்பார்வை செய்வது போன்ற அன்றாட கட்டுமானப் பணி தொடர்புடைய வேலைகளை மேற்கொள்ள வேண்டும். ஸ்ட்ரக்சுரல் இன்ஜினியரிங்: கட்டுமானத்தில் உபயோகிக்கப்படும் பல்வேறு பொருட்களின் ஸ்திரத்தன்மை மற்றும் பாதுகாப்புகள் குறித்த படிப்பாகும் இது. அழுத்தத்தைத் தாங்கும் உறுதித் தன்மை பற்றி கட்டுமான உபயோகப் பொருட்கள் பரிசோதிக்கப்பட வேண்டும். அது போலவே அணைகள், சாலைகள், எண்ணெய் கிணறுகள், பாலங்களில் வேறு வித மான கட்டுமானப் பொருட்கள் உபயோகப்படுத்தப்பட வேண்டியிருப்பதால் ஒவ்வொரு கட்டுமானப் பணிக்கும் எப்படிப்பட்ட பொருட்களை உபயோகிக்க வேண்டும் என்பதை இவர்களே முடிவு செய்கிறார்கள். நகர்ப்புற திட்டமிடல்: இது அர்பன் பிளானிங் அல்லது சிட்டி பிளானிங் என அழைக்கப்படுகிறது. இந்தியாவில் உள்ள சண்டிகர், புனே போன்ற நகரங்கள் மிகவும் திட்டமிட்ட முறையில் உருவாக்கப்பட்ட நகரங்களாகும். அதாவது, இங்கு வசிக்கும் மக்கள் சீரிய சாலைகள், பாலங்கள், வீட்டு வசதிகள், பூங்காக்கள், விளையாட்டு மைதானங்கள், குடிநீர் வசதி, சாக்கடை வசதி, தொழிற்சாலை மற்றும் குடியிருப்பு வசதி போன்ற வசதிகளைப் பெறுவதற்கு உதவுவது இந்தத் துறைதான். நகர்ப்புற திட்டமிடல் படிப்புகளின் நோக்கம் என்பது நவீன, வசதியான, பாதுகாப்பான உள் கட்டமைப்பு வசதிகளைக் கொண்ட நகர் அல்லது ஊரை வடிவமைப்பதாகும். ஜியோமெக்கானிக்கல் இன்ஜினியரிங்: எந்தவொரு கட்டிடமாக இருந்தாலும் சரி, அதன் அடித்தளம் என்பது அது அமைந்துள்ள பூமியின் பரப்பைச் சார்ந்துள்ளது. எனவே, மண்ணின் தன்மையே எந்தக் கட்டிடத்திற்கும் ஆதாரமாக உள்ளது. இவற்றைப் பற்றிப் படிப்பதுதான் ஜியோ மெக்கானிக்கல் இன்ஜினியரிங். இதைப் படிப்பவர்களில் பெரும்பாலானோர் பெட்ரோலியம், இயற்கை எரிவாயு மற்றும் தாதுக்களை கண்டறியும் தொழிற்சாலைகளில் பணியில் இருக்கிறார்கள். தண்ணீர் மற்றும் மரேன் இன்ஜினியரிங்: தண்ணீர் தொடர்புடைய வேலைகளுக்காக நகரங்களில் கட்டப்படும் மாதிரிகளிலும், விவசாயம், கால்வாய்கள், அணைகள், வேஸ்ட் வாட்டர் டிரீட்மெண்ட் ஆலைகள், துறைமுகம், எண்ணெய் கிணறுகள், ஹைட்ரோ எலெக்ட்ரிக் மின்சார வசதிகள் தொடர்புடைய படிப்புகள் இந்தப் பிரிவைச் சேர்ந்தவையே. என்றும் எப்போதும் தேவைப்படும் திறனாளர்களை உருவாக்கும் சிவில் இன்ஜினியரிங் துறையை மாணவர்கள் தேர்வு செய்து வாழ்வில் வெற்றி பெறுவதோடு, நாட்டின் முன்னேற்றத்திலும் பங்கு கொள்ளலாம்.

சுமாரான பட்ஜெட்டில் சூப்பரான இன்டீரியர்! மே-2013


வீடு கட்டும்போதே அதற்குரிய இன்டீரியர் பற்றியும் திட்டமிடும் காலமிது.என்றாலும், பலரும் பெரும் பணத்தை செலவழித்தும் தங்களுக்குப் பிடித்தாற்போல் வீடு மற்றும் அலுவலகத்தின் இன்டீரியர் அமையவில்லையே என குறைபட்டுக்கொள்வார்கள். ஆனால், உங்கள் வீட்டின் அறைகளின் அளவையும், பட்ஜெட்டையும் சொல்லி விட்டால், அதற்கேற்றாற்போல் கண்ணைக் கவரும் பல்வேறு வகையான மனதை மயக்கும் இன்டீரியர்களை அமைத்து தந்து விடுகிறார்கள் சென்னையை தலைமையிடமாகக் கொண்டு செயல்படும் ஜே இன்டீரியர்ஸ் நிறுவனம். அலுவலகங்கள், அடுக்குமாடி குடியிருப்புகள், தனி வீடுகள் என பல்வேறுவகையான புராஜெக்டுகளுக்கும் இன்டீரியர் பணிகளை தங்களுடைய குழுவினருக்கு பிஸியாக பிரித்துக் கொடுத்து கொண்டிருந்த ஜே இன்டீரியர்ஸ் நிறுவனத்தின் நிர்வாக இயக்குனர் திரு. எட்வின் கிறிஸ்டஸ் அவர்களை சந்தித்தோம் உங்கள் இன்டிரியரின் வகைகள் என்னென்ன? “”நாங்கள் ஆரம்பத்தில் கலாச்சார ரீதியாக அனைத்து இன்டீரியர்களையும் வடிவமைத்து தந்திருக்கிறோம். இப்போது நவீனமயமாக்கல் காரணமாக அனைவரும் புதுமையை விரும்புவதால், அலங்காரப் பொருட்கள், விளக்குகள், சுவர்களில் ஒட்டப்படும் வால் பேப்பர்கள் முதலியனவும் மற்றும் ரெசிடென்ஷியல், கமர்ஷியல், அலுவலகம் போன்ற மூன்று வகைகளில் இன்டீரியர் வடிவமைப்பை செய்து வருகிறோம். தொடக்கத்தில் திருப்பூரில் ஆரம்பித்தோம். பிறகு கோவையில் ஒரு கிளையை தொடங்கினோம். நிறுவனத்தை மேலும் பலப்படுத்த சென்னையை தலைமையிடமாகக் கொண்டு வெற்றிகரமாக இயங்கிவருகிறோம். எங்களின் தனிச் சிறப்பு என எடுத்துக் கொண்டால், வீடுகளில் அமைக்கும் இன்டீரியர் பணிகளுக்கு கவனம் எடுத்து செய்து வருகிறோம். ஏனெனில், கமர்ஷியல், ஆபீஸ் ஆகிய இரண்டு வகை இன்டீரியர்களில் இதுவரை செய்த டிசைன்கள் அனைத்திலும் வெற்றி பெற்று விட்டோம். மேலும், இவை இரண்டும் டிசைனர்களுக்கு சுலபமானதாகும். ஆதலால் வீடுகளில் மேற்கொள்ளப்படும் டிசைன்களுக்கு அதிக முக்கியத்துவம் தருகிறோம். மேலும், வீட்டைப் பொறுத்தவரை வாடிக்கையாளர் விரும்பும் வடிவத்தில் அமைக்க வேண்டும். சமையலறை, படுக்கையறை, குழந்தைகள் அறை என அனைத்து விக்ஷயங்களையும் கவனிக்க வேண்டும். எனவே, எங்கள் நோக்கம் அனைத்தும் வீடுகளே. எங்களிடம் தகுதி வாய்ந்த 35க்கும் மேற்பட்ட டிசைனர்கள் இருக்கிறார்கள். அவர்கள் கணினி மூலம் உருவாக்கும் அற்புதமான டிசைன்களை வாடிக்கையாளர்களிடம் காட்டி, அதற்குப் பிறகே இன்டீரியர் பணிகளைத் துவங்குகிறோம். அறிவியல் ரீதியாக அனைத்து டிசைன்களையும் வாஸ்து முறைப்படி, வாடிக்கையாளர்கள் விரும்பும் விதத்தில் அமைத்து தருகிறோம். அவர்கள் திருப்தி அடையும் வகையில் டிசைன்களை அவர்களுக்கு தோதாக மாற்றித் தருகிறோம்’’. தங்களுடைய புராஜெக்டுகளின் இன்டீரியருக்காக உங்களை நாடிவரும் பில்டர்களுக்கு தாங்கள் அளிக்கும் சலுகைகள் பற்றி .. “”எங்களிடம் வரும் அனைத்து பில்டர்களுக்கும் சலுகைகள் நிச்சயம் உண்டு. அது பில்டர்களின் கட்டு மான பட்ஜெட்டைக் கொண்டு முடிவு செய்யப்படும். மேலும், எவருக்கும் பாகுபாடின்றி ஒரே மாதிரியான முறையில் வாடிக்கையாளர்கள், பில்டர்கள் திருப்தியடையும் வகையில் சலுகைகள் வழங்குகிறோம்’’. சென்னையில் உங்கள் பணிகள்.. ”சென்னையில் கம்பீரமாக நிற்கும் பல கட்டுமானங்களில் இன்டீரியர் பணிகளை செய்து வருகிறோம். கூடிய விரைவில்உஸ்மான் சாலையில் உள்ள ‘ஸ்ரீ கோல்ட் ஜுவல்லரி’ நிறுவனத்தில் இன்டீரியர் அலங்காரப் பணிகள் மேற்கொள்ளவிருக்கிறோம். சென்னையில் பிரபலமான VIP-களின் வீடுகளிலும் இன்டீரியர் ஒர்க்கை செய்து வருகிறோம்’’ என்றார் எட்வின் கிறிஸ்டஸ். பளபள இன்டீரியருக்கு ஆசைப்பட்டு ஆனால் விலையைக் கண்டு தயங்கும் பலரும் இனி தங்கள் பட்ஜெட்டுக்கேற்ற இன்டீரியர் பணிகளை செய்து தரும் இந்நிறுவனத்தை அணுகலாம்: J Interiors Pvt. Ltd., Old No.20, New No.37, Teachers Colony, Adyar, Chennai-20 Mobile: 9843043350, 98434 73350 E-mail: info@jinteriors.in Web: www.jinteriors.in

மாணவர்களை முதன்மை ஆக்குவதில் முதன்மையான கல்லூரி-மே-2013


சிவில், மெக்கானிகல், எலெக்ட்ரிகல் ஆகிய இம்மூன்று துறைகள்தான் வேலைவாய்ப்பு அதிகம் உள்ள முதன்மைத் துறையாகும். நாங்கள் இந்த மூன்று துறைகளிலுமே முதன்மையாக உள்ளோம்” என்கிறார் அன்னை பொறியியல் கல்லூரியின் சிவில்துறைத் தலைவர் திரு. எஸ். ராஜன்முரளி. கும்பகோணத்திலுள்ள அன்னை பொறியியல் கல்லூரி K.K.O.முஹம்மது இப்ராஹீம் கல்வி சாரிடபிள் ட்ரஸ்டால் 2009 ஆம் ஆண்டு துவங்கப்பட்டு அண்ணா யூனிவர்சிடி ஆஃப் டெக்னாலஜி, திருச்சியுடன் இணைக்கப்பட்டதாகும். இங்கு கல்வி பயிலும் அனைத்து மாணவர்களும் விவசாய குடும்பத்தைச் சார்ந்தவர்கள். தமிழ்வழிக் கல்வி என்பதால் அனைவரும் எளிமையாக பொறியியல் கற்றுத் தேர்ந்தவர்களாக வருகிறார்கள். மற்றத்துறை படிப்புகளை விட பொறியியல் துறை மிகக் கடினமான ஒன்று. ஆதலால் அதனை மனதில் வைத்து முழுமூச்சுடன் மாணவர்களுக்கு கல்வி தரத்தை சிறப்பாக வழங்கி வருகிறது அன்னை பொறியியல் கல்லூரி. “இங்குள்ள சிவில் மாணவர்களுக்குத் தேவையான ஒர்க்க்ஷாப், லேப் போன்றவைகள் நவீன தொழிற்நுட்பம் கொண்டு உருவாக்கப் பட்டுள்ளன. எங்களிடம் அனைத்து விதமான ஆய்வுக் கூடங்களும் உள்ளன. சர்வே லேப், மெட்டீரியலின் வலிமையை பரிசோதிக்கும் லேப், FM எனப்படும் (Fluid Mechanical) லேப், மென்பொருள் ஆய்வகம், ஆட்டோகேட் (Autocad)ல் சிவில்துறை மட்டுமின்றி அனைத்து துறையினருக்கும் சுலபமாக விளங்கும் மென்பொருட்களை பயன்படுத்தி வருகிறோம். டிரான்ஸ்போடேக்ஷன் லேப் மற்றும் என்வரமென்டல் இன்ஜினியரிங் லேப் போன்ற ஆய்வகங்களும் எங்கள் கல்லூரியில் உண்டு. பயோடெக்னாலஜி மாணவர்கள் இணைந்து வைக்கோலில் இருந்து நைட்ரஜன் வாயுவை உண்டு பண்ணும் பரிசோதனையை செய்து வருகிறார்கள். விளையும் பொருட்களையே மறுசுழற்சி முறையில் யூரியா உரமாக பயன்படுத்த சோதனை மேற் கொண்டு வருகிறார்கள். கான்கிரீட் தயாரிக்கும் மெட்டீரியல் சோதனையும் மாணவர்கள் செய்து வருகிறார்கள்” என்றார் திரு. எஸ். ராஜன்முரளி. முதல்வர் திரு. L. கோதண்டபாணி அவர்களை சந்தித்து பேசியபோது “இது முதலில் கலைக் கல்லூரியாக தொடங்கப்பட்டது. பிறகு மேலும் மாணவர்கள் பயனுற வேண்டி பொறியியல் துறையையும் துவங்கினோம். சிவில் உள்ளிட்ட பல்வேறு பாடப்பிரிவுகளில் முழு நேரப் பாடப்பிரிவில் 1300க்கு மேற்பட்ட மாணவர்கள் பயில்கின்றனர். தேர்ச்சிவிகிதம் சிறப்பாக உள்ளது” தமிழ்வழியில் பயின்று பொறியியல் படிப்பில் சேரும் மாணவர்களுக்கு நீங்கள் செலுத்தும் சிறப்புக் கவனம் என்ன? “தொடக்கத்திலே ஆங்கிலத்தில் பாடம் நடத்தினால் மாணவர்களுக்கு கடினமாக இருக்கும். எனவே, இரண்டு ஆண்டுகள் பாடத்தை எளிய நடையில் தமிழில் நடத்துவோம். டெக்னிகல் விதிகளை தமிழில் மொழிமாற்றி கூற இயலாது. ஆதலால், அதனை கட்டாயம் ஆங்கிலத்திலேயே பாடம் நடத்தியாக வேண்டும். எனவே, ஆங்கிலத்திற்கும் முக்கியத்துவம் அளிக்கிறோம். அதே நேரம் பாடங்களையும் சுலபமாக புரியும்படி நடத்துகிறோம். தொழிற்நுட்ப திறனை மேம்படுத்த மாணவர்களுக்கு பயனுள்ள வகையில் பெரிய நிறுவனங்களுக்கு வருடந்தோறும் சென்று அந்த நிறுவனங்களின் புராஜெக்டுகளில் பணி எவ்வாறு நடைபெறுகிறது என்பதனை ஆய்வு செய்யும் இன்டஸ்ட்ரியல் விசிட், இம்ப்ளான்ட் ட்ரெயினிங் போன்றவற்றை ஏற்பாடு செய்கிறோம். மேலும், மாணவர்களுக்கு செய்முறை விளக்கம் அளிப்பதற்காக தமிழ்நாட்டில் உள்ள பெரும்பான்மையான தொழிற்சாலைகளுக்கும், பெங்களூரு, ஆந்திரா, கேரளா போன்ற நகரங்களுக்கும் சென்று வந்திருக்கிறார்கள். அணைக்கட்டுகளை பார்வையிட குற்றாலம், பாபநாசம் போன்ற அணைகளுக்கு அழைத்துச் செல்கிறோம்” என்றார் முதல்வர் திரு.L. கோதண்டபாணி.

ஃபோம் கான்கிரீட் கற்கள்!மே-2013


செங்கற்களின் பயன்பாடு குறைந்து ஃப்ளை ஆஷ் கற்கள் ஆதிக்கம் செலுத்தும் இக்காலத்தில் மற்றும் ஒரு பசுமைக் கட்டிடப் பொருளாக கட்டுமானச் சந்தைக்குள் நுழைந்திருக்கும் புதிய வரவுதான் ஃபோம் கான்கிரீட் (செல்லுலர் லைட் வெயிட் கான்கிரீட்) மற்றும் ஃபோம் கான்கிரீட் பிளாக்குகள். இதனைத் தயாரிப்பதில் இந்திய அளவில் முன்னணியில் உள்ள நிறுவனமான டாம் இன்ஜினியர்ஸ் நிறுவனத்தின் நிர்வாக இயக்குநர் திரு. அருள்குமார் அவர்களை சந்தித்து ஃபோம் கான்கிரீட்டை பற்றி கேட்ட போது “2008 ஆம் ஆண்டு தொடங்கப்பட்ட எங்கள் நிறுவனம் ஜெர்மன் தொழிற்நுட்பத்தை தழுவி நம் நாட்டிற்கேற்றவாறு கீழ்க்கண்டவற்றை தயாரித்து அளிக்கிறோம். ஃபோம் கான்கிரீட் சொலூக்ஷன்ஸ் 4ஃபோம் கான்கிரீட் மிக்ஸர் யூனிட். 4ஃபோம் ஜெனரேட்டர் 4ஃபோமிங் ஏஜெண்ட் 4ஃபோம் பிளாக் கட்டிங் மெஷின் 4ஸ்டீம் கியூரிங் 4சைலோ / கன்வேயர் 4ஃபோம் கான்கிரீட் பிரிக்ஸ் அதாவது, ஃபோம் கான்கிரீட் பிளாக்குகளைத் தயாரிக்கும் இயந்திரங்களையும், ஃபோம் கான்கிரீட் பிளாக்குகளையும் நாங்கள் உற்பத்தி செய்து தருகிறோம். சிறிய அளவிலான பில்டர்கள் மற்றும் பொதுமக்கள் ஃபோம் கான்கிரீட் பிளாக்குகளை மட்டும் வாங்க விரும்புவார்கள். நடுத்தர, பெரிய பில்டர்கள் மற்றும் பன்னடுக்கு குடியிருப்புகளைக் கட்டும் மெகா பில்டர்கள் எங்களது ஃபோம் கான்கிரீட் தயாரிக்கும் இயந்திரங்களை வாங்கி அவர்களே சொந்தமாக கற்களை தயாரித்துக் கொள்வர். அத்தகையோருக்கு கற்களைத் தயாரிக்கும் செயல் முறைகளை சொல்லித் தருவதோடு, தேவையான மூலப்பொருட்களையும் தருகிறோம். சந்தையில் உள்ள பிற கற்களை விட ஃபோம் கான்கிரீட்டின் பல சாதகமான அனு கூலங்களால் தற்போது ஃபோம் கான்கிரீட் இயந்திரத்திற்கு மிகப் பெரிய வரவேற்பு கிடைத்து வருகிறது”. பிற கற்களை விட ஃபோம் கான்கிரீட் கற்களை பயன்படுத்தும்போது கிடைக்கக் கூடிய நன்மைகள் என்ன? “இத்தயாரிப்புகளை கட்டுமானத்தில் பயன்படுத்தும்போது பளு தாங்கும் திறன், வெப்பத்தைக் கடத்தா திறன் (Thermal Insulation), ஒலியைக் கடத்தா திறன், தீயைக் கடத்தா (Fire Proof),திறன் போன்ற கூடுதல் சிறப்புகளைப் பெறுகிறது. அளவில் பெரியது. எடை குறைவானது. வேஸ்டேஜும் மிகக் குறைவாகும். மேலும், கட்டுமானப் பணிகளை விரைவாக முடித்து விடலாம். கட்டு மானத்தின் மொத்த செலவுகளில் 15 சதவிகிதம் முதல் 20 சதவிகிதம் வரை நிச்சயம் மிச்சப்படுத்தலாம். சந்தைக்கு வந்த புதிதில் மக்களிடையே மார்க்கெடிங் செய்வதற்கு மிகவும் சிரமப்பட்டோம். தற்போது மக்களிடையே விழிப்புணர்வு ஏற்பட்டு மிகுந்த வரவேற்பை பெற்றுள்ளது. இன்று எங்கள் நிறுவனத்தின் தயாரிப்புகளின் நன்மைகளை அறிந்து, தாமகவே முன்வந்து பொறியாளர்கள் முதல் சிறு வாடிக்கையாளர்கள் வரை பயன்படுத்துகிறார்கள். எங்கள் தயாரிப்புகளை வாடிக்கையாளர்கள் கேட்கும் அளவுகளிலும், ரெடிமேட் அளவுகளிலும் தயாரித்து வழங்கி வருகிறோம். கூரைகள் மீது வெப்பத்தை தாங்கும் வகையில் ‘தெர்மல் இன்சுலேக்ஷன்’ கலவையை பூசுவதால் உள்ளே வெப்பம் புகுவது தடுக்கப்படும். சாதாரண கற்களில் சிமெண்ட், மணல், குவாரி டஸ்ட் போன்ற பொருட்கள் கொண்டு கலவை இருக்கும். அதன் அடர்த்தி அதிகம் என்பதால் ஒலி மற்றும் வெப்பத்தினை கடத்தும் தன்மை பெற்றிருக்கும். ஆனால் லைட் வெயிட் கான்கிரீட்டில் அடர்த்தி குறைவு. ஃபோம் கான்கிரீட் இயற்கையில் கிடைக்கும் பொருட்களைக் கொண்டு தயாரிக்கப்படுகிறது. எரிசாம்பல் (ஃபிளை ஆஷ்), சோயாபீன்ஸ் மற்றும் தாவர எண்ணெய்களிலிருந்து பெறப்படும் ஃபோம்மற்றும் மூலப்பொருட்களைக் கொண்டு உற்பத்தி செய்யப்படுகிறது. இதுவே இந்திய காலநிலைக்கு சிறந்தது. சராசரி பிரிக்ஸ்களைவிட எடை குறைவானது, வெவ்வேறு அளவுகளிலும் கிடைக்கும். தனி வீடு புராஜெக்டுகளில் ரூஃப் கான்கிரீட்டாகவும் இதை பயன்படுத்தலாம். இரு பக்கங்களிலும் மோல்டுகளை வைத்துவிட்டு ஆட்டோஃபில்லிங் முறையில் கலவை ஊற்றப்படும்போது, கான்கிரீட், பீம்கள், காலம்கள் போன்ற எல்லாமே தயார். பிறகு இரண்டே நாட்களில் வீடுகள் தயார். பிரீகாஸ்ட் கட்டுமான முறையில் இது பயன்படுத்தப்படுகிறது. உலக நாடுகள் அனைத்திலும் இந்த வகை கற்களைக் கொண்டு கட்டுமானம் அமைத்து வருகிறார்கள். ஆனால், இந்திய சந்தைக்கு இந்த வகை கட்டுமானப் பொருட்கள் புதுசு.பொறியாளர்களுக்கும், வாடிக்கையாளர்களுக்கும் இந்த இயந்திரம் இயக்குவது பற்றி பயிற்சி அளிக்கிறோம்” . உங்கள் தயாரிப்புகளின் உத்திரவாதம் பற்றி ? “மற்ற தயாரிப்புகளைக் காட்டிலும் கூடுதலான ஆண்டுகள் உத்திரவாதம் தருகிறோம். ஏனெனில், மற்ற வகை கற்கள் நாட்கள் செல்ல செல்ல அதன் கடினத் தன்மை குறைந்து ஆயுள் குறையும். ஆனால், ஃபோம் கான்கிரீட் தயாரிப்புகள் அதற்கு மாறாக நாட்கள் அதிகரிக்க அதிகரிக்க மேலும் அதன் கடினத்தன்மை கூடும். இயற்கைக்கு கேடில்லா பொருட்கள் கொண்டு தயாரிப்பதால் நீண்ட ஆண்டுகள் நீடிக்கும்” என்றார் திரு.அருள்குமார்.