ஏறு முகத்தில் ஏ ஏ சி கான்கிரீட் !


ஒரே பொருளுக்கு இத்தனை பெயர்களா?
செல்லுலர் கான்கிரீட். இந்த ஒரு பொருளை எத்தனை விதமான பெயர்களில் குறிப்பிடுகிறார்கள் என்பது தெரியுமா உங்களுக்கு?

   ஏரேட்டட் கான்கிரீட் ஏர் க்யூர்ட் லைட் வெயிட் கான்கிரீட் ஆட்டோ க்ளேவ்ட் செல்லுலர் கான்கிரீட் செல்லுலர் லைட் வெயிட் கான்கிரீட் இத்தனை பெயர்களில் அழைக்கப்பட்டாலும் இது ஒரே பொருள்தான். செல்லுலர் கான்கிரீட் விரும்பித் தேர்ந்தெடுக்கப்படக் காரணம் என்ன? வெப்பம், தீ முதலியவற்றைத் தடுக்கும் திறனில் செல்லுலர் கான்கிரீட் முன்னணியில் நிற்கிறது. நீண்ட உழைப்பிற்கும் உத்தரவாதம் அளிப்பதாக இருக்கிறது.

        வேதிப் பொருட்களால் பாதிக்கப்படாத தன்மை இதற்கு அதிகம். இதற்கு முன்பு பயன்படுத்தப்பட்டு வந்த பிளாஸ்டிக் தன்மை கொண்ட கான்கிரீட் வகைகளைக் காட்டிலும் நான்கு மடங்கு இறுக்கத் திறன் கொண்டதாக செல்லுலர் கான்கிரீட் திகழ்கிறது. இதில் தீப்பற்றுவது கடினம். ஒலியின் வீச்சைக் குறைத்து அநேகமாக இல்லாமல் செய்துவிடும் தன்மையும் இதற்கு உண்டு. ஆற்றலை உள்ளிழுத்துக் கொள்ளும் குணமும் இருக்கிறது.

கட்டுமானத் தேவைகளுள் பலவற்றை நிறைவேற்றக் கூடிய ஒரே பொருளாக இருப்பதால் ஒவ்வொரு தேவைக்கும் ஒவ்வொரு பொருளைத் தேடிக் கொண்டிருக்க வேலை இல்லாமல் ஒன்றிலேயே பல தேவைகளை நிறைவேற்றிக் கொள்ள முடிவது செல்லுலர் கான்கிரீட்டின் சிறப்பு. இதனால்தான் செல்லுலர் கான்கிரீட் பெரிதும் விரும்பித் தேர்ந்தெடுக்கப்படுகிறது. கட்டுநர்கள் அளவில் மட்டுமல்லாமல் பொதுமக்களும் இதன் பயனை உணரத் தொடங்கியிருக்கிறார்கள். செல்லுலர் கான்கிரீட்டை எப்படித் தயாரிக்கிறார்கள்? எடை குறைவான கட்டுமானப் பொருள் என்று சொன்னதுமே எல்லோருக்கும் நினைவுக்கு வருவது செல்லுலர் கான்கிரீட்தான்.

இதைத் தயாரிக்க என்னென்ன பொருட்கள் தேவைப்படும்?

போர்ட்லண்ட் சிமென்ட். தண்ணீர். நுரைக்க வைக்கும் பொருட்கள். அழுத்தப்பட்ட காற்று. இத்தகைய பொருட்களைக் கொண்டு தயாரிக்கப்படும் செல்லுலர் கான்கிரீட் அதிக உறுதி கொண்டதாக இருக்கும். தண்ணீர் முக்கியச் சேர்மானப் பொருளாகப் பயன்படுத்தப்பட்ட போதிலும் தேவை முடிந்த பிறகு அதனை வடித்து நீக்கிவிடவும் வசதி கிடைக்கிறது. செல்லுலர் கான்கிரீட்டிற்கு மேலும் வலு சேர்ப்பதற்கு ஒட்டும் தன்மை அதிகம் உள்ள போஸலோன் என்று குறிப்பிடப்படும் பொருட்களைச் சேர்க்கலாம். அனல்மின் நிலையங்களில் நிலக்கரியை எரித்த பின் கழிவாக எஞ்சுகிற எரிசாம்பல் இத்தகைய தேவைகளுக்குப் பெரிதும் பயன்படுத்தப்படுகிறது.

சில வகை நார் இழைகளையும் கலந்து செல்லுலர் கான்கிரீட்டைத் தயாரிப்பார்கள். இவ்வாறு உருவாக்கப்படும் செல்லுலர் கான்கிரீட் அதிக உறுதி கொண்டதாகவும் நெகிழ் தன்மை தேவையான அளவுக்கு இருப்பதாகவும் விளங்கும். செல்லுலர் கான்கிரீட்டின் தனித்தன்மை மற்ற கான்கிரீட் வகைகளிலிருந்து செல்லுலர் கான்கிரீட் எப்படி வேறுபடுகிறது? வழக்கமாகக் கான்கிரீட் தயாரிப்பது என்றால் கண்டிப்பாக ஜல்லியும் மணலும் முக்கியத் தேவையாக இருக்கும். செல்லுலர் கான்கிரீட்டில் இந்த இரண்டு பொருட்களுமே கிடையாது. அதுதான் இதன் தனித் தன்மை என்று சொல்லலாம்.ஜல்லிகள், மணல் ஆகிய பொருட்கள் செய்யும் வேலையைக் காற்றுக் குமிழ்கள் செய்கின்றன. காற்றுக் குமிழ்கள், கான்கிரீட்டின் உட்பகுதியில் கொப்புளம், கொப்புளமாக இடத்தை நிரப்புகின்றன.

இதனால் ஒரு குறிப்பிட்ட கன அளவு கொண்ட கான்கிரீட்டின் எடை கணிசமாகக் குறைகிறது. உறுதியில் எந்தக் குறையும் இருப்பதில்லை. செல்லுலர் கான்கிரீட்டின் நுரை செல்லுலர் கான்கிரீட்டின் உட்பகுதியில் பெரும்பாலும் காற்றுக் குமிழ்களைக் கொண்ட நுரைதான் காணப்படும். நுரை என்றதுமே வலுவற்ற, எளிதில் அமிழ்ந்து அடங்கிவிடக் கூடிய நுரை வகைகளை மட்டுமே எடுத்துக் கொள்ளத் தேவையில்லை. நல்ல அடர்த்தி கொண்ட, வலுவான, நீடித்து நிற்கக் கூடிய நுரை வகைகள் தயாரிக்கப்படுகின்றன.

சிமென்ட்டைக் கொண்டு உருவாக்கப்படும் கசடு இதற்கு முக்கிய மூலப் பொருளாகப் பயன்படுத்தப்படுகிறது. செல்லுலர் கான்கிரீட் தயாரிப்பிற்கு ஏற்ற விதத்தில் நுரைத்தன்மையை உருவாக்குவதற்குப்பல வகைச் சாதனங்கள் பயன்படுத்தப்படுகின்றன. இவற்றைக் கொண்டு நுரைக்க வைப்பது ஒரு வழிமுறை. இதிலேயே இன்னொரு முறையும் இருக்கிறது. கான்கிரீட்டிற்குள் இருக்கக் கூடிய காலி இடங்களைப் பிளாஸ்டிக் வேதிப் பொருட்களால் நிரப்புவதுதான் அந்த இரண்டாவது முறை. விரிவாக்கப்பட்ட பாலிஸ்ட்ரீன் என்ற பொருளைக் கொண்டு கான்கிரீட்டின் உட்புறக் காலி இடங்களை நிரப்புவது இந்த உத்தியின் முக்கியப் பகுதி.மூன்றாவது வழியிலும் செல்லுலர் கான்கிரீட்டிற்குள் காற்றுக் குமிழ்களை ஏற்படுத்துவார்கள். இதற்கு அலுமினியப் பொடி பயன்படுத்தப்படுவது வழக்கம்.

 ஏஏசி கான்கிரீட் மற்றும் பிளாக்குகளை தயாரிக்க வழிவகை செய்யும் பயிற்சி மையங்கள் பெங்களூரிலும் வட மாநிலங்களிலும் ஏற்கனவே உருவாக்கப் பட்டுவிட்டன. தமிழ்நாட்டைப் பொறுத்தவரை ஒன்றிரண்டு பயிற்சி மையங்கள் உருவாகி வருகின்றன. வெகு சீக்கிரம் தமிழகத்தின் அனைத்து முக்கிய நகரங்களிலும் அமைந்து விடும். மற்ற வகை கான்கிரீட் ப்ளாக்குகளைப் போன்ற மிகப் பெரிய முதலீடும், நிலப்பரப்பும் இதற்கு தேவைப்படாது என்பதால் கட்டுநர்களும், கான்ட்ராக்டர்களும் உபதொழிலாகவே ஏஏசி கற்கள் தயாரிப்பினை மேற்கொள்ளலாம். செங்கற்களுக்கு சிறந்த மாற்றாக கருதப்படும் ஏஏசி கற்களை பொதுமக்களும் வரவேற்பர்.

மூன்று டன் மரத்தில் முத்தான இன்டீரியர் !


மரங்களுக்கு மாற்றுப் பொருளாக பல்வேறு கண்டுபிடிப்புகள் மாதந்தோறும் சந்தைக்கு வந்து கொண்டிருந்தாலும், மரம் தரும் அவுட் லுக்கிற்கு மாற்று எதுவும் உண்மையில் இல்லை.

       அண்மையில் சுவிட்சர்லாந்தைச் சேர்ந்த ஜோஸப் பெர்னாடிக் என்கிற இன்டீரியர் ஆர்க்கிடெக்ட் தனது கெஸ்ட் ஹவுஸ் ஒன்றின் உட்புறத்தை முழுக்க முழுக்க மரத்தினாலேயே இழைத்திருக்கிறார். சாதாரணமாக தரைகளுக்கு மட்டுமே மரப்பலகைகளைப் பயன்படுத்துவது மரபு. ஆனால், ஜோஸப் தரைகளுக்கு மட்டுமன்றி, சுவர்களுக்கும், சீலிங்குகளுக்கும் மரத்தைக் கொண்டு கவசம் பூட்டியிருக்கிறார்.இதற்காக 3 டன் மரங்கள் பயன்படுத்தப்பட்டிருக்கின்றன.

        தரைத்தளத்துடன் இரண்டு அடுக்குகளையுடைய இந்த வீடு 30க்கு 40 என 1200 சதுர அடி பரப்பில் அமைந்துள்ளது. வெளிப்புறத்தில் பார்ப்பதற்கு முழுக்க முழுக்க கான்கிரீட்டினால் ஆனதாக காட்சியளிக்கிறது.அதைத் தவிர்த்து சிமென்ட் கலவைப் பூச்சு அல்லது வர்ணங்கள் எதுவும் பூசப்படவில்லை.உட்புறத்திலும் சிமென்ட் கலவைப்பூச்சு, வர்ணங்கள், டைல்கள் என எதுவுமே பயன்படுத்தாமல் மரப்பலகை கொண்டே சுவர் அலங்காரத்தை மேற்கொண்டிருக்கிறார் ஜோஸப்..

தன்னுடைய உதவி ஆட்கள் இருவரின் துணை மட்டும் கொண்டு, இரண்டு ஆண்டுகளாக இந்த வீட்டின் ஒட்டுமொத்த இன்டீரியர் பணிகளையும் மேற்கொண்டிருக்கிறார் ஜோஸப். “முழுவதுமே மரத்தினாலான வீட்டைக் கட்டத்தான் திட்டமிட்டிருந்தேன். ஆனால், வெயில், பனி, மழை மற்றும் பூச்சித் தொல்லைகளுக்காக அந்தத் திட்டத்தினைக் கைவிட நேர்ந்தது. கான்கிரீட் கட்டிடம்தான் இதுபோன்ற வனாந்திர காட்டுப் பகுதிகளுக்கு ஏற்றது.

அதே சமயம் உட்புறத்தில் மரப்பலகைகள் கொண்டு பொருத்திவிட வெளியே உஷ்ணம் இருந்தாலும், குளிர் இருந்தாலும் வீட்டிற்குள் தெரியாது. தாராளமாக வெளிச்சம் வருவதற்காக 12 முக்கிய இடங்களில் எட்டுக்கு நான்கு அடி அளவுடைய கண்ணாடிகளைப் பயன்படுத்தியிருக்கிறேன். ஃபர்னிச்சர்களைப் பொறுத்தவரை மிக ஜாக்கிரதையாக மரத்தினைத் தவிர்த்து விட்டேன். ஏனெனில், மரத் தரைகளோடு உட்டன் ஃபர்னிச்சர்களைப் பயன்படுத்துவது சிறப்பானது அல்ல. பராமரிப்பும் கடினம். எளிதில் தரையும் பாழ்படும்.

எனவேதான், ஃபைபர், கண்ணாடி ஆகியவைகளிலான ஃபர்னிச்சர்கள் கொண்டு வீட்டினை அலங்கரித்திருக்கிறேன்” என ஜோஸப் தனது சமூக வலைதளத்தில் எழுதியிருக்கிறார். உலகம் முழுக்க அதிக அளவில் இன்டீரியர் ஆர்க்கிடெக்டுகளினால் இவரது வீட்டின் இன்டீரியர் புகைப்படங்கள் பார்க்கப்படவே, அதனை ஜெர்மனியில் நடைபெறும் வருடாந்திர பெஸ்ட் ஆர்க்கிடெக்சர் போட்டிக்கும் அனுப்பி வைத்திருக்கிறார் ஜோஸப் பெர்னாடிக்.

                     நம்மூர் இன்டீரியர் ஆர்க்கிடெக்டுகளும் இதுபோன்று முயற்சிக்கலாமே!

பெயிண்டர்களுக்கு டிப்ஸ்கள் !


இங்கே சொல்லியிருக்கும் குறிப்புகள் பெயின்டர்களுக்கு மட்டுமின்றி தங்கள் வீடுகளுக்கு பெயின்ட் அடிக்க திட்டமிட்டிருக்கும் வாசகர்களுக்கும் பொதுவானது.
1. வீட்டு உரிமையாளர்களின் பட்ஜெட் என்ன என்பதைத் தெளிவாகத் தெரிந்து கொள்ளுங்கள்.தற்போதுள்ள பெயின்ட் வகைகளில் அவர்கள் எதைப்போன்ற ஃபினிஷிங்குகளை விரும்புகிறார்கள் என்பதையும் கேட்டு அறிந்து கொள்ளுங்கள்.

2 . பெயின்டர் என்றால் பெயின்ட் அடிப்பதுதான் வேலை என்று மட்டும் இருந்துவிடாமல், பெயின்டிங் தொடர்பான ஆலோசனைகளையும் நாம் அளிக்கக்கூடியவராக இருக்க வேண்டும்.

3,இப்போதெல்லாம் பெயிண்ட் நிறுவனங்கள் தங்களுடைய தயாரிப்புகள் மற்றும் நிறங்களுக்கு ஏற்ற வகையில் அறைகளை எப்படி உருவாக்கலாம்? என்பதை வண்ணப் புகைப்படங்கள் அடங்கிய கேட்டலாக்குகளாக வெளியிடுகின்றன. அவற்றை பெயிண்டர்களும் வைத்திருப்பது அவசியம். அப்போதுதான் வாடிக்கையாளர்களுக்கு எந்த பெயிண்ட்? எந்த அறைக்கு எந்த நிறம்? என்ற முடிவுகளைச் சுலபமாக எடுக்க முடியும்.

4. எந்த அளவு பரப்பிற்குப் பெயின்ட் செய்ய வேண்டும் என்பதைச் சரியாக கணக்குப் போட்டுக் கொள்வது முக்கியம்.

5. சதுர அடிக் கணக்கா அல்லது மொத்தமாகப் பேசிக் கொள்வதா? என்பதில் கவனமாக இருக்க வேண்டும். இதை ஒரு ஒப்பந்தமாகவே எழுதி வாங்கிக் கொள்ள வேண்டும்.

6. எந்த கடையில் வாங்கப் போகிறார்கள் என்பதை வீட்டு உரிமையாளர்களின் முடிவுக்கே விட்டுவிடுங்கள். அவர்கள் ஏம றாமல் இருப்பதற்குச் சில வழிகளைச் சொல்லுங்கள்.

7. நீங்கள் குறிப்பிடும் கடைகளில்தான் வாங்க வேண்டும் என்பதில் பிடிவாதம் காட்டாதீர்கள். உங்கள்கமிஷனுக்காகத்தான் அப்படிச் செய்கிறீர்கள் என்று நினைக்க இடம் கொடுத்துவிடாதீர்கள்.

8. வீட்டு உரிமையாளர்களின் இரசனை ஒவ்வொரு விதமாய் இருக்கும். அவர்களது விருப்பத்திற்குக் குறுக்கே நிற்காதீர்கள்.

9. இந்த பரப்பிற்கு இது ஒத்து வரும், இது ஒத்துவராது என்பதைத் தொழிற்நுட்ப ரீதியில் புரிய வையுங்கள். ‘நான் சொல்கிறபடி செய்துவிட்டுப் போ’ என்கிறவர்களிடம் முறைத்துக் கொள்ள வேண்டாம்.

10. செய்யப்போகும் வேலை புதிய கட்டடத்திலா அல்லது பழைய கட்டடத்திலா என்பதைத் தெளிவாக்கிக் கொள்ளுங்கள். இரண்டிற்கும் உள்ள வேறுபாடு உங்களுக்கு நன்றாகத் தெரிந்திருக்க வேண்டும்.

11. உங்களுக்குச் சில கணக்குகளைச் சரியாகப் போடத் தெரிந்திருக்க வேண்டும். இத்தனை லிட்டர் பெயின்டை வாங்கினால் இத்தனை சதுர அடிக்குப் பூச முடியும் என்பதை நீங்கள் துல்லியமாகக் கணக்குப் போட்டு வைத்துக் கொள்ள வேண்டும்.

12. எந்த நேரத்தில் எந்த இடத்து வேலையை எடுத்துக் கொள்வது என்பதில் உங்களது திட்டமிடும் திறமையைக் காட்டுங்கள். வெயில் கொளுத்திக் கொண்டிருக்கும் வெளிப்புறச் சுவர்களை மாலை வேளையில் தேர்ந்தெடுக்கலாமே.

13. பழைய சாமான்கள், பழைய சுவர்களைப் பெயின்ட் செய்யுமுன் அவற்றின் பரப்பைச் சுத்தம் செய்வதற்கு அதிக முக்கியத்துவம் கொடுங்கள். இதனால் உங்கள் வேலை நீடித்து நிற்கும். நல்ல பெயரைப் பெற்றுத் தரும்.

14. எதையும் வீணாக்கக் கூடாது என்பதில் கவனமாக இருங்கள். பெயின்ட் டின்னைத் திறந்து வைத்துவிட்டு மறந்து போய்விடக் கூடாது. கவிழ்ந்து கொட்டி வீணாக இடம் கொடுக்கக் கூடாது.

15. நீங்கள் தேர்ந்தெடுக்கும் பிரஷ்கள் தரமான வையாக இருக்க வேண்டும். தரமற்ற பிரஷ்களால் உங்கள் வேலைதான் இழுத்தடிக்கும். கட்டுபடியாகாமல் போய்விடலாம்.

16. நீங்கள் அடிக்கும் பெயின்ட் எவ்வளவு விரைவில் காயும் என்பது பற்றிய கணக்கும் தெரிந்திருக்க வேண்டும். அதற்கேற்றபடி உங்களது அடுத்த கட்ட நடவடிக்கைகளைத் திட்டமிட்டுக் கொள்ள வேண்டும்.

17. இந்த தொழிலில் உங்களது உடல் நலம் கெடுவதற்கான வாய்ப்புகள் அதிகம். தகுந்த பாதுகாப்பு நடவடிக்கைகளை மேற்கொள்ள வேண்டும். அலட்சியம் கூடாது.

18. உங்களுடைய கருவிகள் உங்களது வேலையை எளிதாக ஆக்குபவையாக இருக்க வேண்டும். இதற்காக நீங்கள் செய்யும் செலவு ஒருமுதலீடுதான். புதிய தொழிற்நுட்பக் கருவிகளைப் பயன்படுத்தக் கற்றுக் கொள்ளுங்கள்.

19. சில பெயின்ட் தயாரிப்பு நிறுவனங்களே பயிற்சி கொடுக்கும் முறையையும் அறிமுகப்படுத்துகின்றன. அத்தகைய பயிற்சிகளில் கலந்து கொண்டு உங்களது திறமையை வளர்ததுக் கொள்ளுங்கள்.

20. ஒரே நேரத்தில் பல வேலைகளுக்கு முன்பணம் வாங்க வேண்டாம். உங்களிடம் போதுமான எண்ணிக்கையில் திறமையுள்ள உதவியாளர்கள் இருக்கிறார்களா என்பதை உறுதிப்படுத்திக் கொள்ளுங்கள்.

21. உங்கள் தொழிலை ஒரு சீசனல் பிசினஸ் என்ற கோணத்தில் அணுக வேண்டும். சில மாதங்களில் கட்டுமான வேலைகளையே செய்ய மாட்டார்கள். சில மாதங்களில் அடித்துப் பிடித்து விரட்டி வேலை வாங்குவார்கள்.

22. பண்டிகைக் காலங்கள் உங்களுக்குப் பல வாய்ப்புகளைக் கொண்டு வரக்கூடியவை. எந்தப் பண்டிகையின்போது என்ன மாதிரியான வேலைகள் வரும் என்பதை நீங்கள் நாடிபிடித்துப் பார்த்துவைத்துக் கொள்ள வேண்டும்.

23. உங்களைப் பற்றி விளம்பரப்படுத்தக் கூடியவை உங்களது வேலைகள்தான். நேர்த்தியாக முடிக்கப்பட்ட வேலையைப் பார்ப்பவர்கள் உங்களைத் தேடிக் கொண்டு வருவார்கள். உங்களது வேலைத்திறம் அதுமாதிரி அமைய வேண்டும்.

24. உங்கள் பகுதியில் யார், யாரெல்லாம் உங்களது சேவையைப் பயன்படுத்திக் கொள்ள வாய்ப்பு இருக்கிறது என்பதைக் கணக்கெடுங்கள். அவர்களது தொடர்புகளை எப்போதும் காலாவதியாகிவிடாமல் தொடருங்கள்.

கிரீன் ஃ பீல்ட் விமானநிலையம் ஒரு ரியல் எஸ்டேட் மோசடியா !


தமிழகத்தில் வளர்ச்சி திட்டங்களுக்கான அறிவிப்பின் தேதிக்கும், அதன் அடிக்கல் நாட்டு விழாவின் தேதிக்கும் மிகப்பெரிய கால இடைவெளி இருக்கும். அதைவிட கொடுமை, அடிக்கல் நாட்டு விழா தேதிக்கும், பணி நிறைவு நாள் தேதிக்கும் மிகப்பெரிய யுகங்களின் இடைவெளி இருக்கும். அப்படி எத்தனையோ திட்டங்களை நாம் சொல்ல முடியும்.

          சென்னை, மதுரவாயல் துறைமுகம் சாலை திட்டத்தில் தொடங்கி சேது சமுத்திர திட்டம், கூடங்குளம் அணுமின் நிலைய திட்டம் என சொல்லிக்கொண்டே போகலாம். அந்த வரிசையில் இப்போது சென்னை ஸ்ரீபெரும்புதூர் கிரீன் ஃபீல்ட் ஏர்போர்ட். சாமான்ய மனிதனுக்கு இதைப்பற்றி உரையாடக் கூட செய்தி அறிவு இல்லையென்பதால் நாளிதழ்களில் ஏதேனும் ஒரு ஓரத்தில் சென்னை ஏர்போர்ட் பற்றிய லேடஸ்ட் செய்திகள் அவ்வப்போது முரண்பட்ட தகவல்களைத் தெரிவித்துக்கொண்டிருக்கின்றன.

        தென்னிந்தியாவில் ஏதோ ஒரு மூலையில் இருக்கும் ஸ்ரீபெரும்புதூர் ரியல் எஸ்டேட்டிற்கும், மத்திய,மாநில அரசு சதுரங்க காய் ஆட்டத்திற்கும் தொடர்பு இருக்கிறது என்றால் உங்களால் நம்ப முடிகிறதா? இதனைச் சற்று விரிவாக ஆராய்வதற்கு முன்பு கிரீன் ஃபீல்ட் விமான நிலையம் என்றால் என்ன என்பதை தெரிந்து கொள்வோம். கிரீன் ஃபீல்ட் விமான நிலையம்என்பது சென்னையில் மட்டும் அமைக்கப்படக் கூடிய திட்டம் அல்ல.

சென்னை போன்ற எம்.என்.சி நிறுவனங்கள் நிறைந்திருக்கும் அனைத்து இந்திய நகரங்களிலும் பசுமைக் கட்டிட விமான நிலையங்கள் உருவாக்கப்பட வேண்டும் என்பது மத்திய அரசின் எண்ணமாக இருந்தது. ஆந்திரா, கர்நாடகா, கேரளா, டெல்லி போன்ற மாநிலங்களில் கிரீன்ஃபீல்ட் விமான நிலையங்கள் அமைக்கப்பட்டு வருகின்றன. தமிழகத்தில் பரபரப்பாக இயங்கும் சென்னை மீனம்பாக்கம் விமான நிலையத்தில் அதிகப்படியான விமானங்கள், சரக்குகள் கையாளப்படுவதால் வருங்கால தேவையை முன்னிட்டு மீனம்பாக்கத்திலிருந்து 40 கி.மீ தொலைவிலுள்ள ஸ்ரீபெரும்புதூர் அருகே கிரீன் ஃபீல்ட் விமான நிலையம் அமைக்க மத்திய அரசு முடிவு செய்து 2009 செப்டம்பரில் அறிவித்தது.(இதற்கான சர்வகட்சிகளின் கூட்டம் தி.மு.க ஆட்சி காலத்தில் 2007 ல் நடைபெற்றது). இதற்காக 4,500 ஏக்கர் நிலத்தை கையகப்படுத்த அப்போதைய மாநில அரசு முடிவெடுத்தது.

நிலம் கையகப்படுத்தும் பணிகள் முடிந்து, கட்டுமானப் பணிகள் துவக்கப்படும் நாளிலிருந்து 28 மாதங்களில் கிரீன் ஃபீல்ட் ஏர்போர்ட் கட்டுமானப் பணிகள் நிறைவடையும் என்றும், இதற்கென ரூ.2,000 கோடி நிதி ஒதுக்கப்படும் என்றும் அறிவிக்கப்பட்டது.

அப்போதே அ.தி.மு.க, பா.ம.க.போன்ற கட்சிகள் நிலத்தை கையகப்படுத்த எதிர்ப்பை தெரிவித்தனர். கிராம மக்களின் விவசாய நிலங்களுக்கு அருகில் விமானநிலையம் அமையவிருப்பதை அனுமதிக்க முடியாது என்று கூக்குரலிட்டனர்.என்றாலும், அப்போதைய மத்திய அரசும், மாநில அரசும் ஒருமித்த கருத்தில் இருந்ததால் ஸ்ரீபெரும்புதூர் அருகே விமான நிலையம் வருவது உறுதியாக இருந்தது. இதன் அதிரடி விளைவாக அங்கு ரியல் எஸ்டேட் வரலாறு காணாத உச்சத்தைத் தொட்டது.

2011 ல் தமிழகத்தில் ஆட்சி மாற்றம் ஏற்பட்டது. எதிர்பார்த்தது போலவே அ.தி.மு.க அரசு மத்திய அரசின் கிரீன் ஃபீல்ட் விமான நிலைய திட்டத்தை ஏற்றுக்கொள்ள மறுத்தது. ஏற்கனவே சென்னை விமான நிலையம் போதுமான அளவிற்கு விஸ்தாரமாக இருப்பதால் கிரீன் ஃபீல்ட் விமான நிலையம் தேவையில்லை என்றும், அப்பாவி கிராம மக்களின் விளை நிலங்களும், வாழ்வாதார இடங்களும் பாதிப்புக்குள்ளாகும் என்று திட்டம் கிடப்பில் போடப்பட்டது. இதுதான் 2013 செப்டம்பர் வரை இருக்கும் நிலைமை. ஆனால், ஒரு சில ரியல் எஸ்டேட் நிறுவனங்களும், கட்டுமான நிறுவனங்களும் தங்களது புராஜெக்டை விற்பதற்காக உத்தேச விமான நிலையம் அருகே வரவிருக்கும் அறிவிப்பை உபயோகித்து பொதுமக்களை குழப்பிவருகின்றன. நிறுவனங்களின் வாக்குறுதிகளை நம்பி, விமான நிலையம் அருகே தங்களுக்கான நிலமோ, வீடோ இருந்தால் நல்லதுதானே என்று பொதுமக்களும் முதலீடு செய்ய ஆர்வமாக உள்ளனர். உண்மையில் ஸ்ரீபெரும்புதூர் அருகே விமான நிலையம் வருகிறதா? அப்படி வருவதாக இருந்தால் எந்த ஆண்டு பணிகள் துவங்கும்? எப்போது நிறைவடையும்? இந்த தேதிகளை ஆதாரபூர்வ மாக சொல்ல குறிப்பிட்ட ரியல் எஸ்டேட் நிறுவனங்களும், கட்டுமான நிறுவனங்களும் தயாராக உள்ளனவா? ஏன் இதுபற்றிய தீர்மானமான செய்திகளை நாளிதழ்கள் வெளியிட தயங்குகின்றன? ஒரு வேளை அங்கு விமான நிலையம் வந்தாலும் கூட அதனால் நமது மனைக்கு கிடைக்கக்கூடிய கூடுதல் பயன்கள் என்ன?

          இதெல்லாம் மில்லியன் டாலர் பெறுமானமுள்ள கேள்விகளாகும். அதே சமயம், ஸ்ரீபெரும்புதூர், பேரம்பாக்கம் இங்கெல்லாம் வீடு, மனை வாங்க நினைக்கும் சாமானிய மனிதனுக்கு கேட்கத் தெரியாத கேள்விகளாகும். அ.தி.மு.க அரசு ஆட்சியில் இருக்கும் வரை கிரீன் ஃபீல்ட் விமான நிலைய புராஜெக்ட் என்ற பேச்சுக்கு இடமே இல்லை என்பது ஸ்ரீபெரும்புதூர், பேரம்பாக்கம் ஆகிய இடங்களில் புராஜெக்டை மேற்கொள்ளும் ரியல் எஸ்டேட் மற்றும் கட்டுமான நிறுவனங்களுக்கு தெரிந்திருந்தாலும் கூட உத்தேச விமான நிலையம் அருகே என்று தங்களது விளம்பரங்களிலும், புரௌசர்களிலும் குறிப்பிட்டு ஏன் அதை மார்கெட்டிங்கிற்கு பயன்படுத்துகிறார்கள் என்று விளக்க அவர்கள் முன் வரவேண்டும். இது தொடர்பான உண்மை செய்திகளை வெளியிட பெரும்பாலான நாளிதழ்கள் தவறுகின்றன என்பதுவும் உண்மை. ‘ஸ்ரீபெரும்புதூரில் ரூ.2000 கோடி செலவில் பிரமாண்ட கிரீன் ஃபீல்ட் ஏர்போர்ட்’ என செய்திகளை வெளியிட்டு, சில மாதங்களிலேயே ‘நவீன விமான நிலையம் கிடையாது. டில்லி, மும்பைக்கு மட்டும் மத்திய அரசு பச்சைக்கொடி’ என்று மறுசெய்தியை வெளியிடுகின்றனர்.

ஒரு புறம் ‘இரண்டாவது விமான நிலைய திட்டம் கனவாகி போய்விடுமோ?’ ‘தமிழக அரசு முயற்சி எடுக்குமா?’ என்று செய்தியை வெளியிட்டுவிட்டு பிறகு, ‘ஸ்ரீபெரும்புதூரில் இந்த ஆண்டு பசுமை விமான நிலையம். பிரதமர் தலைமையில் நடந்த கூட்டத்தில் முடிவு’ என்று செய்தி வெளியிடுகிறார்கள். செய்தியை வெளியிடுகிற எல்லா நாளிதழ்களுக்கும் மிக நன்றாக தெரியும் அ.தி.மு.க அரசு அரியணையில் இருக்கும் வரை கிரீன்ஃபீல்ட் திட்டம் இம்மி கூட நகரப்போவதில்லை என்று. நிலைமை அவ்வாறு இருக்க, யார் தலைமையில் கூட்டம் நடந்தால் என்ன?

இந்திய விமானநிலைய ஆணையதலைவர் திரு.அகர்வால் சமீபத்தில் தெரிவித்திருப்பதாக மற்றுமொரு செய்தி வெளியிடப்பட்டது.

‘ஸ்ரீபெரும்புதூர் கிரீன்ஃபீல்ட் திட்டத்திற்கான மதிப்பீடு ரூ.20,000 கோடியாக உயர்த்தப்பட்டிருக்கிறது. இதற்காக 5000 ஏக்கர் நிலத்தை தமிழக அரசு கையகப்படுத்தியிருக்கிறது. இது குறித்து தலைமைச் செயலர் மற்றும் அதிகாரிகளுடன் விவாதிக்க உள்ளேன்‘ எனக் கூறியதாக செய்திகள் வெளியாகின. 2009 ம் ஆண்டில் கிரீன் ஃபீல்ட் திட்டமைப்பு ரூ.2,000 கோடி என்று மத்திய அரசு அறிவித்தது. இடைப்பட்ட நாட்களில் ரூ.4,000 கோடி என சொல்லப்பட்டது. தற்போது இந்திய விமான நிலையத்தின் தலைவரே திட்டமதிப்பு ரூ.20,000 கோடி என்கிறார். அப்படியென்றால் எது உண்மை? திட்டமதிப்பை யார் சொல்ல வேண்டும்? விமான ஆணையதலைவரா? விமான போக்குவரத்து துறை அமைச்சரா? பிரதமரா? நிதியமைச்சரா? முதலில் 4,000 ஏக்கரில் விமான நிலையம் என்றார்கள். இப்போது 5,000 ஏக்கர் என்கிறார்கள். உண்மையில் எத்தனை ஏக்கரில் எந்த இடத்தில் விமான நிலையம் வரப்போகிறது? இதெல்லாம் கூட பரவாயில்லை, விமான நிலைய ஆணய தலைவர் கிரீன் ஃபீல்ட் திட்டம் குறித்து தமிழக தலைமைச் செயலர் மற்றும் அதிகாரிகளுடன் விவாதிப்பதாக தெரிவித்திருந்தார் என்றால் அதற்கு பிந்தைய செய்தி என்ன? விவாதம் மேற்கொள்ளப்பட்டதா? மேற்கொள்ளப் பட்டதெனில் விவாதங்களின் இறுதியில் முடிவுசெய்யப்பட்ட தீர்மானம் என்ன? அதுகுறித்த தமிழக அரசின் நிலைப்பாடு என்ன?இது பற்றிய எந்த செய்திகளுமே இதுவரை வெளியாகவில்லை என்பதுதான் உண்மை.

     ஸ்ரீபெரும்புதூர் வருவாய்த்துறை மற்றும் தாலுகா அலுவலகங்கள் என எந்த உள்ளாட்சி அமைப்புமே ஸ்ரீபெரும்புதூரில் விமான நிலையம் வரவிருப்பதை உறுதி செய்யவில்லை. நிலைமை அவ்வாறு இருக்க உத்தேச விமான நிலையம் அருகே எனக்கூறி தற்போது நிலவி வரும் அரசியல் குழப்பங்களை பயன்படுத்தி தங்களது புராஜெக்டுகளை மார்க்கெடிங் செய்யும் நிறுவனங்களை ஏன் இதுவரை தமிழக அரசு கட்டுப்படுத்தவில்லை என்பதும் புதிராகவே இருக்கிறது.

தமிழக முதல்வர் கிரீன் ஃபீல்ட் திட்டம் வேண்டாம் என்கிறார். மத்திய அரசு மௌனமாக இருக்கிறது. அதே சமயம் விமான நிலைய ஆணைய தலைவர் கூடிய விரைவில் திட்டம் துவங்கப்பட இருப்பதாக கூறுகிறார். ஆக, மக்களை பெருங்குழப்பத்தில் ஆழ்த்தியிருக்கும் கிரீன் ஃபீல்ட் விமான நிலைய திட்டம் குறித்த இறுதியான, உறுதியான, தீர்மானமான தமிழக அரசின் அறிவிப்பு இதுவரை வெளியாகவில்லை. அறிவிப்பதில் உள்ள குழப்பம் மட்டுமன்றி, மேலும் சிலகுழப்பங்களும் நிலவுகின்றன.

குழப்பம் நம்பர் 1: இதே இடத்தில் சிப்காட் தொழிற் பேட்டைக்கு நிலம் கையகப்படுத்துகிறது. இதையும் ஒரு சில ரியல் எஸ்டேட் நிறுவனங்கள், பார்த்தீர்களா, ஏர்போட்டிற்கு நிலம் வாங்குகிறார்கள் என மார்க்கெடிங் செய்கிறார்கள்.

குழப்பம் நம்பர் 2 : மீனம்பாக்கம் விமான நிலையத்தின் புதிய டெர்மினல் திறப்பதை உள்ளூர் கிராம மக்களுக்கு கிரீன் ஃபீல்ட் விமான நிலையம் திறக்கப் போவதாக தவறாக செய்திகள் சொல்லப்படுகிறதாம்.

குழப்பம் நம்பர் 3 : அடிக்கடி விழும் மீனம்பாக்கம் விமான நிலையத்தின் கூரை விபத்துக்களால், ஸ்ரீபெரும்புதூரில் புதிய விமான நிலையம் திறக்கப் போகிறார்கள் என்றும் செய்திகள் பரப்பப்படுகின்றன.சரி, ஒருவேளை நிறைய அதிசயங்கள் நடந்து கிரீன் ஃபீல்ட் திட்டம் நிறைவேறுகின்றது என்று வைத்துக்கொள்வோம், மனை வாங்கியவருக்கு அதனால் என்ன நன்மைகள் ஏற்படும்? க்ஷாப்பிங் மால்கள், மல்டி ப்ளக்ஸ் தியேட்டர்கள், சூப்பர் மார்கெட்டுகள், மருத்துவமனைகள், கல்லூரி, பள்ளிக்கூடம் இதெல்லாம் விமான நிலையம் சுற்றி வந்துவிடுமா என்றால் அதற்கு ஏதும் வாய்ப்பு இல்லை என்பது, நமது மீனம்பாக்கம் ஏர்போர்ட்டை சுற்றிப்பார்த்துவிட்டு சொல்லிவிடலாம்.

         விமான நிலைய எல்லையிலிருந்து சில கி.மீ தொலைவிலுள்ள கிராமங்களில் அதிகபட்சம் இரண்டு மாடிதான் கட்ட அனுமதிக்கப்படும். மேலும், விமானத்தின் இரைச்சல் பெரும் இடைஞ்சலாக இருக்கும். அந்த வகையில், விமான நிலையம் அருகே என்கிற கவர்ச்சிகரமான விளம்பரத்தை நம்பி மனை அல்லது வீடு வாங்குவது புத்திசாலிதித்தனமான முடிவாக இருக்காது. தவறான வதந்திகளைப் பரப்பி, பெருவாரியான பொதுமக்களை ஏமாற்றி பொய்யான செய்திகளை சொல்லி பணம் பறிக்கும் ஒரு சில கட்டுமான நிறுவனங்களும், ரியல் எஸ்டேட் நிறுவனங்களும் கிரீன் ஃபீல்ட் விமான நிலையம் பற்றிய உண்மைச் செய்திகளை வெளிக் கொண்டுவர முயற்சி செய்ய வேண்டும்.

        மேலும், ஸ்ரீபெரும்புதூரில் குறிப்பிட்ட இடத்தில் கிரீன்ஃபீல்ட் விமான நிலையம் வந்தாலும், வராமல் போனாலும் அதைப்பற்றிய அறிவிப்பினை வெளியிடும் பொறுப்பு தமிழக அரசுக்கும் மற்றும் உள்ளாட்சி அமைப்புகளுக்கும் உண்டு.

           அதுவரை ரியல் எஸ்டேட் புரோக்கர்களின் கொடிதான் பறக்கும்.

கட்டிட பொருட்களை பாதுகாக்க டிப்ஸ்கள் !


சொந்தமாக வீடு கட்டுவோர்களுக்கும் சரி, கட்டுநர்களுக்கும், கான்ட்ராக்டர்களுக்கும் சரி, காஸ்ட்லியான விஷயம் என்பது நிலத்திற்கு அடுத்தபடியாக, கட்டுமானப் பொருட்களைத்தான் குறிப்பிட முடியும்.

தேவைக்கேற்ப கொள்முதல் செய்வது, சரக்கிருப்பை வைத்துக் கொள்வது தொடர்பான முக்கிய டிப்ஸ்களை இங்கு காண்போம்.

          இவை ஸ்டோர் கீப்பர்களுக்கும், பர்ச்சேஸ் மேனேஜர்களுக்கும் பயன்படக்கூடியது.

1. கிடங்கில் சரக்கிருப்பு வைத்துக் கொள்வது என்பது மட்டும் மெட்டீரியல் மேனேஜ்மென்ட் ஆகிவிடாது. தேவைக்கு மிகுதியான இருப்பும் கூடாது, பற்றாக்குறையும் ஏற்படக்கூடாது என்கிற இரு புள்ளிகளுக்கு இடையே பயணிப்பது என்பதுதான் உண்மையான மெட்டீரியல் மேனேஜ்மென்ட்.

2. தகுந்த நபர் துணை கொண்டு, ஒரு கட்டுமானத்திற்குத் தேவையான மொத்த கட்டுமான பொருட்களையோ அல்லது குறிப்பிட்ட காலத்திற்குத் தேவையான கட்டுமான பொருட்களையோ மிகத் துல்லியமாகக் கணக்கிட்டு, முன்கூட்டியே வாங்கி பாதுகாப்பான முறையில் வைத்திடல் வேண்டும்.

3. அதிகம் கிடைக்காத அல்லது கிடைப்பதற்கு அரிய பிராண்டின் பொருட்களை முன்கூட்டியே தேவையான அளவில் வாங்கி வைத்திடல் வேண்டும்.

4. நமது தேவையை அறிந்து, அதற்கேற்ப உடனே மெட்டீரியலை சப்ளை செய்யும் டீலர்களுடன் பல தொடர்புகளை ஏற்படுத்திக் கொள்ள வேண்டும்.

5. ஒரு குறிப்பிட்ட பிராண்டின் பொருளை வாங்குவதற்கு முன் அதன் நிறை குறைகளை ஆராய வேண்டும். அதன் போட்டிப் பொருளோடு ஒப்பிட வேண்டும்.

6. சரக்கு என்பதின் எதிர் காரணி விலை ஆகும். எனவே, சரக்கினை வாங்குவதற்கு முன்பு அதன் விலை பற்றி பல தடவை யோசித்திடல் வேண்டும். இவற்றைப் பற்றிய சரியான கணக்கிடல் இருந்தால் மட்டுமே நம்மால் முழுக் கட்டுமானத்தையும் சிரமமின்றி முடிக்க இயலும்.

7. தேவை ஏற்படுகிற போது மட்டுமே சரக்கினை வாங்குவது அனைவராலும் ஏற்றுக் கொள்ளப்பட்ட முறையாகும். நம்முடைய தவறான யூகங்களின் காரணமாக, பொருளை வாங்கி குவித்து வைப்பது ஒரு வித மறைமுக வட்டியில்லாத முதலீடு ஆகும். இது நமக்கு நஷ்டத்தினை ஏற்படுத்தும்.

8. நமக்கு 45 முதல் 90 நாட்கள் கடனில் தருவதாக கடைக்காரர் அல்லது டீலர்கள் சொல்லலாம். அப்போது, அவர்கள் மொத்தத் தொகைக்கு வட்டி வசூலிக்கிறார்களா? என்பதை நன்கு விசாரியுங்கள்.

9. ரொக்கப்பணம் கொடுத்து வாங்குவதற்கும், கடனில் வாங்குவதற்கும் விலை வித்தியாசம் இருக்கிறதா? என்பதை விசாரியுங்கள்.அந்த வேறுபாடு அதிகமாக இருந்தால், நீங்கள் ரொக்கப்பணம் கொடுத்தே பொருட்களை வாங்க முயற்சிக்கலாம். ஆனால், அதற்கு முன்பாக வட்டிக் கணக்கீடு அவசியம்.

10. சிக்கனப்படுத்துகிறேன் என்பதற்காக, மட்டமானப்பொருட்களைப் பயன்படுத்தாதீர்கள். பெரும்பாலும் வீடு கட்டுபவர்கள் தங்கள் வீடுகளுக்கு நல்ல தரமான டைல்களும், கேபிள்களும் வாங்குவார்கள். வாடகைக்கு விடும் வீடுகளுக்கு மட்டமான நான் பிராண்டட் டைல்ஸ் பெயிண்ட் மற்றும் கேபிள்களைப் போட்டு விடுவார்கள். அவர்கள் மூன்று ஆண்டு காலம் இருந்துவிட்டுச் சென்ற பிறகு, நாம் போய் பார்த்தோமெனில் வீடு அலங்கோலமாக இருக்கும். திரும்பவும் நாம் அவற்றைச் சரி செய்ய செலவழிக்க வேண்டும்.

11. கட்டுமானப் பணிகளுக்குத் தேவையான பொருட்கள், அவை பணிகளுக்கு எடுத்துக் கொள்ளப்படும் வரை மிக ஜாக்கிரதையாக பாதுகாத்து வைக்க வேண்டும். அதிக சூரிய வெளிச்சத்தில் கட்டுமான ரசாயனங்களை வைப்பது, எளிதில் தீப்பற்றக் கூடிய பொருட்களுக்கு அருகே வெல்டிங் மற்றும் எலெக்ட்ரிகல் வேலைகளை அனுமதிப்பது, தகுந்த கூரைகள் இன்றி கட்டுமானப் பொருட்களை அடுக்கி வைத்திருப்பது, மழையில் அவற்றை நனைய வைப்பது, குறைந்தபட்சம் தார்ப்பாலின் போன்ற கூரைகளால் கட்டுமானப் பொருட்களை மூடாமல் வைத்திருப்பது, தகுந்த பாதுகாப்பு இன்றி கிடங்கினை அமைப்பது, இவை அனைத்துமே தவறானவையாகும், தவிர்க்கப்பட வேண்டியதுமாகும்.

12. நல்ல ஸ்டோர்கீப்பர் என்பவர் அமைந்து விட்டால், வீடு கட்டுவோருக்கும் சரி, பர்ச்சேஸ் மேனேஜருக்கும் சரி, சரக்கிருப்பில் எந்தப் பிரச்சனையும் இருக்காது. ஒவ்வொரு நாளும் பணி இறுதியில் அப்போதைய சரக்கிருப்பு நிலவரத்தை உயர் அதிகாரியிடம் தெரிவித்திட வேண்டும். மேலும், நாளைய பணித்திட்டம் என்ன? அதற்கேற்ற பொருட்கள் உள்ளனவா? என்பதைப் பற்றியும் தகவல் தெரிவிக்க வேண்டும். பெரும்பாலும் சொந்தமாக வீடு கட்டுபவர்களுக்கு அவர்களேதான் ஸ்டோர்கீப்பராகவும் செயல்பட வேண்டியிருக்கிறது. எனவே, மெட்டீரியல் ஸ்டாக்கின் மீது முழு கவனமும் இருக்க வேண்டும்.

13. மெட்டீரியலைப் பாதுகாத்தல் போலவே, மெட்டீரியலைச் சிக்கனமாகச் செலவழித்தலும் இன்றியமையாதது. எத்தனை சதுர அடிக்கு எவ்வளவு பொருட்கள் தேவைப்படுகின்றன என்பதை பொறியாளர் போன்ற நிபுணர்களுடன் கணக்கிட்டு, அவை சரியான அளவில், சரியான முறையில் செலவிடப்படுகின்றனவா? என்பதைக் கண்காணிக்க வேண்டும்.

14. நிறுவனங்கள், கான்ட்ராக்டர்கள் தங்கள் வசதிக்கேற்ப கிடங்குகளை அமைத்து அதில் சிமெண்ட் போன்ற கட்டுமான பொருட்களை பாதுகாப்பர். ஆனால், தமக்கென சொந்த வீடு கட்டும் பொதுமக்கள் சாதாரண ஓலை குடிசைகளையோ, தார்பாலின் டென்ட் அமைத்தோ சிமெண்ட் மூட்டைகளை அடுக்குவர். அதிக ஈரம், காற்று படக்கூடிய வகையில் சிமெண்ட் மூட்டைகளுக்கு கொட்டகைகள் அமைக்கக் கூடாது. அதேபோன்று வெயில் காலம்தானே என்று இரவு திறந்த வெளியில் சிமெண்ட் மூட்டைகளை வைத்துவிடவும் கூடாது.

15. தொழிலாளர்கள் பணிபுரியும்போது அவர்கள் செய்யும் பணி முறையினைக் கண்காணிக்க வேண்டும். பொருட்களை வேண்டுமென்றே வீண் செய்கிறார்களா? அல்லது திறமைக் குறைவால் வீண் செய்யப்படுகிறதா? அல்லது தவறான கட்டுமான முறையால் மெட்டீரியல் வீணாகிறதா? என்பதை நன்கு ஆராய்ந்து குறைகளைக் களைய வேண்டும்.

16. ஒரு கட்டுமானத்தைப் பொறுத்தவரை கட்டுமானப் பொருட்கள் குறைந்தபட்சம் 5 சதவீதமாவது வீணாவதற்கு அவற்றைத் தவறாகக் கையாளுதலே காரணம் என ஓர் அறிக்கை கூறுகிறது. எனவே, தொழிலாளர்களிடம் கலந்து பேசி, அவர்களை அலட்சியமின்றி பணிபுரிய ஊக்குவிக்க வேண்டும்.அடிக்கடி பாராட்ட வேண்டும்.

17. வீடுகளைக் கட்டும் தனி நபரை விட, சரக்கிருப்பில் தொழில்முறை கட்டுநர்கள் அதிக கவனம் செலுத்த வேண்டியது அவசியம். பொருள் உள்வரவு, வெளிச் செல்லல் ஆகியவற்றை கண்காணித்தல், ஏடுகளை பராமரித்தல், உலகப் புகழ்பெற்ற முறையான ஃபிஃபோ (FIFO) முறையை கடைபிடித்தல் (அதாவது முதலில் வருவதைFirst In, முதலில் பட்டுவாடா செய்தல் First Out) என பல்வேறு அம்சங்கள் சரக்கிருப்பில் உள்ளன. அவற்றின்படி கட்டுநர்களும், கான்ட்ராக்டர்களும் நடந்து கொள்ள வேண்டும்.

பிவிசி ஸ்கஃப் ஃபோல்டிங் !


கான்கிரீட்டைத் தாங்கிப் பிடிப்பதற்கான (ஃபார்ம் ஒர்க்) பலகை அடைப்பு வேலைகளுக்குப் பலவிதமான பொருட்களைப் பயன்படுத்துகிறார்கள். மரப் பலகைதான் இவற்றுள் முதலிடம் பெறுகிறது. அப்புறம் அலுமினிய, இரும்புத் தகடுகளைச் சொல்லலாம். ஃபைபர் கிளாஸ் என்று சொல்லப்படும் கண்ணாடி நார் இழைப் பலகைகளையும் இந்த வேலைகளுக்குப் பயன்படுத்துகிறார்கள்.
       
          இன்னும் சொல்லப் போனால் பிளைவுட்டைக் கூட எடுத்துக் கொள்ளலாம்.இவை எல்லாவற்றையும் விட பிளாஸ்டிக் படுபொருத்தமானதாக இருக்கும். ஏன்?புறப்பரப்பு விசை என்று கேள்விப்பட்டிருப்பீர்கள். இயற்பியல் படித்தவர்களுக்குத் தெரிந்திருக்கும். ஸர்ஃபேஸ் டென்கஷன் என்று குறிப்பிடுவார்கள்.

  நீர்க் குமிழி துளி ஏன் உருண்டையான வடிவத்தை எட்டுகிறது என்பதற்கு இந்த விசையே காரணம் என்பார்கள். கான்கிரீட் இடும் வேலையில் இந்தப் புறப்பரப்பு விசையைக் கொஞ்சம் புரிந்து கொள்ள வேண்டும். கான்கிரீட் ஒட்டும் தன்மை கொண்டது. அதை எந்தப் பரப்பின் மீது போட்டாலும் ஒட்டிக் கொள்ளும். கான்கிரீட் இறுகிப் பதமாகும் வரை அதன் கனத்தைத் தாங்கிப் பிடிப்பதற்காகக் கீழ்த்தளம் ஒன்றை அமைக்க வேண்டும்.

இப்படி அமைக்கப்படும் தளம் கான்கிரீட்டுடன் ஒட்டாத தன்மை கொண்டதாக இருக்க வேண்டும். இங்குதான் புறப்பரப்பு விசை முக்கிய அம்சமாகக் கருதப்படுகிறது. பிளாஸ்டிக் பலகைகளைக் கொண்டு அடைப்பு வேலைகளைச் செய்தீர்கள் என்றால் பிளாஸ்டிக்கிற்கு இருக்கக் கூடிய குறைந்த அளவு புறப்பரப்பு விசை உங்கள் உதவிக்கு வரும்.பிளாஸ்டிக்கின் மேல் இடப்படும் கான்கிரீட் அந்தப் பரப்பின் மேல் ஒட்டிக்கொள்ளாது. எனவே, கான்கிரீட் இறுகிய பிறகு பலகைகளை வெகு எளிதில் பிரித்து எடுத்துவிடலாம். மீண்டும், மீண்டும் பயன்படுத்துவதில் சிக்கல் இருக்காது.
ஒட்டிக் கொண்டிருக்கும் பிசிறுகளை நீக்குவதே பெரிய தொல்லையாக இருக்கிறது என்று அலுத்துக் கொள்ளவும் அவசியம் இல்லை.

பலகைகளை அடைத்து முடித்ததும் அந்தப் பரப்பின் மேல் சென்ட்ரிங் ஆயில் என்ற எண்ணெயைத் தடவுவது வழக்கம். இப்படி எண்ணெயைத் தடவி வைத்தால்தான் கான்கிரீட்டானது பலகைகளின் மேல் ஒட்டிப்பிடித்துக் கொள்ளாமல் இருக்கும். பலகைகளைக் கழற்றி எடுப்பது சுலபமாகும்.பிளாஸ்டிக் ஃபார்ம் ஒர்க்குகளைப் பயன்படுத்தி வேலைகளைச் செய்தீர்கள் என்றால் இந்த சென்ட்ரிங் ஆயிலைப் பயன்படுத்துவதற்கும் வேலை இல்லாமல் போய்விடும்.

இணைப்புகள் நெருக்கமாக, உறுதியாக அமைவதால் கசிவு என்ற பேச்சுக்கே இடமில்லை. எனவே கான்கிரீட்டில் இருந்து சிமென்ட் பால் வழியாது. பலகைகளைக் கழற்றி எடுத்ததும் கான்கிரீட் பரப்பு அழகான தோற்றத்தைத் தரும்.பிளாஸ்டிக் ஃபார்ம் ஒர்க்குகளைப் பயன்படுத்திக் கான்கிரீட் போடப்பட்ட இடங்களில் பூச்சு வேலைக்கும் அவசியம் இல்லை.

        அப்படியே பட்டி பார்த்து பெயின்ட் அடித்துவிட்டுப் போய்விடலாம். எவ்வளவு வேலை மிச்சம்? மீண்டும் மீண்டும் பயன்படுத்த முடியும் என்பதால் ஒரு முறை இதில் முதலீடு செய்தால் நீண்ட காலத்திற்கு கவலை இல்லாமல் இருக்கலாம். ஆயுட்காலம் அதிகம் என்பதால் செலவுச் சிக்கனம் அதிகம் கிடைக்கும். நீங்கள் கட்டுமானத் தேவைகளுக்கான பொருட்களை வாடகைக்கு விடுபவரா? குறிப்பாக சென்ட்ரிங் பலகைகளை? ஆம் எனில் நீங்கள் பிளாஸ்டிக் ஃபார்ம் ஒர்க்குகளுக்கு மாறிவிட வேண்டும்.

           ஏன் என்கிறீர்களா? பிளாஸ்டிக் ஃபார்ம் ஒர்க்குகளை மீண்டும் மீண்டும் பயன்படுத்தலாம். இவற்றைத் தயாரிப்பவர்களே கூட 80 முதல் 100 தடவைகள் வரைதான் பயன்படுத்த முடியும் என்று உறுதி கூறுவார்கள். ஆனால், நீங்கள் கொஞ்சம் பொறுப்பாக அவ்வப்போது சுத்தம் செய்து வைத்துக் கொண்டீர்கள் என்றால் 130 தடவைகள் வரை பயன்படுத்த முடியும். சில இடங்களில் இதற்கு மேலும் கூடப் பயன்படுத்துவதைக் காண முடியும். உங்களுக்குத் தலைவலி தரக் கூடிய இன்னொரு பிரச்சனை, பலகைகளை அடுக்கி வைப்பதற்கான இட வசதி. ஏகப்பட்ட இடம் தேவைப்படும். வாடகை, போக்குவரத்துச் செலவு வகையிலும் அதிகமாக ஆகும். பிளாஸ்டிக் ஃபார்ம் ஒர்க்குகளை அடுக்கடுக்காக அடுக்கி வைக்கலாம்.

குறைந்த இடம் போதும். ஆகவே, மற்ற செலவுகள் குறையும். இருப்பு வைக்கும் இடத்தில் தரையில் நீர்க்கசிவு இருக்கிறதா? இரும்புத் தகடு என்றால் துருப்பிடித்து வீணாகப் போய்விடும். பிளாஸ்டிக் ஃபார்ம் ஒர்க்குகளில் அந்தக் கவலை இல்லை. திறந்த வெளியில் போட்டு வைத்திருந்தாலும் கூட நிம்மதியாக இருக்கலாம்.

         வெயில், மழையால் பாதிப்பு ஏற்படாது. சூரியனிடமிருந்து வரும் புற ஊதாக் கதிர்களாலும் எந்த பாதிப்பும் ஏற்படாது. வேலை நடந்தபின் சுத்தம் செய்ய வேண்டுமா? கொஞ்சம் வேகமாகத் தண்ணீரைப் பீய்ச்சி அடித்தால் போதும் . சுத்தமாகிவிடும்.வேறென்ன வேண்டும்?

             உடனே தாவுங்கள் பிளாஸ்டிக் ஸ்கஃப் ஃபோல்டிங்கிற்கு!

பணியிட பாதுகாப்பிற்கு பயனுள்ள டிப்ஸ்கள் !


பாதுகாப்பு விதிகள் தோற்கும் இடங்களில் விபத்துக்கள் வெற்றி பெறுகின்றன என்பார்கள். கட்டுமானத் தொழிலைப் பொறுத்தவரை பாதுகாப்பு விதிகள்தான் நம்முடைய காக்கும் கடவுள். அவற்றை மதிக்காத போது நாமே வலிய விபத்திற்கு விருந்து வைக்கிறோம் என்று பொருள்.

இங்கே சொல்லப்பட்டிருக்கும் டிப்ஸ்கள் தொழில்முறைக் கட்டுநர்களுக்கும், தொழிலாளர்களுக்கும் மட்டுமன்றி, பொதுமக்களுக்கும் ஏற்புடையவை. பாதுகாப்பில்லாத சூழ்நிலைகள் என்பவை யாவை?

1. நெரிசல் நிறைந்த பணிசெய்யும் இடங்கள்.
2. சரியான காற்றோட்டமோ அல்லது வெளிச்சமோ இல்லாமை.
3. சகிக்கமுடியாத அளவிற்கு சத்தம், ஈரத்தன்மை, குலுக்கல்கள் போன்றவை. 4. தீயணைப்பான்கள் இல்லாமலோ அல்லது செயல் இழந்த நிலையிலோ உள்ள இடங்கள்.
5. மின்சாரம் தொட்டால் பாயக்கூடிய நிலையில் மின் கம்பிகள்.
6. பாதுகாப்புத் தடுப்பில்லாத சுழலும் இயந்திரங்கள்.
7. மறிக்கப்படாத உள் திறந்த வெளிகள்.
8. பழுதடைந்த இயந்திரங்கள் மற்றும் தளவாடங்கள்.

இயந்திரங்கள் சம்பந்தமான விபத்துக்களைத் தவிர்க்க கீழ்க்கண்டவற்றை சரிபார்த்துக் கொள்ள வேண்டும்

1.கிரேன் இயக்குபவர் தகுந்த உரிமம் பெற்றவராகவும், குறிப்பிட்டவேலைக்கு உகந்தவராகவும் இருக்கின்றாரா?
2. கிரேனின் ஆர்.சி. புத்தகம் மற்றும் பாதுகாப்பீடு நடைமுறையில் உள்ளதா?
3. சரியான முறையில் பராமரிக்கப்படுகின்றதா?
4. கிரேன் நகரும் தரை தளம் பலமாக உள்ளதா?
5. நகரும் தளப் பரப்பு வேலைக்குப் போதுமானதாக உள்ளதா?
6.நகரும் தரைப் பரப்பிற்கு மேல் மின் கம்பிகள் சென்று கொண்டிருந்தால் பாதுகாப்பு ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளதா? உரியவர்களிடம் அனுமதி பெறப்பட்டுள்ளதா?
7.தயாரிப்பாளரின் பரிந்துரைப்படி இந்த கிரேன் மேற்படி பணிக்கு உகந்ததா? தேவைப்படும் நெம்புகோல் நீளத்திற்கு ஏற்ப பளுவைத் தூக்கவல்லதா? 8.கிரேன் இயக்குநருக்குப் பணி பற்றிய முழுவிபரம் தெரிவிக்கப்பட்டு தயார் நிலையில் உள்ளாரா?
9.பணியில் ஈடுபட்டுள்ளோருக்கு கிரேன் நகரும்விதம் மற்றும் பணிமுறைகள் தெரியுமா? பாதுகாப்பு நடவடிக்கைகள் விளக்கப்பட்டுள்ளதா?
10.பணி நடைபெறும் இடத்தில் மூன்றாம் மனிதர்கள் நுழையா வண்ணம் அறிவிப்புகள் உள்ளதா? இவற்றையெல்லாம் நாம்
பரிசோதித்துக் கொள்வது நல்லது.

பொதுவாக, கட்டுமான புராஜெக்ட்களில் நாம் அன்றாடம் பார்க்கக்கூடிய சில பாதுகாப்பற்ற நடவடிக்கைகள் :
1. இயந்திரம் ஓடிக்கொண்டிருக்கும் போது அதில் ஏதாவது பழுதினைப் பார்த்தல்.
2. மின்சாரம் பாயும் நிலையில் இருக்கும்போதே மின் பணிகளைச் செய்தல்.
3. இயந்திரத்தின் பாதுகாப்பிற்காக உள்ள இனங்களை இடையூறாக இருக்கிறது என கழட்டி வைத்துவிடுவது.
4. தனி மனிதர் பாதுகாப்புச் சாதனங்களை உபயோகிக்காமல் இருப்பது.
5. பாதுகாப்புச் சாதனங்களை செயலிழக்கச் செய்து வைத்திருப்பது.
6. மின்சாதனங்கள் பொருத்தும் பிளக் பூமியுடன் தொடர்பு கம்பி இல்லாதிருப்பது.

         அடுத்ததாக, ஒரு கட்டுமான புராஜெக்டில் அடிக்கடி விபத்துக்களை ஏற்படுத்தும் முக்கிய காரணியான ஸ்கஃப் ஃபோல்டிங்கில் ஏற்படும் விபத்துக்களைத் தவிர்ப்பதற்கான பாதுகாப்பு டிப்ஸ்கள்.

1. ஸ்கஃப் ஃபோல்டிங்கின் மொத்த எடையை விட 4 மடங்கு பாரம் தாங்கும் வகையிலான ஸ்கஃப் ஃபோல்டிங் பாதுகாப்பாகவும், உறுதியாகவும் நிலை நிறுத்தப்பட வேண்டும்.
2.நிலை நிறுத்தும் இடமும் திடமானதாக இருக்க வேண்டும். பேரல்கள், பெட்டிகள், தனித்தனி செங்கற்கள் அல்லது கான்கிரீட் பிளாக்குகள் போன்றவை ஸ்கஃப் ஃபோல்டிங்குகளுக்கு ஆதாரமாக நிறுத்தப்படக் கூடாது. 3. ஸ்கஃப் ஃபோல்டிங் உற்பத்தி மற்றும் பயன்பாடு குறித்து நிபுணத்துவம் கொண்ட ஒரு மேற்பார்வையாளரின் முன்னால்தான் ஸ்கஃப் ஃபோல்டிங்கை, நிலை நிறுத்துவது, நகர்த்துவது, கழற்றி மாட்டுவது, இடமாற்றம் செய்வது போன்ற வேலைகள் மேற்கொள்ளப்பட வேண்டும்.
4. ஸ்கஃப் ஃபோல்டிங் அமைப்பில் பாதுகாப்பு கட்டமைப்பு (Safety Flatform), மேலெழும் போதும், கீழிறங்கும் போதும் இடையில் பாதுகாப்புப் பிடி மற்றும் டோ போர்டு அமைப்பும் செய்யப்பட வேண்டும்.
5. ஸ்கஃப் ஃபோல்டிங்கின் தாங்கு உபகரணங்களான பிராக்கெட், பிரேசஸ், ட்ரஸ்சஸ்-ஸ்குரூலக்ஸ் மற்றும் ஏணிகள் நல்ல நிலையில் உள்ளனவா? என்பது நிர்மாணிக்கும் முன்பு உறுதி செய்யப்பட வேண்டும்.
6. கட்டிடப் பாதுகாப்பு பொறியாளர், கூறப்பட்ட அம்சங்கள் அனைத்தையும் கண்காணித்து உரிய உயரதிகாரிகளிடம் தெரிவிக்க வேண்டும்.
7. தொங்கு நிலையில் உள்ள ஸ்கஃப் ஃபோல்டிங்கின் பிடிப்பு நிலையினை கட்டுமானப் பணியின் ஒவ்வொரு ஷிஃப்டுக்கு முன்பும் உரிய அதிகாரி ஒருவரால் கண்காணிக்கப்பட வேண்டும்.
8. நார்கயிறு அல்லது சிந்தெடிக் கயிறு மூலம் தொங்கு ஸ்கஃப் ஃபோல்டிங் செயல்படுத்தப்படும் போது,சுற்றியுள்ள பகுதியில் இருந்து அதிக உஷ்ணம் வெளியேற்றம் இல்லாமல் பார்த்துக் கொள்ள வேண்டும்.
9. கிணற்று படிகள் மற்றும் ஏணிகள் ஆகியனவற்றைப் பயன்படுத்தி ஸ்கஃப் ஃபோல்டிங் உருவாக்கப்படக் கூடாது.
10. மின் இணைப்பு உள்ள இடத்திலிருந்து 10 அடி தூரத்தில் மட்டுமே ஸ்கஃப் ஃபோல்டிங் அமைக்கப்பட வேண்டும். சில கட்டுமான வேலைகளில், மின் இணைப்புகளைக் கவனமாக செய்வதில்லை.
அதிலும் தற்காலிக வேலைகள் என்றால், அதைப் பொருட்படுத்துவதே கிடையாது. இதனால், மின்கசிவு ஏற்பட்டு, மின் விபத்து நடப்பதும் அதிகரிக்கிறது. மின்தாக்குதல் ஏற்பட்டால், அதற்கு உண்டான முதலுதவி சிகிச்சைப் பற்றிஅனைத்துத் தொழிலாளர்களுக்கும்
பயிற்சி அளிக்க வேண்டும்.
      மண் சரிவின்போது ஏற்படும் விபத்துக்களை தவிர்க்க இரண்டு மீட்டருக்கு மேற்பட்ட பள்ளங்களை தோண்டும்போது மண் சரியாமல் இருக்க, உரிய தடுப்புப் பலகையை பொருத்தி விட வேண்டும்.