நாங்குநேரியில் நான் அறிந்த வேட்பாளர்

நாங்குநேரியில் நான் அறிந்த வேட்பாளர்

2009 ஆண்டு ஜனவரி மாதம் ரூபி. பில்டர்ஸ் உரிமையாளர் திரு. ரூபி. ஆர். மனோகரன் அவர்களை பில்டர்ஸ் லைன் மாத இதழின் நேர்காணலுக்காக முதன்முறையாக சந்தித்தேன். அன்று தொடங்கிய நட்பு ( நட்பு என்பது பெரிய வார்த்தை) இன்று அவர் நாங்குநேரி தொகுதிக்கு காங்கிரஸின் சட்டமன்ற வேட்பாளர் அந்தஸ்து பெற்றிருக்கும் வரை தொடர்கிறது.
அவர் 'பிரதர்' என்று தான் அழைப்பார். யாரையும் அவர் அப்படித்தான் அழைப்பார்.
பெரிய மனிதர்களை சமூக சேவையாளர், ஏழைப் பங்காளர் என்றெல்லாம் சிலர் அழைப்பார்கள். சம்பிரதாயமான வார்த்தை அது. ஆனால் ரூபி. மனோகரன் உண்மையிலேயே மாபெரும் சமூக சேவகர் தான். அதற்கென தன் வருமானத்தில் ஒரு குறிப்பிட்ட பகுதியை ஒதுக்கி வைத்து விடுவார்.
2015 இயற்கை பேரிடர் பெருவெள்ளத்தில் இவர் தாம்பரம், சேலையூர் உள்ளிட்ட தென் சென்னை பகுதிகளில் ஆற்றிய பங்கு அளவிடமுடியாதது. ஆயினும் அவரால் சுதந்திரமாக பொதுப்பணி செய்ய விடாமல் தடுக்கப்பட்டார். அதன் பின்தான் அவர் தீவிர அரசியலுக்குள் நுழைந்தார் ( அதற்கு முன்பு அவர் 20 ஆண்டுகளாக காங்கிரஸில் பொது உறுப்பினர்தான்..)
ஆண்டுக்கு 100 கோடி வரை கட்டுமானத் தொழிலில் வர்த்தகம் செய்து கொண்டு வெற்றிகரமான கட்டுனராக வலம் வருகிறீர்கள். அதை விடுத்து, அரசியலுக்குள் நுழைந்து விட்டீர்களே? என்றால்,' இங்கே அரசியல் இல்லாமல் எதுவும் இல்லை, நல்லவனாக நாலு பேருக்கு உதவ வேண்டும் என்றால் கூட, அரசியல் நிழல் படாமல் இங்கே எதுவும் செய்ய முடியாது' என வேதனையுடன் தெரிவித்தவர் இவர்.
அரசியல் சரி .ஆனால், காங்கிரஸ் ஏன்? எனக் கேட்டால், காமராஜர் தான் காரணம், அவர் இன்றேல் அவர் தந்த சீருடை, கல்வி எனக்கு கிடைத்திரா விட்டால் நான் ஏது? இது காமராஜிக்கு செய்யும் கைம்மாறு..அவ்வளவு தான்' என்கிறார்.
ஒரு நாளைக்கு குறைந்தது பத்து பேராவது அவரது சேலையூர் அலுவலகத்தில் கல்வி நிதி, திருமண உதவி கேட்டு வந்து விடுவார்கள். 'இவ்வளவு செலவு செய்கிறீர்களே?' எனக் கேட்டால், 'நாம கொடுத்தால் தான் நமக்கு கிடைக்கும் என்பார்.. இறைக்கும் கேணியில் தானே தண்ணீர் ஊறும்; என்பார்..
நாங்குனேரியில் களம் இறங்கும் அவர், ஒருவேளை ஜெயித்தால், 'ஆளும் கட்சியை மீறீ நலத் திட்டங்களை அந்த தொகுதி மக்களுக்கு செய்து விட முடியுமா?' எனக் கேட்டால், 'முடிந்தவரை நிதி கிடைக்க போராடுவேன். கிடைக்காது போனால், என் சொந்தப்பணத்தைக் கொண்டு நலத்திட்டங்களை செய்து விடுவேன். அது எத்தனை கோடியானாலும் சரி' என கூலாகச் சொல்லி நம்மை திகைக்க வைக்கிறார்.
'நான் எம்.எல்.ஏ வானால் எனக்குக் கிடைக்கும் சம்பளப் பணத்தை இல்லத்திற்கு ஒருபோதும் கொண்டு செல்ல மாட்டேன். ஏழைக்குழந்தைகளின் படிப்புக்காகத்தான் அதை செலவிடுவேன்' என்கிறார்.
நான் வெற்றிபெற்றால், நான் சம்பளமாகப் பெறும் பணத்தை, நாங்குநேரி தொகுதிக்கு உட்பட்ட பள்ளிக் குழந்தைகளின் படிப்புச் செலவுக்கு கொடுத்துவிடுவேன்.
என்னைப் போலவே மற்ற சட்ட மன்ற உறுப்பினர்களும் தங்கள் சம்பளப்பணத்தை தங்கள் தொகுதி வாழ் ஏழை மாணவர், மாணவிகளுக்கு அவர்தம் கல்விச்செலவுக்கு வழங்க ஆரம்பித்தால் அது ஒரு இனிய உதயமாக இருக்கும். அதுதான் உண்மையில் காமராஜரின் ஆட்சிக்கு அடிகோலும் வழியாக இருக்கும்.'' என சொல்லும் அவர்,
நான் எம்.எல்.ஏ ஆனால் சட்டசபையில் உட்கார்ந்து என்நேரமும் மேசையை தட்டிக் கொண்டிருக்க மாட்டேன். எனது பெரும்பணி இங்கே
( நாங்குனேரியில்) தான் இருக்கும்.
ஏனென்றால் நான் இந்த ஒரு தேர்தலில் மட்டும் வெற்றி பெற்று 'முன்னாள் எம்.எல்.ஏ' என்னும் பெயரைப் போட்டுக் கொள்வதற்காக போட்டியிடவில்லை. என்றென்றும் இந்த நாங்கு நேரி தொகுதியில் நிரந்தர எம் எல் ஏவாக வீற்றிருப்பதற்கும்., நாங்குனேரி மக்களில் ஒருவராகவும் வாழ்வதற்கு, சேவை புரிவதற்கு ஆசைப்படுகிறேன்.
அரசியலில் சேவை செய்ய என வந்து விட்டு பின் அரசியலை மையமாக வைத்து தங்கள் தனிப்பட்ட பொருளாதாரத்தை மேம்படைய வைத்துக் கொள்ளும் எத்தனையோ பேரை இந்த தமிழ் நாட்டுமக்கள் பார்த்திருக்கிறார்கள். ஆனால், அந்தப் பட்டியலில் இந்த நாங்குனேரி வாக்காள பெருமக்கள் என்னை வைக்க மாட்டார்கள் என நான் உறுதியாக நம்புகிறேன்.
ஏனென்றால் இளமையிலே வறுமையைச் சந்தித்து, பல இன்னல்களுற்று கடின உழைப்பின் மூலமாக, நேர்மையான வழியில் சட்ட திட்டங்களுக்குட்பட்டு தொழிலதிபராகி அந்த வருமானத்தையும் மக்களுக்காக சேவையும், நலத்திட்டங்களும் புரிந்து வருபவன் நான். எனது சேவையின் அளவை பெரிது படுத்தத் தான் நான் சட்டமன்ற இடைத் தேர்தலில் களமிறங்க்குகிறேனே தவிர, எனது பொருளாதரத்தின் அளவை பெரிதாக இங்கு நான் போட்டியிடவில்லை என்பதை நாங்குனேரி மக்கள் நன்கறிவார்கள்.'' என்று என்னிடம் போனில் உரையாடினார்.
ரூபி மனோகரன் சில புத்தகங்களையும் எழுதியுள்ளார். 'தவிர்க்க வேண்டிய சக்தி பி.ஜேபி'. என்னும் அவரது நூல் பல எதிர்கட்சிகளின் பேச்சாளர்களுக்கு பெரிய குறிப்புதவி புத்தகமாகும். இது தவிர அவர்' இப்படியும் ஒரு தலைவர்- காமரஜர் 'என்னும் நூலையும் எழுதி உள்ளார். 'நீங்களும் பில்டர் ஆகலாம்' என்னும் அவரது துறைச் சார்ந்த நூல் கட்டுமான பொறியாளர்கள், கட்டுனர்களுக்கு கிட்டத்தட்ட வேதமாகவே மாறி விட்டது. ( இதை கட்டுமானத் துறையினர் அறிவார்கள்)
குமரி மாவட்டத்தில் பிறந்து இந்திய ராணுவத்தில் பணியாற்றி தன் 34 வயதில் சென்னைக்கு திரும்பினார். தனது தாய் மாமாவுடன் சேர்ந்து சிலசில கட்டட வேலைகளை செய்து வந்தார். பின் தானாகவே பொறியாளர்களை வைத்து வீடு கட்டி விற்க ஆரம்பித்தார். 1996 தொடங்கிய இந்த பயணம் இப்போது 4500 வீடுகளைத் தாண்டி
போய் கொண்டிருக்கிறது. நான்கைந்து நிறுவனங்கள், 200 ஊழியர்கள் 1500 தொழிலாளர்கள் என ஆலவிருட்சமாய் அவரது நிறுவனம் இப்போது வளர்ந்து நிற்கிறது. என்றாலும் 2009- ல் நான் பார்த்த அதே அடக்கத்தோடு, பணிவோடு தான் எல்லோரையும் வரவேற்கிறார்.அணுகுகிறார்.

வறுமையின் உச்சத்தில் அவர் நெடு நாட்கள் இருந்தமையால், இப்போது பெரும் தொழிலதிபரான பின்னும் அதே எளிமையோடு நிற்கிறார்.

ரூபி மனோகரன் ஜெயித்து விடுவாரா? திமுக கூட்டணி அவருக்கு ஆதரவாக இருக்குமா? அவர் நாங்குனேரியை சேர்ந்தவர் இல்லையே? அவர் வசந்த குமாருக்கு உறவினர் தானே? அவருக்கு ஆதரவாகத்தான் இந்த பதிவா?
என்றெல்லாம் கேட்டால் என்னிடம் பதிலில்லை.
ரூபி மனோகரன் நான் அறிந்த வரை மிக நல்ல மனிதர், பாசாங்கு இல்லாதவர். பணத்தைப் பொருட்படுத்தாதவர். சட்டத்திற்கும் விதிகளுக்கும் உட்பட்டு நேர்மையாக தொழில் செய்பவர்.நாங்குனேரி மக்களுக்கு மிகச்சிறந்த தன்னலமற்ற சேவையைத் தரக் கூடியவர்
அவரது நல்ல நோக்கங்கள் நிறைவேறட்டும்.

பா. சுப்ரமண்யம்
ஆசிரியர், பில்டர்ஸ் லைன் மாத இதழ்
பேசி: 88259 91977

#ரூபிமனோகரன்#நாங்குநேரி#இடைத்தேர்தல்#காங்கிரஸ்