பிளம்பிங் டிப்ஸ் !


பிளம்பிங் தொழில் என்பது கார்பென்டிங் தொழிலைப் போல வழி வழியாக வருவதல்ல. தாமாகவே முன் நின்று கற்றுக்கொள்வது அல்லது பிளம்பர்களிடம் உதவியாளராகப் பணி புரிந்து பிளம்பிங் தொழிலைக் கற்றுக் கொள்வது, இப்படித்தான் பிளம்பர்கள் உருவாகிறார்கள்.இன்று கட்டுமானத்துறையில் அதிக அளவு கூலி வாங்கக்கூடிய இந்தத் தொழிலில் முதலீடு என்பது அதிகமில்லை.

ஒரு பைப்ரின்ச்சும், ஸ்பேனரும், பிளம்பிங் தொழில் பற்றிய அறிவும் இருந்தால், மாதம் ரூ.20000/ க்குக் குறையாமல் சம்பாதிக்கக்கூடிய வாய்ப்பு இதில் உள்ளது.

நேர்மையுடனும், திறமையுடனும் பணி புரிந்தால், இது என்றைக்கும் லாபத்தைத் தரக்கூடிய பணியாகும். இந்தத் தொழிலில் நன்கு சிறக்க இதோ டிப்ஸ்கள்:

 1. எந்த வேலைக்கும் அநியாயக் கூலி வாங்காதீர்கள். வாடிக்கையாளரின் அவசரத்தைப் புரிந்துகொண்டு அதிக கூலியைச் சொல்லாதீர்கள். நமது தொழிலின் ஆயுட்காலம் ஒரு நாள், இரண்டு நாள் அல்ல. வாழ்வாங்கு வாழ வேண்டுமெனில், நாம் பெருந்தன்மையாக நடந்து கொள்ள வேண்டும். உண்மையில் சொல்லப் போனால் மிகச் சிறிய வேலைகளுக்கு பணம் வாங்க மறுத்து விடுங்கள். இதன் பலனாக, அந்த வாடிக்கையாளர் வாயிலாக பெரிய வேலைகள் கிடைக்கும்.

 2. ‘நான் வந்து விட்டாலே ரூ.300/ கொடுத்துவிட வேண்டும்’ என்றெல்லாம் போனிலேயே மிரட்டாதீர்கள். வருகை தந்தாலே பணம் பெற்றுவிட வேண்டும் என சொல்வதற்கு நாம் ஒன்றும் திறப்பு விழாவிற்குச் செல்லும் சினிமா நடிகை இல்லையே! அழைப்பு வந்தால் செல்லுங்கள். என்ன செலவாகும் என்பதையும், உங்கள் கூலி என்ன என்பதையும் நிதானமாகக் கணக்கிட்டுச் சொல்லுங்கள். 

3. கூலி விஷயத்தில் ஒருபோதும் பேரம் பேசாதீர்கள். ரூ.800/ சொல்லி விட்டு, ரூ.500/ க்கு ஓகே சொல்லாதீர்கள். முதலிலேயே ரூ.500/ சொல்லிவிடுங்கள். அதிலேயே உறுதியாக இருங்கள். இந்த உறுதி உங்களது வேலையின் தரத்தைப் பறை சாற்றுவதாக அமையும்.

 4. எந்த வேலைக்கு அழைக்கிறார்களோ, அந்த வேலைக்கான உபகரணங்களை மட்டும் எடுத்துச் செல்லாதீர்கள். அடுத்து, அதே வாடிக்கையாளர் இன்னொரு வேலை சொன்னாலோ அல்லது வேறு வேலை புதிதாக வந்தாலோ, நீங்கள் தயாராக இருக்க வேண்டும்.

 5. பிளம்பர்களுக்கென்றே இருக்கும் அழுக்கான பேண்ட், பனியன் அணிந்து கொண்டு செல்லாதீர்கள். நாகரீகமாக உடை அணியுங்கள். நாகரீகமாகப் பேசவும் கற்றுக் கொள்ளுங்கள்.நீல நிறத்தில் சீருடை அணிந்து பணியாற்றினால் இன்னும் சிறப்பு.

 6. நாளுக்கு நாள் அறிமுகமாகும் நவீன பிளம்பிங் தொழிற்நுட்பங்களை இணையதளம், பத்திரிகைகள், நண்பர்கள் வாயிலாக தெரிந்து கொள்ள மறந்து விடாதீர்கள்.

 7. ஓய்வாக இருக்கும் நாளில் பிளம்பிங் தொடர்பான ஏ டூ இசட் ஷோரூம் கடைகளுக்குச் சென்று, அதன் ‘ஸ்பெசிபிகேஷன்ஸ்’, ‘ஃபீச்சர்ஸ்’, செயல்முறை மற்றும் விலைகளைத் தெரிந்து கொள்ளுங்கள்.

 8. நிறைய வணிகத் தொடர்புகளை ஏற்படுத்திக் கொள்ளுங்கள். இது உங்களுக்கு எப்போதும் வேலைகளைப் பெற்றுத் தரும்.

 9. எத்தனை பிசியாக இருந்தாலும், வருகிற வேலையை மறுக்காதீர்கள், தள்ளிப் போடாதீர்கள். வேறு வழியே இல்லை எனும்போது வாடிக்கையாளரிடம் உங்கள் நிலையை எடுத்துரையுங்கள். வேறொரு தேதியும், நேரமும் கேளுங்கள். அதுவும் தவறினால், வாடிக்கையாளருக்கு முன்கூட்டியே தகவல் தெரிவியுங்கள். எக்காரணத்தைக் கொண்டும் வாடிக்கையாளரைக் காக்க வைக்காதீர்கள், வாக்கு தவறாதீர்கள்.

 10. பி.வி.சி. பைப்புகள், பசை போன்ற பொருட்களை கவனமாகக் கையாளுங்கள். உடைத்தும், சிந்தியும் விடாதீர்கள். நட்டத்தை ஏற்படுத்துகிற தொழிலாளியாக நாம் இருந்தால், வாடிக்கையாளர் மட்டுமல்ல, நாமே நம்மை விரும்ப மாட்டோம்.

 11. துல்லியம், பெர்ஃபக்ஷன், இவைதான் பிளம்பிங் தொழிலுக்கு ஆதாரம். இதில் அலட்சியம் என்பதே இருக்கக்கூடாது. இல்லையெனில், நீங்கள் குழாயைப் பொருத்திவிட்டு வருவீர்கள், தெரு முனைக்குக் கூடச் சென்றிருக்க மாட்டீர்கள். உடனே, குழாயிலிருந்து தண்ணீர் லீக்காகிக் கொண்டிருக்கும்.

 12. வாடிக்கையாளர் புகார் என்றால் புதிய வேலை என்கிற அதே ஆர்வத்தோடு சென்று போய் பாருங்கள். பழுதினைச் சரி செய்யுங்கள்.

 13. ஒரு வேலை என அழைத்து, ஒவ்வொரு வேலையாகச் சொல்லிக் கொண்டிருந்தால், எரிச்சல் அடையாதீர்கள். அவர்கள் கேட்பதை செய்து கொடுங்கள். அதற்குத்தானே நாம் இருக்கிறோம்.

 14. வேலை முடிந்த பிறகு பணியிடத்தை சுத்தம் செய்து விடுங்கள்.

 15. ஹார்டுவேர் கடைக்காரரிடம் அன்டர்ஸ்டான்டிங்குடன் நடந்து கொள்வது, பில்லினை ஏற்றிப்போடுவது போன்ற சராசரி பிளம்பர் வேலைகளை நீங்களும் செய்ய முயற்சி செய்யாதீர்கள்.

 16. வாடிக்கையாளர் எளிதில் அணுகக் கூடியவராக நீங்கள் இருங்கள்.

 17. பிளம்பிங் என்றாலே தண்ணீர் சார்ந்த வேலைதானே? எனவே, வாட்டர் ஹீட்டர், வாட்டர் கூலர் போன்ற உபகரணங்களின் பழுது மற்றும் பராமரிப்பு வேலைகளையும் கற்று வைத்துக் கொள்ளுங்கள்.

 18. குடிநீர், கழிவுநீர் சார்ந்த பிளம்பிங் பணிகள் மட்டும் அல்லாது, நீச்சல்குளம் போன்ற கூடுதல் பிளம்பிங் நுணுக்கங்களையும் கற்று வைத்துக் கொள்ளுங்கள். அது உங்களுக்கு நிறைய வாய்ப்புகளையும், வருமானத்தையும் ஈட்டித் தரும்.