நிறுவும் வேலைகளுக்கு நிறைய நேரம் ஆகிறதா ?



ஒரு கட்டுமானத்தை உருவாக்குவதற்குத் தேவைப்படும் ஒவ்வொரு பகுதியையும் தயார் நிலையில் செய்து எடுத்துக் கொண்டு வந்திருப்பீர்கள். எல்லாவற்றையும் கோர்த்து இணைக்க வேண்டியதுதான் பாக்கி.ஆனால், பெரும்பாலான வேலைகளில் இது எளிதாக முடிந்துவிடும் என்று நினைத்துக் கொண்டு ஆரம்பிப்பீர்கள். அது இழுத்துக் கொண்டே போய்க் கொண்டிருக்கும்.  அவ்வாறு இடையூறுகள், இழுத்தடித்தல்கள் இல்லாமல் வேலைகளை விரைவாக முடிக்க வேண்டுமா? சில உத்திகளைப் பின்பற்ற முயற்சியுங்கள்.

குறிப்பிட்ட நேரத்தில் குறிப்பிட்ட எண்ணிக்கை மற்றும் அளவுகளில் தேவைப்படும் பாகங்கள் கொண்டு வந்து இறக்கப்பட வேண்டும். ஒப்பந்தக்காரர்கள் இதைச் சரியாகச் செய்கிறார்களா என்பதை உறுதிப்படுத்திக் கொள்ள வேண்டும். கட்டுமானப் பொருட்களைக் கையாளும் விதமும் முக்கியமானது. முற்றிலும் மனித உழைப்பை நம்பியே இயங்க வேண்டி இருப்பதைக் குறைக்க வேண்டும். அது அதற்கு உள்ள இயந்திரங்களைப் பயன்படுத்த முன் வர வேண்டும்.

தனித் தனி பாகங்களைச் சரியான வரிசையில் இணைத்துப் பொருத்தும் வேலையை வரிசைப்படி செய்து முடித்து வைத்துக் கொள்ள வேண்டும். எப்போது, எந்த இடத்திற்கு எத்தனை எண்ணிக்கையில் பாகங்கள் வந்து சேர வேண்டும் என்பதைத் திட்டமிடுவதே இந்த வேலைகளின் தொந்தரவுகளைக் குறைக்கும் முக்கியப் பகுதியாகும். கொண்டு வந்த பொருட்களை எங்கே இருப்பு வைப்பது என்று திண்டாடும் நிலை ஏற்பட்டுவிடாமல் எல்லா வற்றையும் கச்சிதமாகப் பார்த்துச் செய்ய வேண்டும். ஒப்பந்தக்காரர்கள் சொன்னபடி கொண்டு வந்து இறக்கி வைத்துவிடுவார்கள்.

இறக்கி வைப்பதற்கான வசதிகள் போதுமான அளவில் இல்லை என்றாலும் திருட்டு, கொள்ளை, கவனக்குறைவு, முறைகேடான கையாள்தல், பாதுகாப்பின்மை போன்ற காரணங்களால் இழப்பு ஏற்படும். 
 
சாரம் கட்டுதல், உயர்த்து வதற்கான மேடை அமைத்தல் போன்ற வேலைகள் எல்லாம் தற்காலிகமானவைதான். வேலை முடிந்ததும் பிரித்து எடுத்துவிடப் போகிறோம், இதற்குப் போய் ஏன் அதிகம் மெனக்கெட வேண்டும் என்கிற மெத்தனம் கூடவே கூடாது.
ஏனென்றால் இம்மாதிரியான ஏற்பாடுகள் பாதுகாப்பில்லாதவையாக இருக்கும். சேதங்கள் ஏற்பட வழி வகுத்துவிடும். எனவே கவனமாகச் செய்ய வேண்டியது அவசியம்.பாகங்களை எந்த வரிசைப்படி அடுக்க வேண்டும், எந்த வரிசைப்படி எடுக்க வேண்டும் என்பதை முடிவு செய்வதே பெரிய கலை. இதை உரிய விதத்தில் செய்பவர்கள் வேலைகளை எளிதாகவும் வேகமாகவும் முடித்துவிடுவார்கள்.
    வரிசைக்கிரமத்தை மாற்றுகிறவர்கள் சிண்டைப் பிய்த்துக் கொள்வார்கள்.  வேலைகளிலும் தேவையற்ற தாமதம் திணிக்கப்படும். சின்னச் சின்ன விசயங்களில் அலட்சியம் காட்டாமல் இருப்பது  பெரிய ஆதாயத்தைக் கொடுக்கும்.சரியான ஒருங்கிணைப்பு இருந்தால் நிறுவும் வேலைகளுக்கு ஏன் நிறைய நேரம் ஆகப் போகிறது?

உலர் காரை தயாரிக்க உருப்படியான இயந்திரம் !



காரை என்றால் தயாரிப்பு மற்றும் பயன்படுத்தும் நேரங்களில் ஈரமாகத்தானே இருக்கும் என்கிற சந்தேகம் பலருக்கும் ஏற்படும். பயன்படுத்தப்பட்ட பிறகுதானே காரை உலர வேண்டும் என்றும்  எண்ணுவார்கள். அது என்ன உலர் காரை?உலர் காரை என்பது ஒரு புதிய தொழிற்நுட்பம்.  காரைக்கான தேவை அதிக அளவு இருக்கும்போது இந்தத் தொழிற்நுட்பத்தைப் பயன்படுத்தலாம். இதனால் உற்பத்தித் திறன் உயரும். வேலைகளை விரைந்து முடிக்கலாம்.

தரம் எப்படி?

உலர் காரையைப் பயன்படுத்துவது கட்டுமானத்தின் தரத்தைப் பாதிக்குமா? அது குறித்துக் கவலைப்படத் தேவையில்லை. உலர் காரையின் தரம் என்பது கலவை விகிதத்தைப் பொறுத்தது. கலவை எந்த அளவுக்குச் சீராக உருவாக்கப்படுகிறது என்பதை வைத்தும் தரத்தை முடிவு செய்யலாம். எனவே, தரமான உலர் காரையைத் தயாரிப்பதில் கவனமாகச் செயல்பட வேண்டும்.

காரையின் தேவைகாரையை எந்தெந்த வேலைகளுக்குப் பயன்படுத்துகிறோம்? செங்கல் கட்டுமான வேலைகளுக்கு இது அவசியம் தேவைப்படும். இணைப்புகளை வலுவுள்ளவையாக ஆக்குவதற்கும் காரை வேண்டி இருக்கும். ஓடுகளை  அதனதன் இடத்தில் ஒட்டிப் பதிப்பதற்கும் காரை முக்கியம். மெல்லிய இடு தளத்தை உருவாக்கவும் காரையைப் பயன்படுத்த வேண்டும். இப்படிப் பார்க்கும்போது ஒவ்வொரு தேவைக்கும் ஒவ்வொரு விதத்தில் காரையைத் தயாரிக்க வேண்டி இருக்கிறது. காரைத் தயாரிப்பு முறைகளும் வேறுபடுகின்றன.

இந்த வேலைகளை எல்லாம் பொதுவாக ஒரே இயந்திரத்தில் செய்ய முடிந்தால்? இந்தச் சிந்தனையின் விளைவாக, நார்வேயைச் சேர்ந்த ஃபோர்பெர்க் என்பவரால் கண்டுபிடிக்கப்பட்டதுதான் டாஷ்வால் இரட்டைஷாஃப்ட் உலர் காரைக் கலவை இயந்திரம்.

நன்மைகள் என்ன?

கலவையின் தரம் மிக உயர்ந்ததாக இருக்கும். எதிர்பார்க்கும் தரத்திலான கலவையை எளிதில் உருவாக்கிவிடலாம். கலவையைத் தயாரிப்பதற்குத் தேவைப்படும் நேரத்தைக் கணிசமாகக் குறைக்கலாம்.  உற்பத்தி ஆலையின் செயல் திறனை மேம்படுத்தலாம். பராமரிப்புத் தேவைகள் குறைந்த அளவுக்கே இருக்கும்.
கலக்கும் வேலையைச் செய்யும் இயந்திரப் பகுதிகளில் உராய்வு, சிக்கல் என எதுவும் ஏற்படாதவகையில் கலக்க வேண்டிய பொருட்கள் உள்ளுக்குள் இடப்பட வசதி செய்யப்பட்டிருக்கிறது. இதனால் இயந்திரத்தின் தேய்மானம் மிகக் குறைந்த அளவிலேயே இருக்கும். இது இயந்திரம் நீண்ட காலம் உழைப்பதற்கு வழி வகுக்கும்.

கலவைகளைத் தயாரிக்க எவ்வளவு நேரம் ஆகும் என்று நீங்கள் ஒரு கணிப்பை வைத்திருப்பீர்கள். ஆனால் இந்த இயந்திரத்தின் மூலம் 3 விநாடிகள் முதல் 3 நிமிடங்களுக்குள் கலவை வேலைகளை முடித்துவிடலாம் என்று சொன்னால் நம்புவதற்குக் கடினமாகத்தான் இருக்கும். கலக்கும் வேலைகள் சீராகவும் ஆரவாரத்திற்கு இடமில்லாமலும் அமைதியாக நடக்கும். மிகக் குறைந்த பராமரிப்பே போதும். மின்சாரமும் குறைந்த அளவிலேயே பயன்படுத்தப்படும். கட்டுமானத் தொழிலின் சூழ்நிலைகளுக்கு ஏற்ற வகையில் இந்த இயந்திரங்கள் வடிவமைக்கப்படுகின்றன. சொந்த உபயோகத்திற்கு மட்டுமின்றி, வியாபார ரீதியாகவும் இதை பயன்படுத்த முடியும்.

நீர்கசிவு விரிசல்களை தடுக்கும் பெனிட்ரான்அட்மிக்ஸ் ! (PENETRON ADMIX)


கட்டுமான வேலைகள் நடைபெறும் நேரத்திலேயே நீர்க்கசிவையும் வெடிப்புகளையும் தடுக்கவல்ல சேர்மானப் பொருளாக உலகெங்கும் புகழ் பெற்றிருக்கிறது பெனிட்ரான்அட்மிக்ஸ்(Penetron Admix)எனப்படும் கலவை. இது அண்மைக்கால அதிநவீனக் கண்டுபிடிப்பு. கான்கிரீட்டுக்குள் தண்ணீர் புகாமல் தடுக்கும் வேலையைத் திறம்படச் செய்வதில் ஈடு இணையற்றது.

பெனிட்ரான் அட்மிக்ஸ் கலவையை கான்கிரீட்டைத் தயாரிக்கும் இடத்திலேயே, தயாரிப்பு வேலைகள்  நடக்கும் போதே கலக்கலாம். ஆலைகளில் தயாரித்து எடுத்து வரப்படும் கான்கிரீட் எனில் அந்த ஆலைகளிலேயே கலந்து கொள்ளலாம். கட்டட வேலைகள் நடைபெறும் இடத்திலேயே கான்கிரீட் தயாரிக்கப்படுவதாக இருந்தால் அதே இடத்திலேயும் கலக்கலாம்.
பெனிட்ரான் அட்மிக்ஸ் சேர்மானத்தைக் கான்கிரீட்டுடன் எவ்வளவு அளவுக்குக் கலப்பது? கான்கிரீட்டில் இடம் பெற்றிருக்கும் சிமெண்ட் தன்மை கொண்ட பொருட்களின் எடையில் நூற்றுக்கு   0.8 என்ற விகிதத்தில் கலந்தால் போதும். இந்த முறையைப் பயன்படுத்துவது மிக மிகச் சிக்கனமானதாக இருக்கும். தண்ணீர்க் கசிவுத் தடுப்பு நடவடிக்கைகளுக்காக மீண்டும் தனி வேலைகளைச் செய்ய வேண்டிய தேவை ஏற்படாது. ஏற்கனவே இடப்பட்டுள்ள கான்கிரீட்டா? அதனால் பரவாயில்லை. அதன் மீதும் பெனிட்ரான் அட்மிக்ஸ் கலவையைப் பயன்படுத்தலாம். ஆலைகளில் முன்னதாகவே தயாரித்து வைத்துக் கொண்டு தேவைப்படும் இடத்தில், நேரத்தில் பயன்படுத்தப்படும் ரெடிமிக்ஸ் கான்கிரீட் கலவைகளிலும் இதைச் சேர்க்கலாம்.

நிரூபணம் தேவையா?

பெனிட்ரான் அட்மிக்ஸ் கலவையின் பலன்களைக் சோதித்துப் பார்ப்பதற்காக அமெரிக்காவின் அயோவா மாநிலத்தில்  ஒரு கட்டுமானத்தில் சில சோதனைகளை மேற்கொண்டார்கள். ஒரு பெரிய தண்ணீர்த் தொட்டி கட்டும் வேலை. அதில் இந்தக் கலவையைப் பயன்படுத்தினார்கள். ஆரம்பத்தில் பெரிய வேறுபாடு எதுவும் தெரியவில்லை. இன்னும் சொல்லப்போனால் ஆங்காங்கே தண்ணீர் கசிந்து வெளியேறுவதைப் பார்க்க முடிந்தது.ஒன்றிரண்டு நாட்களுக்குப் பின் இந்தக் கசிவின் வேகம் குறைந்தது. சொட்டுச் சொட்டாக மட்டுமே நீர் வெளியேறியது. தொட்டியில் இருந்த நீர் ஆவியாகி வெளியேறும் இடங்களில்
மட்டும் ஈரம் தென்பட்டது. இது தொட்டியின் விளிம்பிலிருந்து 7 முதல் 10 செ.மீ ஆழம் வரை காணப்பட்டது.

இந்த நேரத்திற்குப் பிறகு, படிகங்கள் உருவாகி வருவதை வெறும் கண்களாலேயே பார்க்க முடிந்தது. வெடிப்புகளை இந்தப் படிவங்கள் அடைத்துக் கொள்வதைக் கண்ணால் காண முடிந்தது. முழுமையாக ஏழு நாட்கள் கழிந்த பிறகு எந்தவொரு வெடிப்பும் படிகங்களால் அடைக்கப்படாமல் இல்லை என்பதை உணர்ந்தார்கள். படிகங்கள் தாமே வளர்ந்து வெடிப்புகளை அடைத்துக் கொள்கின்றன என்பது சந்தேகத்திற்கு இடமில்லாமல் நிரூபணம் ஆயிற்று.

கடலுக்குள்ளும் வேலை செய்ய ஏற்ற பெனிட்ரான் அட்மிக்ஸ்

கடலுக்குள் அமைக்கப்பட்டுள்ள கட்டுமானங்களைப் பராமரிக்கவும் பழுதுபார்க்கவும் எழும் தேவைகள் பலவிதமானவை. துறைமுகங்கள், கப்பல் கட்டும் தளங்கள், ஆழ் கடல் துரப்பண மேடைகள் போன்ற இடங்களில் உள்ள கட்டுமானங்களின் பெரும் பகுதி எப்போதும் கடல் தண்ணீருக்குள்தான் மூழ்கிக் கிடக்கும்.கடல் தண்ணீரில் உள்ள குளோரைட் கான்கிரீட்டுக்குள் புக நேர்ந்தால் கம்பிகளை அரித்து விடும். கம்பிகள் விரைவில் இற்றுப் போய் விழுந்துவிடும்.இது போன்ற தொல்லைகளைத் தடுக்க வேண்டுமானால் பெனிட்ரான் அட்மிக்ஸ் கலவையைப் பயன்படுத்துவது சிறந்த பாதுகாப்பு ஏற்பாடாக அமையும்.

அந்தரத்தில் ஆடும் வீடு !




தரையில் போதுமான அஸ்திவாரம் இருந்தாலே ஆட்டம் காணும் கட்டிடங்கள் நம் நாட்டில் அதிகம். ஆனால், கட்டிடத்தில் 60 சதவீதம் அந்தரத்தில் அமைக்கப்பட்டும் ஆடாமல் இருக்கிறது. இது நார்வே ஆர்க்கிடெக்ட் வின்னி மாஸ் என்பவரின் கைத்திறம்.

    வின்னி மாஸுக்கு சொந்தமான பண்ணை நிலம் ஒன்று இருக்கிறது. அங்கு தனது ஓய்வு வீட்டை வடிவமைக்க நினைத்த போது இடம் போதவில்லை. ஏனெனில், அவரது நிலத்தில் சுமார் 20 அடி அளவிலான பெரிய சரிவு ஒன்று இருந்தது. முதலில் அந்த சரிவினை நிரப்பி மேல்மட்டத்துடன் சமப்படுத்துவதற்கு முயற்சித்தார். ஆனால், அவரது ஆர்க்கிடெக்ட் மூளை விழித்துக் கொண்டு பாதி நிலத்திலும், பாதி அந்தரத்திலும் ஏன் வீட்டை அமைக்கக்கூடாது? என கேள்வி கேட்கவே படத்திலுள்ள வீட்டை வடிவமைத்து கட்டியும் முடித்துவிட்டார்.
50 அடி நீளமும், 20 அடி அகலமும் உடைய இந்த வீடடில் 20 அடி நீளப்பகுதி உயர்மட்டத்தில் பதிக்கப்பட்டிருக்கிறது. மீதம் உள்ள 30 அடி நீளப்பகுதி யாதொரு தாங்கு தூண்களும் இன்றி  அந்தரத்திலேயே வடிவமைக்கப்பட்டிருக்கிறது. இது ஆபத்தில்லையா என ஆர்க்கிடெக்ட் வின்னி மாஸிடம் கேட்டபோது, “பொதுவாக இதுபோன்ற கட்டுமானங்களில் மூன்றில் இரண்டு பங்கு நிச்சயமாக நிலத்தில் ஊன்றியிருக்க வேண்டும் என்பது விதி. அதை இங்கு நான் தைரியமாக மீறியிருக்கிறேன். ஆனால், எவ்வித ஆபத்தும் இதற்கில்லை. ஏனெனில் அந்தரப் பகுதியில் இருக்கும் வீட்டிற்கான கவுன்டர் வெயிட்டை 6 கான்கிரீட் பில்லர்கள் கொண்டு நிலப்பகுதியில் ஏற்றியிருக்கிறேன்” என்கிறார் வின்னி மாஸ். கடல் அரிப்பிற்குப் பிறகு கடலோரம் கட்டப்பட்ட வீடுகள் இந்தியாவில் பெரும்பாலும் அந்தரத்தில்தான் ஆடும் என்பது வேறு விஷயம்.

ரூ.6 லட்சத்தில் இரண்டு அடுக்கு வீடு !


அஸ்திவாரம் போடுவதற்கே இரண்டு, மூன்று லட்சம் செலவாகும் இந்த காலத்தில்  வெறும் ரூ.6 லட்சத்தில் ஒரு வீட்டையே கட்டியிருக்கிறார்கள் சென்னை ஐஐடி பொறியியல் துறையினர். அதுவும் வெறும் குடிசை வீடு அல்ல. கிட்டத்தட்ட 2000 ச.அடி பரப்புடைய இரண்டடுக்கு மாடி வீடு கட்டுவதற்கு ரூ.6 லட்சம்தான் செலவாகிறதாம். அதெப்படி? சிமெண்டும், கம்பியும், செங்கல்லும், ஆட்கள் கூலியும் விண்ணைத் தொடும் இந்த காலக்கட்டத்தில் இது சாத்தியமா? என நீங்கள் ஆச்சரியப்படலாம்.
இது முழுக்க முழுக்க வழக்கமான மூலப்பொருட்கள் அல்லாத வித்தியாசமான மூலப்பொருட்களைக் கொண்டு
கட்டப்பட்டிருக்கும் கட்டிடமாகும்.

“உரத் தொழிற்சாலைகளின் கழிவு பொருட்கள், கண்ணாடி இழைகள் மற்றும் ஜிப்சம் உப்பு ஆகியவற்றின் கூட்டுச் சேர்க்கையில் தயாரிக்கப்பட்ட (கிளாஸ் ஃபைபர் ரீ இன்போர்ஸ்டு ஜிப்சம்) ஜிஎஃப்ஆர்ஜி பலகைகள், இவற்றோடு குறைந்த அளவு சிமெண்ட் மற்றும் மிகக் குறைந்த அளவு இரும்புக் கம்பிகள் இவற்றை வைத்துதான் இந்த வீட்டை அமைத்திருக்கிறோம்.

சென்னை ஐ.ஐ.டி. வளாகத்தில் அமைக்கப்பட்டுள்ள 1981 சதுர அடி அளவில் இரண்டு அடுக்குகள் கொண்ட இந்த மாதிரி வீட்டைக் கட்ட தேவைப்பட்ட கால அவகாசம் வெறும் ஒரு மாதம்தான். சொந்த வீடு என்பது கனவாகவே போய்விடுமா? என்ற ஏக்கத்தில் இருக்கும் நடுத்தர குடும்பங்களுக்கு இந்த புதிய தொழிற்நுட்பம் நிச்சயம் பயன்படும்” என்கிறார் டாக்டர் தேவதாஸ் மேனன்.
பொதுத்துறை உரத் தொழிற்சாலைகளான எஃப்.ஆர்.பி.எல்., கொச்சின், ஆர்.சி.எஃப்., மும்பை ரீ இன்போர்ஸ்டு ஜிப்சம்  போர் டுகளை  தயாரிக்கின்றன. எதிர்காலத்தில் தனியார் தொழிற்சாலைகளும் கிளாஸ் ஃபைபர் ரீ இன்போர்ஸ்டு ஜிப்சம் போர்டுகள் தயாரிப்பில் ஈடுபடும் என எதிர்பார்க்கப்படுகிறது. இந்த பேனல்களின் விலை ஒரு சதுர மீட்டர் ரூ.750 முதல் ரூ.900 வரை விற்கப்படுகிறது. ஜி.எஃப்.ஆர்.ஜி., (GFRG) கொண்டு கட்டப்படும் வீடுகள் நிலநடுக்கத்தால் பாதிக்காத வகையிலும், பூமியின் ஈர்ப்பாற்றலை தாங்கும் வகையிலும் இருக்கும்.
ஆஸ்திரேலியா, சீனா, ஓமன் போன்ற நாடுகளில் கிளாஸ் ஃபைபர் ரீ இன்போர்ஸ்டு ஜிப்சம் போர்டுகளை பயன்படுத்தி நிறைய கட்டிடங்கள் கட்டப்பட்டுள்ளன என்பது குறிப்பிடத்தக்கது.

ரிமோட் கன்ட்ரோல் ரோலிங் ஷட்டர்கள் !




ரிமோட் கன்ட்ரோலுடன் கூடிய ரோலிங் ஷட்டர்களை மெட்டல் கிராஃப்ட் நிறுவனம் அறிமுகப்படுத்தியிருக்கிறது.
உலோகத்தினால் ஆன பலவகை கேட்கள், கிரில்கள், ஃபர்னிச்சர்கள் தயாரிப்பில் முன்னணி நிறுவனமாகத் திகழும் மெட்டல் கிராஃப்ட் Metalcraft) பிரத்யேக டிசைன்களில் ரிமோட் கன்ட்ரோல் மூலம் இயங்கக்கூடிய ரோலிங் க்ஷட்டர்களை புதிதாக அறிமுகப்படுத்தியுள்ளது. நூறு சதவீத பாதுகாப்பு மிக்க இந்த க்ஷட்டர்களை வீடுகள், வணிக நிறுவனங்கள் மற்றும் தொழிற்சாலைகளில் பயன்படுத்தலாம். இவை இரண்டு ஆண்டு உத்திரவாதத்துடன் கிடைக்கும்.

பாலிகார்பனேட் (Polycarbonate)), கல்வனைஸ்ட் அயர்ன் (Galvanized Iron), அலுமினியம் (Aluminium) ஆகியவற்றால் உருவாக்கப்பட்ட இந்த ஷட்டர்கள், தரத்திலும், பாதுகாப்பிலும் சர்வதேச தரம் கொண்டவை ஆகும். ‘இன்ஃப்ரா ரெட் போட்டோ எலெக்ட்ரிக் டிடெக்டர்’ (Infra Red Photo Electric Detrctor) சாதனத்துடன் கூடிய ரிமோட் கன்ட்ரோல், அதிகபட்சமாக 60 மீட்டர் தூரத்திலிருந்து க்ஷட்டர்களை இயக்க உதவுகிறது.2 மீட்டர் முதல் 6 மீட்டர் உயரம் வரை உள்ள க்ஷட்டர்கள் ரூ.10 ஆயிரம் முதல் ரூ.40 ஆயிரம் வரையிலான விலைகளில் கிடைக்கின்றன.
க்ஷட்டர்களில் இடம் பெற்றிருக்கும் ‘டி’ வடிவிலான நைலோஃபெல்ட் ((Nylofelt) அல்லது நைலான் கிளிப்கள் (Nylon Clips), லூப்ரிகண்ட்ஸ் (Lubricants)  மற்றும் கிரீஸ் இல்லாமல் எளிதாக க்ஷட்டர்கள் இயங்குவதை உறுதி செய்கின்றன. க்ஷட்டர் கதவுகளை, கையினாலோ, செயின் மூலமாகவோ அல்லது டி.சி. மோட்டார் உதவியாலோ சிறு சத்தம் கூட இல்லாமல், மிக வேகமாகஇயக்க முடியும். ஷட்டரின் உள்ளே மறைவாகப் பொருத்தப்பட்ட டிரைவ்  (Drive)  சாதனம், சத்தம் இல்லாமல் உதவுகிறது. மின்சாரம் இல்லாத நேரங்களில் கையினால் இயக்கும் முறைக்கு க்ஷட்டர் செயல்பாட்டை எளிதாக மாற்றிக் கொள்ளலாம். இந்த க்ஷட்டரில் தானாகவே குறிப்பிட்ட நேரத்தில் மூடிக்கொள்ளும் டைமர் (Timer)  வசதியும் உள்ளது. இதற்கு பேட்டரி பேக் அப் (Battery Back-up)  வசதியும் கொடுக்கப்பட்டுள்ளது.

உள்புறம், வெளிப்புறம், அடிப்பகுதி என 3 இடங்களில் பூட்டிக் கொள்ளும் வசதி கொண்ட மூன்றடுக்கு லாக் சிஸ்டம், பாதுகாப்புக்கு நூறு சதவீத உத்திரவாதம் அளிக்கவல்லது. வாடிக்கையாளர்களின் தேவைக்கும், விருப்பத்திற்கும் ஏற்ப, ஆக்சஸ் கன்ட்ரோல் சிஸ்டம் Access Control System), மேக்னட்டிக் சென்சார்(Magnetic Sensor) ஒலி எழுப்பக்கூடிய எச்சரிக்கை விளக்கு(Warning Light with Buzzer) ) போன்ற கூடுதல் கருவிகளையும் பொருத்திக் கொள்ளலாம்.

மனதை திருடும் 3D மேஜிக் !



மிகவும் பழமையான கலைதான் ஓவியம். அதிலும் அமெரிக்கா போன்ற மேல்நாடுகளில் தரைகளிலும், சுவர்களிலும் வரையப்படும் ரசனையான ஓவியங்களுக்கு வரவேற்பு அதிகம். நாளடைவில் முப்பரிமாண ஓவியங்களாக உருமாறியதுதான் பெரிய திருப்புமுனை. அங்கு உருவாகும் அனைத்து வித குடியிருப்புகள், வணிகவளாகங்கள், ஷாப்பிங் மால்கள் போன்ற கட்டிடங்களின் தரைகளில் திரும்பிய இடமெல்லாம் கலை உணர்வுமிக்க ஓவியங்களை வரைந்து தள்ளுகிறார்கள் உள்ளூர் ஓவியர்கள். குடியிருப்பு வாசிகளையும், வாடிக்கையாளர்களையும் மகிழ்விப்பதற்கு கட்டிட மற்றும் நிறுவனங்களின் சொந்தக்காரர்களே இது போன்ற ஓவியங்களை வரையச் செய்கிறார்கள்.

ஓவியங்கள் என்றால் எப்போதும் நாம் பார்த்து பழகிபோன இயற்கை கண்காட்சி, அழகியல் சார்ந்த ஓவியங்கள் அல்ல. திடீரென நீச்சல் குளத்திலிருந்து வெளியேறும் சுறா, நடைபயிலும் சிங்கம், ராட்சத பாம்பு, பாதாள சுரங்கம் போன்ற பலவகையான தோற்ற மாயைகளை ஏற்படுத்தும் முப்பரிமாண ஓவியங்களே வரையப்படுகிறது. சிறுவர்களை மட்டுமன்றி  பெரியவர்களையும் இது பெரிதளவு ஈர்க்கிறது.
இங்குள்ள படங்களை பாருங்கள்எது ஓவியம், எது அசல் என்று பிரித்துப் பார்க்க முடியாத அளவிற்கு எத்தனை தத்ரூபமாக வரைந்திருக்கிறார்கள்.

   நமது நாட்டிலும் குடியிருப்பு புராஜெக்ட்டுகள் உருவாக்கப்படுகின்றன. சுற்றிலும் இடம்விட்டு நமது பில்டர்கள் கட்டுகிறார்கள். கார்டனிங், குழந்தைகள் பூங்கா, ஜாகிங் ட்ராக் என இதெல்லாம் தவறாது உருவாக்குகிறார்கள். கூடவே இது போன்ற ரசனையைத் தூண்டும் முப்பரிமாண ஓவியங்களை வரைந்து வைத்தால் அது வாடிக்கையாளரை பெருமளவு ஈர்க்கும் அல்லவா?

கலையழகு மிக்க கான்கிரிட் !


மரத்தில் செய்யக் கூடிய அத்தனை வேலைகளையும் கான்கிரீட்டில் செய்தால் எப்படி இருக்கும். இன்னும் அழகாக அமையும். நீண்ட காலம் உழைக்கும். கடினமாக இருக்கும். பூச்சி, ஈரம் போன்றவற்றால் பாதிக்கப்படாது. விலையும் குறைவாகவே இருக்கும்.
இதை எப்படி செய்யலாம்?

கான்கிரீட் பரப்பைப் பளபளப்பாக்கவேண்டும். அதற்கு முன் அந்தப் பரப்பின் மேல் ஸ்டென்சில் எனப்படும் அச்சுத்தாளைப் பரப்பிக் கொள்ள வேண்டும். இந்த அச்சுத் தாளில் நீங்கள் விரும்பும் வடிவத்தை இடம் பெறச் செய்யலாம்.
அச்சுத்தாளைக் கான்கிரீட் பரப்பில் ஒட்டிய பின் ஒரே நேரத்தில் செதுக்கி எடுக்கும் வேலையையும், பளபளப்பாக்கும் வேலையையும் மேற்கொள்ளலாம்.

இந்தத் தொழிற்நுட்பத்தைப் பயன்படுத்தி ஒரு சிற்பத்தை உருவாக்க எவ்வளவு செலவாகும் என்று கணக்குப் போடுகிறீர்களா? பளிங்கில் இதைப் போல் செதுக்கி எடுப்பதற்கு ரூ.7 ஆயிரம் ஆகிறது என்று வைத்துக் கொள்வோம். கான்கிரீட்டில் செதுக்கினால் ஒரே ஒரு ஆயிரம்தான் ஆகும். நம்ப முடியாத சிக்கனம்.
இந்த வேலைப்பாடுகளை அலங்காரத் தேவைகளுக்குப் பயன்படுத்தலாம். விளம்பரங்களை அமைத்துக் கொடுக்கலாம். நடைபாதைகள், குளியலறைத் தரை போன்ற இடங்களில் கால்கள் வழுக்குகின்றனவா?
இந்த முறையைப் பின்பற்றி செதுக்கு வேலைகளைச் செய்தால் உராய்வை அதிகரிக்கலாம். வழுக்கிவிடுவதைக் குறைக்கலாம்.
உறுதியான, உடைந்து போகாத கலை வேலைப்பாடுகள் சாத்தியமாகும்.ஒளித் தடுப்புத் தேவைகளுக்கு ஏற்றது.
கணினியையும் பயன்படுத்தி விதவிதமான அச்செழுத்துக்களையும் வேலைப்பாட்டுக்குள் கொண்டு வர முடியும். எந்த மொழி எழுத்துக்கள் வேண்டும் என்பதை நீங்களே தீர்மானிக்கலாம். உளுத்துப் போகுமோ? கறையான் பிடிக்குமோ? வார்னீஷ் அடிக்க வேண்டுமோ? என்று கவலைப் படத்தேவையில்லை.

இயற்கையிலேயே பற்பல எழிலான தோற்றங்களை உருவாகுமாறு செய்யலாம். இயற்கை வண்ணங்களை உபயோகிக்கலாம்.
சிமெண்டின் நிறத்தை விரும்பியபடி தேர்வு செய்யலாம். சாம்பல் நிறம், வெள்ளை, கலவை நிறங்களில் சிமெண்ட் வகைகள் கிடைக்கின்றன. தேவைப்பட்டால் செயற்கைச் சாயங்களையும் பயன்படுத்தலாம். இதில் எண்ணற்ற வண்ணங்கள் இருக்கின்றன. தந்தத்தைப் போன்ற நிறம், வெள்ளை, மஞ்சள், பழுப்பு, சாம்பல், கறுப்பு, ஆலிவ் பச்சை, மரகதம், நீலம் என்று எத்தனையோ வண்ணங்கள் சாத்தியம்.ஜல்லிகளிலும் விதவிதமான வண்ணங்கள் இருக்கின்றன. சிவப்பு, பச்சை, கருப்பு முதலிய நிறங்களைத் தேர்ந்தெடுக்கலாம். பிறகென்ன? அசத்துங்கள்!

கலவையை ஊற்றும் போது கவனியுங்க !



கலவையைக் கலந்து , தேவைப்படும் இடத்தில், முறையாகக் கொட்டிப் பரப்புவதைக் கான்கிரீட்டை ஊற்றுதல் என்று சொல்லலாம்.கான்கிரீட் இடும் வேலை என்றும் குறிப்பிடலாம். இத்தகைய வேலைகளை மேற்கொள்வதற்கு முன்பாக, சோதிக்க வேண்டிய விசயங்கள் பல இருக்கின்றன. இந்தக் கடமைகளை முறைப்படி நிறைவேற்றினால்தான் கான்கிரீட்டை ஊற்றும் வேலை முழுமை பெறும்.

கான்கிரீட் இடப்படுவதற்கு முன், இடப்பட வேண்டிய பகுதியை முழுமையாக ஆராய வேண்டும். பலகை அடைக்கும் வேலைகள் எந்த அளவுக்குச் செம்மையாக நிறைவேற்றப்பட்டுள்ளன என்று பார்க்க வேண்டும்.பலகை அடைப்பின் அளவு, வடிவம் ஆகியவற்றைச் சோதிக்க வேண்டும். செய்யப்பட உள்ள வேலையின் தன்மைக்கு ஏற்ற வகையில் அமைத்திருக்கிறார்களா என்பதை உறுதிப்படுத்திக் கொள்ள வேண்டும். கலவை வழிந்து வெளியே ஓடிவிடாமல் இருப்பதற்கும், ஒழுகி வீணாவதைத் தடுப்பதற்கும் தகுந்த ஏற்பாடுகள் செய்யப்பட்டிருக்கின்றனவா என்று பார்ப்பது முக்கியம்.

முட்டுக்கள் முறையான விதத்தில் பாரத்தைத் தாங்கக் கூடியவையா? சரியான இடத்தில் அமைக்கப்பட்டிருக்கின்றனவா?  இணைப்புகள் உறுதியாக உள்ளனவா? என்று சோதிக்க வேண்டும்.கான்கிரீட் வந்து சேர்ந்துவிட்டதா? அவசரம் வேண்டாம். கான்கிரீட்டைச் சோதியுங்கள். அது தரமாகத் தயாரிக்கப்பட் டிருக்கிறதா? சோதனை முடிவுகள் திருப்திகரமாக இருந்தாலொழியக் கான்கிரீட் இடும் வேலைகளைத் துவக்க வேண்டாம்.

இதற்கு என்ன வழி? நீங்களே சோதித்துப் பார்க்க வேண்டியதுதான். ஜல்லிகளின் அளவை எப்போதாவது திடீரென்று சோதித்துப் பாருங்கள். கலவையில் சேர்க்கப்படும் சிமென்ட் தரமானது தானா? விரும்பிய கிரேடு கொண்டதா? தயாரிப்பு நிறுவனம் எப்படி?  சிமென்ட் எவ்வளவு வேகத்தில் இறுகுகிறது? உறுதி எப்படி? சோதித்துப் பார்க்க வேண்டும்.

கான்கிரீட்டில் கட்டிகள் இருக்கக் கூடாது. அப்போதுதான் பரவுவது சீராக இருக்கும். உயரமான இடங்களுக்குப் பம்ப் செய்வதாக இருந்தாலும் அந்த வேலை தடையில்லாமல் நடக்கும். கான்கிரீட்டுக்குள் எந்த அளவிற்குக் காற்று இடம் பெற்றிருக்கிறது என்பதையும் சோதிக்க வேண்டும். கலவையின் வெப்ப நிலை என்ன? எப்போது இறுகும்? எவ்வளவு நேரத்தில் உறுதி பெறும்? சன்னத் தன்மை எப்படி? வலு எப்படி? ஆராய வேண்டும்.கான்கிரீட் ஊற்றப்பட்ட பிறகும் உங்களுக்கு வேலை இருக்கத்தான் செய்கிறது.எங்கே கான்கிரீட்டை இட்டீர்களோ அந்த இடத்தைக் கவனமாகச் சோதியுங்கள். வெடிப்புகள் உருவாகி இருக்கின்றவா என்று விழிப்பாகப் பாருங்கள். எங்காவது சில சில்லுகள் பெயர்ந்து விழுந்திருக்கின்றனவா என்று ஆராயுங்கள். தேன்கூடு வடிவிலான குறைபாடுகளையும் கவனிக்கத் தவற வேண்டாம். ஒவ்வொன்றையும் கவனமாகச் சோதிக்க வேண்டும்.

ஒவ்வொரு பகுதியையும் உற்றுப் பார்த்து குறைகளைக் குறித்துக் கொள்ள வேண்டும். காற்று வெற்றிடங்கள் உருவாகி இருக்கலாம். கறைகள் படிந்திருக்கலாம். நிறம் மாறி இருக்கக் கூடும்.

இரும்பு கழிவில் கட்டுமான கற்கள் !


சில செங்கல்களை எடுத்துப் பார்க்கும் போது என்ன இது..இரும்பைப் போல் இருக்கிறதே என்று வியப்படையத் தோன்றும். கொஞ்சம் பொறுங்கள். இரும்புச் செங்கற்களே வரப் போகின்றன.  உண்மைதான்.இரும்பு உற்பத்தி ஆலைகளில் உருவாகும் கழிவுகளைப் பயன்படுத்திக் கற்களைத் தயாரிக்கலாம் என்று கண்டுபிடித்திருக்கிறார்கள். இரும்பு ஆலைகளில் தூசி வடிவில் திரளும் குப்பைகளின் அளவு மலைப்பூட்டுவதாக இருக்கிறது.

ஐரோப்பிய நாடுகளில் இந்த வகைக் கழிவு ஆண்டொன்றுக்கு 7 இலட்சம் டன் என்ற அளவில் இருக்கிறது. அமெரிக்காவில் இது 1.2 கோடி டன் வரை இருக்கும் என்கிறார்கள். இவ்வளவு பெரிய அளவிலான கழிவை அப்படியே விட்டு வைத்துக் கொண்டிருந்தார்கள்.
இந்தக் கழிவை மூலப் பொருளாகக் கொண்டு கற்களைத் தயாரித்துக் கட்டுமானத் தேவைகளை நிறைவு செய்ய முடியும் என்று கண்டுபிடித்திருக்கிறார்கள்.

இரும்பு உற்பத்தி ஆலைகளில் உருவாகும் கழிவுகளை வேல்ஜ் ஸ்லாக் (Waelz slag) என்று குறிப்பிடுவார்கள். சாதாரணமாக இது
பாறாங்கற்களைப் போல் காணப்படும். இதற்குப் பெரிய உபயோகம் எதுவும் இல்லை என்று போட்டு வைத்துவிடுவார்கள். எங்காவது பள்ளங்களை நிரப்ப வேண்டி இருந்தால் அங்கு இதைக் கொண்டு போய்க் கொட்டிவிடுவார்கள்.  இது விலைமதிக்க முடியாத நல்ல கட்டுமானப் பொருளாக மாற்றப் படலாம் என்று இப்போது கண்டு கொண்டிருக்கிறார்கள்.

வேல்ஜ் ஸ்லாக்கில் இரும்பு இருக்கிறது. சுண்ணாம்பு இடம் பெற்றிருக்கிறது. சிலிகான் ஆக்ஸைடும் உண்டு.  மாங்கனீஸ், காரீயம், துத்தநாகம் போன்ற உலோக ஆக்ஸைடுகளையும் காணலாம். இத்தனை நல்ல பொருட்களைக் கொண்டுள்ள இந்தக் கசடை எப்படிப் பயனுள்ள வகையில் பயன்படுத்தலாம் என்று ஆராய்ந்திருக்கிறார்கள்.
கட்டுமானத்திற்கான கற்கள், ஓடுகள், பிற பீங்கான் பொருட்களைத் தயாரிக்க இதை மூலப் பொருளாக எடுத்துக் கொள்ளலாம் என்பது அண்மைக்கால ஆராய்ச்சிகளின் முடிவாகும். இதை வணிக ரீதியில் கட்டுப்படியாகக் கூடிய விலையில் உற்பத்தி செய்து பயன்படுத்தலாம்.

மூலப்பொருட்களில் உள்ள சில நச்சுக்கள் தயாரிப்புப் பொருளிலும் இடம் பெற்றுவிட நேர்வது விரும்பத்தக்கதல்ல.  இருப்பினும் இந்த நச்சுக்களின் விகிதம் தர நிர்ணய விதிமுறைகளின்படி ஏற்றுக் கொள்ளக் கூடிய அளவை விடக் குறைவாகவே காணப்படுகிறது.இரும்பாலைக் கழிவுகளில் இருந்து தயாரிக்கப்படும் கற்களும் ஓடுகளும் மிகச் சிறந்த வலுவைக் கொண்டவையாக இருப்பதால் இவற்றில் உள்ள சிறு சிறு குறைகளைக் கண்டு கொள்ளத் தேவையில்லை என்பது ஆராய்ச்சியாளர்களின் கருத்து.
கனமான தாய்ச்சுவர்களுக்கு இந்த இரும்பு கற்கள் மிகப் பொருத்தமாக இருக்கும்.

கட்டுமான இயந்திரங்களை வாங்கும்போது !


நீங்கள் செய்யும் தொழிலுக்கு ஏற்ற இயந்திரம் ஒன்றைத் தேர்ந்தெடுக்க வேண்டுமானால் சில அடிப்படை விசயங்களில் கவனம் செலுத்த வேண்டும்.வாங்குகிற இயந்திரம் தொல்லையற்றதாக இருக்க வேண்டும். எப்போதாவது இயங்க மறுக்கும் நிலை ஏற்பட்டால் நீங்களே சரி செய்து கொள்ளக் கூடியதாக இருக்க வேண்டும். அல்லது விற்பனைசெய்த நிறுவனமே உடனடியாகத் தக்க ஆட்களை அனுப்பி வைக்குமா, துணை பாகங்கள் கிடைக்குமா என்பதை உறுதி செய்து கொள்ள வேண்டும்.

இயக்குவதற்கு எத்தனை ஆட்கள் தேவைப்படுவார்கள்? இந்த எண்ணிக்கை அதிகமா? குறைவா? கட்டுபடியாகும் அளவுக்குள் இருக்க வேண்டும். மூலப் பொருட்களைப் பயன்படுத்துவதில் சிக்கனமாக நடந்து கொள்ளுமா? விரையங்கள் குறைவாக இருக்குமா? சேதங்கள் தவிர்க்கப்படுமா? வேறு பல இயந்திரங்களுடன் இணைத்து இயக்குவது சாத்தியமா?
தயாரிக்கப்படும் பொருட்கள் குறைவற்றவையாக அளிக்கப்படுமா? 100 பகுதிகளைத் தயாரித்துத் தரும் இயந்திரத்தின் அளிப்பில், எத்தனை பொருட்களில் குறை இடம் பெற்றிருக்கும்? அவற்றை வாடிக்கையாளர்கள் ஏற்க மறுப்பார்கள். இந்த வகையில் வீண் என்று ஒதுக்கப்படும் எண்ணிக்கை எவ்வளவுக்கெவ்வளவு குறைவாக இருக்குமோ அவ்வளவுக்கவ்வளவு நல்லது. தயாரிப்புப் பொருளின் தரம் எப்போதும் நிலை நிறுத்தப்படுமா? அண்மைக் காலத்தில் ஏதாவது மாற்றங்கள் புகுத்தப்பட்டிருக்குமானால் அதை இயந்திரத்
திலும் ஏற்படுத்திக் கொள்ள வழி இருக்கிறதா? இப்போது செய்யும் வேலைக்குத் தேவை இல்லாமல் போகக் கூடிய நிலை ஏற்படுமா? காலத்திற்கேற்பவும் தேவைக்கேற்பவும் சிற்சில மாற்றங்களைச் செய்து கொண்டு இயந்திரத்தைத் தொடர்ந்து இயக்க முடியுமா? இயந்திரத்தின் ஆயுட் காலம் எவ்வளவு? ஆயுள் முடிந்தபின் அதை விற்க நினைத்தால் எவ்வளவு கிடைக்கும்? விற்கக் கூடிய விலை அதிகமாக இருக்குமா? அடிமாட்டு விலைக்குத்தான் கேட்பார்களா? ஒரு மணி நேரம் அல்லது ஒரு நாள் என்கிற கணக்கில் இயக்குவதற்கு எவ்வளவு செலவாகிறது? நிகரமாக நிற்கக் கூடிய லாபம் எவ்வளவு?

இயந்திரத்தின் விலை முழுவதையும் ரொக்கமாகவே கொடுத்து வாங்க வேண்டுமா? நிதி உதவி கிடைக்குமா? வங்கிகள் உதவிக்கு வருமா? தயாரிப்பு நிறுவனமே ஏற்பாடு செய்யுமா? வட்டி விகிதம் எவ்வளவு இருக்கும்? சலுகை,
மானியம், தள்ளுபடி, இலவச இணைப்பு போன்ற வழிகளில் ஆதாயம் கிடைக்க வழி இருக்கிறதா?
விற்பனைக்குப் பிந்தைய சேவை எப்படி இருக்கும்? பராமரிப்புப் பணிகளுக்கு அதிகம் செலவிட நேருமா? இயந்திரத்தை இயக்குவதற்கு என்றே தனிப் பயிற்சியை ஊழியர்களுக்கு அளிக்க வேண்டி இருக்குமா?
இதே வகை இயந்திரத்தை இதற்கு முன் யார், யார் வாங்கி இருக்கிறார்கள்? அவர்களைப் பார்த்துக் கருத்துக் கேட்க முடியுமா? அவர்களது அனுபவங்கள் உங்களுக்குப் பாடமாக அமைய வாய்ப்பிருக்கிறதா? இயந்திரத்தை நாமே பயன்படுத்துகிறோமா? வாடகைக்கு விட முடியுமா? எவ்வளவு வருவாய் வரும்? சொந்த உபயோகத்திற்கும் வாடகைக்கும் மாற்றி  மாற்றிப் பயன்படுத்துவது சாத்தியம்தானா?  இதெல்லாம் நன்கு ஆராயுங்கள்.

அலுமினியம் டெலஸ்கோப்பிக் ஃப்ளையிங் ஃப்ரேம்கள் !


மூன்றே நாட்களில் சென்ட்ரிங் பணிகளை முடித்து விட்டு அடுத்த வேலையைப் பார்க்கப் போக வேண்டுமா? அலுமினியம் டெலஸ்கோப்பிக் ஃப்ளையிங் ஃப்ரேம்களைப் பயன்படுத்துங்கள்.
இந்தப் புதுமையான படைப்பை வழங்குபவர்கள் ஹை லைஃப் சிஸ்டம்ஸ் நிறுவனத்தினர். கட்டுமானத் தொழிலுக்கான இயந்திரங்கள், சாதனங்களை உருவாக்கி அளிப்பதில் இவர்கள் உலகப் புகழ் பெற்றவர்கள்.  இப்போது இவர்களது தயாரிப்புகள் இந்தியாவிலும் கிடைக்கத் தொடங்கிவிட்டன.

எந்த வேலைக்கு ஏற்றது?

அலுமினியம் டெலஸ்கோப்பிக் ஃப்ளையிங் ஃப்ரேம்களைப் பலவிதமான வேலைகளுக்கும் பயன்படுத்தலாம். அதிக எண்ணிக்கையிலான தளங்களைக் கொண்ட மாடிக் கட்டுமானங்களுக்கு இவை பெரிதும் பொருத்தமானவை. அடிப்படைக் கட்டமைப்புத் தேவைகளை நிறைவேற்றுவதற்காகப் பெரிய அளவில் மேற்கொள்ளப்படும் பணிகளுக்கும் இவை பேருதவியாக இருக்கும்.
தனித் தனி பாகங்களைக் குறிப்பிட்ட வகையில் இணைத்தால் போதும். எல்லாம் நொடியில் தயாராகிவிடும். இந்த வகையில் செயல்படும்போது ஒரு வேலையை முடித்துவிட்டு அடுத்த வேலையைத் துவக்குவதற்கு உரிய கால இடைவெளி மிக மிகக் குறைவாகவே ஆகும். எடை குறைவான பாகங்கள் என்பதால் இணைப்பு வேலைகளில் ஈடுபடும் தொழிலாளர்களும் களைப்பின்றிப் பணியாற்ற முடியும். வேகமாகவும் செய்து முடித்துவிடலாம்.

தளங்களின் உயரங்கள் எப்படி வேண்டுமானாலும் இருந்துவிட்டுப் போகட்டும். அதேபோல், கட்டட வடிவமைப்பும் சிக்கலானதாகவும் இருக்கலாம். அலுமினியம் டெலஸ்கோப்பிக் ஃப்ளையிங் ஃப்ரேம்கள் உங்கள் வேலைகளை எளிதாக்குகின்றன.
வழக்கமான முறையில் அமைக்கப்படும் கட்டடத் தளங்களிலும், வழக்கத்திற்கு
மாறான தளங்களிலும் கூட இவற்றைப் பயன்படுத்த முடியும். பல கட்டடங்களில் தளங்களின் உயரம் ஒரே மாதிரியாக அமைவது கிடையாது. அம்மாதிரியான கட்டுமானங்களில் சிரமமே இல்லாமல் வேலைகளைச் செய்வதற்கு
அலுமினியம் டெலஸ்கோப்பிக் ஃப்ளையிங் ஃப்ரேம்களே ஏற்றவை.

தேவைப்படும் நீளம் அல்லது உயரத்திற்கு மாற்றி  அமைத்துக் கொள்ள இவற்றி ல் உள்ள பின்களை வெளியில் இழுத்தாலே போதும். சரிக்கட்டிக் கொள்ளலாம். தேவைப்படும் உயரத்தை எட்டிய பிறகு பின்களை அவற்றின் இடத்தில் பொருத்தினால் வேலை முடிந்தது.
உலகப் புகழ் பெற்ற வேர்ல்ட் ட்ரேட் சென்டரைக் கட்டியவர்கள் யார் என்று தெரியுமா? கால்லவினோ குழுமம் என்ற நிறுவனம்தான். அவர்கள்தான் கனடாவில் உள்ள டொரன்டோ நகரில் ஒரு கட்டுமானத் திட்டத்தை நிறைவேற்றி  வருகிறார்கள். இங்கும் இவர்கள் அடுத்தடுத்த வேலைகளை மூன்றே நாட்கள் இடைவெளியில் மேற்கொள்வதற்கு அலுமினியம் டெலஸ்கோப்பிக் ஃப்ளையிங் ஃப்ரேம்களே உதவி இருக்கின்றன.

இந்தியாவிலும் கூட இதே மாதிரியான வேகத்தில் கட்டுமானவேலைகளை முடிக்க முடியும். எல் அண்ட் டி நிறுவனத்திற்கான கட்டுமானம் ஒன்றில் அடுத்தடுத்த வேலைகளை ஐந்து நாள் இடை வெளியில் முடிக்க முடிந்திருக்கிறது.
வெகு வேகமாக முடித்துவிட முடியும் என்பதால் காலமும் மிச்சமாகும். இது மறைமுக இலாபத்திற்கு வழி வகுக்கும். செலவு அடிப்படையில் கடுமையான சிக்கனத்திற்கு உதவும். மிகக் குறைந்த எண்ணிக்கையிலான ஆட்களே போதும். பிரித்தெடுக்கும் வேலைகளை விரைவாகச் செய்துவிடலாம்.பாகங்களின் எடை மிகவும் குறைவாக இருப்பதால் கிரேன்களைப் பயன்படுத்த வேண்டிய நேரமும் குறைவாகவே ஆகும். கிரேன்களுக்கான வாடகை, இயக்கச் செலவு ஆகியவையும் குறைவாகவே ஆகும்.

பொருள் ஒன்று பயன் இரண்டு ஜெட்ரிவால் ஒட்டுபசை !..


ஒட்டுப்பசைகளை ஒட்டுகிற தேவைகளுக்கு மட்டும்தான் பயன்படுத்த முடியும் என்பது உங்கள் எண்ணமாக இருக்கலாம். இல்லை.
அதே பசையை நீர்க்கசிவைத் தடுப்பதற்குரிய பொருளாகவும் பயன்படுத்தலாம்.
இதில் கிடைக்கும் நன்மைகள் : ஜெட்ரிவால் ஒட்டுப்பசையைக் கொண்டு செராமிக்(பீங்கான்) ஓடுகளை ஒட்டுவது எளிதானது. பிடி
மானமும் உறுதியாக இருக்கும். சிறு சிறு இடைவெளிகள், காலி இடங்களில் பழுதுபார்ப்பு, அலங்கரிப்பு நோக்கிலான ஒட்டு வேலைகளைச் செய்வதற்கும் இதைப் பயன்படுத்தலாம்.
மின்சாரத்தைக் கடத்த அனுமதிக்காத வகையில் அமைக்கப்பட வேண்டிய தட்டையான பலகைகளை ஒட்டுவதற்கும் இது பொருத்தமானது.வழக்கமான ஒட்டு வேலைகளுக்கு 15 முதல் 20 மி.மீ கனத்திலான ஒட்டுப்பரப்பு தேவைப்படும். ஜெட்ரிவால் ஒட்டுப்பசையை ஒரு மி.மீ கனத்திற்குப் பரப்பினாலே போதும். உறுதி ஒட்டு உறுதி.

எப்படிப் பயன்படுத்துவது?

ஜெட்ரிவால் ஒட்டுப்பசையை எப்படிப் பயன்படுத்துவது என்பதைக் கவனமாகக் கேட்டுக் கொள்ளுங்கள். மாற்றிச் செய்து விட்டு மாட்டிக் கொள்ளக் கூடாது.கடைகளில் வாங்கி வரும் ஜெட்ரிவால் ஒட்டுப்பசையைத் தண்ணீருடன் சேர்க்க வேண்டும். தண்ணீரை இதனுடன் சேர்க்கும் வேலையைத் தவிர்க்க வேண்டியது முக்கியமாகக் கவனத்தில் கொள்ளப்பட வேண்டியதாகும். இப்படிச் சேர்த்துக் கொண்டே வரும் போது ஓரளவு திடமான பசை வரும் நிலையில் நிறுத்திக் கொள்ள வேண்டும்.தண்ணீரில் ஜெட்ரிவால் ஒட்டுப்பசையைக் கலந்த பிறகு சுமார் பத்து நிமிடங்கள் வரை அப்படியே வைத்து இருங்கள். அவ்வாறு வைத்திருந்த பிறகே பயன்படுத்த ஆரம்பிக்க வேண்டும். வழக்கமான  கொலுத்துக் கரண்டிகளைப் பயன்படுத்தலாம். கலவையைத் தேவைப்படும் இடத்தில் பரப்பிய பின் பொழியப்பட்ட கரண்டியைக் கொண்டு தேய்த்துவிட வேண்டும். இது ஜெட்ரிவால் ஒட்டுப்பசையைச் சிக்கனமாகப் பரப்ப உதவும்.  அதிகப்படி பசையைத் தேய்த்து எடுத்துக்கொண்டு வந்துவிடும்.

கலவையின் மேல் ஓடுகளை அழுத்திக்கொண்டு இலேசாகச் சுழற்றிக் கொடுக்க வேண்டும்.  ஒட்டப்படுவதற்கு முன் ஓடுகளையும், ஒட்டப்பட வேண்டிய பகுதிகளையும் நனைக்க வேண்டிய அவசியம் இல்லை.
ஓடுகளைப் பதித்தபின் கரண்டிக் காம்பால் தட்டிக் கொடுக்கும் வேலைக்கும் தேவை இல்லை.  வழக்கமான ஒட்டு வேலைகளில் பின்பற்றப்படும் இம்மாதிரியான பல தேவைகளைத் தவிர்க்க முடியும் என்பதால் ஓடுகள் சிதைந்து வீணாவது குறையும். சிக்கனம் கிடைக்கும். நேரமும் உழைப்பும் கூலியும் மிச்சமாகும்.  வழக்கமான முறையில் ஓடு ஒட்டும் வேலைகளை மேற்கொள்வதைப் போல் இரண்டு முதல் மூன்று மடங்கு அதிகப்படி வேலைகளை அதே நேர அளவிற்குள் முடித்துவிடலாம்.

ஒட்டும் தன்மை உறுதி மிக்கதாக இருக்கும். தண்ணீர்க் கசிவிற்கு இடமிருக்காது. ஒட்டப்படும் ஓடுகளுக்கு இடையே ஏற்படக் கூடிய இடைவெளிகளை அடைக்க ஜெட்ரிவால் ஒட்டுப்பசை எஃப்எம் என்பதைப் பயன்படுத்தலாம்.இந்த வேலையைச் செய்து முடிக்க வெள்ளை நிறப் பசையைப் பயன்படுத்த வேண்டி வரும். ஒட்டப்பட்ட ஓடுகளின் நிறத்துடன் இது மாறு
பட்டு இருக்குமே.. அழகைக் கெடுக்குமே என்றும் கவலைப்படத் தேவையில்லை.ஓட்டின் நிறத்தைப் போலவே ஒட்டுஇடைவெளிகளையும் நிறமேற்றிவிட முடியும். இதற்குப் பல வித வண்ணங்களில் ஸ்டெயினர்கள் கிடைக்கின்றன.

மாடர்ன் தொழிற்நுட்பம் மாடுலர் பேனல் சிஸ்டம் !



கட்டுமான உத்திகளுள் குறிப்பிடத் தக்கது எம்பிஎஸ் என்னும் முறை. மாடுலர் பேனல் சிஸ்டம்  (Modular
Pannel System)  என்பதைத்தான் சுருக்கமாக எம்பிஎஸ் என்று குறிப்பிடுகிறார்கள். மேற்கு ஜெர்மனியைச் சேர்ந்த பாஸ்சல் நிறுவனம் இத்தகைய எம்பிஎஸ் முறையை இந்தியாவில் அறிமுகம் செய்கிறது. இவர்களது தயாரிப்புகளுக்கு உலகெங்கும் பெரும் வரவேற்பு உண்டு. இந்தியாவிலும் இவர்களது சேவை தேவை என்று பல வாடிக்கையாளர்கள் வற்புறுத்தி வந்தார்கள். இந்தக் கோரிக்கையை ஏற்று பாஸ்சல் நிறுவனம் தனது கிளையை ஹைதராபாத்தில் உள்ள ஜூபிலி ஹில்ஸில் துவக்கி இருக்கிறது. இவர்களது உற்பத்தி ஆலை விசாகப்பட்டினத்தில் இயங்கி வருகிறது.

சிறப்பம்சங்கள்:

எம்பிஎஸ் வெவ்வேறு அளவுகளைக் கொண்ட பேனல்களைத் தயாரித்துத் தருகிறது.  இவை உறுதி மிக்கவை. நீடித்து உழைக்கக் கூடியவை. இவற்றைத்  தயாரிப்பதற்கு 6 மி.மீ தடிமன் கொண்ட இரும்புத் தகடுகளைப் பயன்படுத்துகிறார்கள். இவை எளிதில் அரிப்பிற்குள்ளாகாத உயர்ந்த தரம் உடையவை. இந்தப் பாளங்களின் முகப்புப் பகுதியில் தரம் உயர்ந்த பின்லாந்து நாட்டின் பிர்ச் மர பிளைவுட் பலகைகளைப் பொருத்தி இருக்கிறார்கள்.  கன மீட்டருக்கு 780 கிலோ என்ற அளவிலான அடர்த்தி கொண்டவை இவை.  ஆகவே உறுதிக்குக் குறைவில்லை.
இந்தப் பிளைவுட் பலகைகளின் மேற்புறத்தில் பீனால் அடிப்படையிலான பிசினைக் கொண்ட பூச்சும் கொடுக்கப்பட்டிருக்கிறது.பிளைவுட் பகுதிகளின் விளிம்புகள் சேதம் அடைந்துவிடாமல் இருப்பதற்காக இரும்புத் தகடுகளைக் கொண்டு மூடப்பட்டுள்ளன.
மேலும் ஒரு பேனலுக்கும் மற்றொரு பேனலுக்கும் சட்டங்கள் மற்றும் புறப்பரப்பிற்கு இடையில் இடைவெளியை அடைக்கத்தக்க விதத்தில் பொருத்தமான நிரப்பிகளையும் பயன்படுத்துகிறார்கள். இதனால் இணைப்புகளுக்கு இடையில் கசிவே ஏற்படாது.இந்த வகைப் பேனல்களை அதிகத் தடவைகளுக்கு மீண்டும் மீண்டும் பயன்படுத்தலாம்.  சுமார் 300 தடவைகள் வரை பயன்படுத்த முடியும் என்பது நிரூபிக்கப்பட்ட உண்மை. சட்டங்கள் இரும்பினால் ஆனவை என்பதால் அவற்றின் ஆயுளும் நீண்ட காலம் நீடிக்கும்.
நேரான சுவர்கள், வட்ட வடிவச் சுவர்கள்,கிணறு போன்ற பள்ளம், தூண் எதை வேண்டுமானாலும் எம்பிஎஸ் மூலம் உருவாக்கலாம். கான்கிரீட்டைக் கலந்ததும் உடனடியாகக் கொட்டிக் கட்டுமானத்தை உருவாக்க வேண்டிய தேவை உள்ள எந்த வேலைக்கும் இந்த தொழிற்நுட்பம் ஏற்றது.

அடிப்படைக் கட்டமைப்பு வசதிகளை உருவாக்கும் பெரிய பெரிய திட்டங்களுக்கு இந்த முறையைப்பின்பற்றுவது பெரிதும் பலனளிக்கும். பெரிய தொழிற்சாலைகள், நீர் சுத்திகரிப்பு ஆலைகள், கால்வாய்கள், பாலங்கள், அணைகள் என எதை
வேண்டுமானாலும் கட்டுவதற்கு எம்பிஎஸ் ஏற்ற முறையாக இருக்கும்.

சோலார் பெயிண்டும் சோலார் கொடியும் !


ஒவ்வொரு வீட்டிலும் சோலார் மின்சாரம் தயாரிக்க அரசு மற்றும் சமூக ஆர்வலர்கள் வற்புறுத்தினாலும், அது நடைமுறையில் பொருளாதார சிக்கல்களை உடையதாக இருப்பதால் பெரும்பாலும் பரவலாக்கப்படாமல் இருக்கிறது.ஆனால், தற்போது கட்டுமானத்துறையில் பரபரப்பாக பேசப்படுவது திரவ நிலையில் சோலார் பேனல்கள்.
அதாவது,சோலார் பெயிண்டுகள் மூலம் மின்சாரம் தயாரிப்பது பற்றிதான்.

சூரிய ஒளியில் இருந்து மின்சாரம் தயாரிக்கும் சோலார் பேனல்களை திரவ வடிவில் உருவாக்கும் காலம் வெகு தொலைவில் இல்லை.தரையிலும்,சுவரிலும் சோலார் பேனல் பெயின்டை அடித்தால் வீட்டுக்கு வீடு, தரைக்கு தரை, சுவருக்கு சுவர் மின் உற்பத்தி நடக்கும் என்கின்றனர் விஞ்ஞானிகள்.இதுபற்றி அமெரிக்காவின் நியூயார்க் மாநிலத்தில் உள்ள பஃபல்லோ பல்கலைக்கழக எலெக்ட்ரிகல் இன்ஜினியரிங் துறை பேராசிரியரும், ஆராய்ச்சியாளருமான கியாவ்கியாங் கான் கூறியபோது:

  “ஒளி ஆற்றலை மின்சாரமாக மாற்றும் திறன் பெற்ற சோலார் செல்களின் தொகுப்புதான் சோலார் பேனல் எனப்படுகிறது. பொதுவாக பாலி கிரிஸ்டலைன் சிலிகானை கொண்டுதான் இந்த பேனல் உருவாக்கப்படுகிறது. மெலிதான பிலிம் போல பேனலை தயாரிப்பதென்றால்  அதிகசெலவு ஏற்படுத்தக்கூடியவை. குறைந்த செலவிலான சோலார் பேனல்களை உருவாக்கும் முயற்சி உலகம் முழுக்க நடக்கிறது. அந்த வகையில் பிளாஸ்மோனிக் தன்மை கொண்ட ஆர்கானிக் வகை பொருட்களை சோலார் பேனலாக பயன்படுத்தினால் அதிக மின் உற்பத்தி செய்ய முடியும், செலவும் குறைவு என கண்டறியப்பட்டுள்ளது.மேலும், இது திரவ வடிவில் இருப்பதால் பயன்படுத்துவதும் எளிது. திரவ வடிவில் இருக்கும் சோலார் பேனலை சுவர், தரை என எந்த பகுதியிலும் பெயின்ட் போல எளிதில் பூச முடியும். வெளிச்சம் கிடைக்கும் எல்லா இடத்திலும் இந்த பெயின்ட் அடித்தால் மின் உற்பத்தியும் அதிகளவில் நடக்கும். இது மட்டுமன்றி, கார்பனை அடிப்படையாக கொண்ட சிறு மூலக்கூறுகள், பாலிமர்கள் ஆகியவற்றை பயன்படுத்தி பிலிம் வகை சோலார் பேனல் உருவாக்கும் முயற்சியிலும் ஈடுபட்டுள்ளோம். இவற்றையும் குறைந்த செலவில் தயாரிக்க முடியும்” என்று
கியாவ்கியாங் கான் கூறினார்.

இது ஒருபுறம் இருக்க, நியூயார்க்கில் இன்னொரு குழுவினர் சோலார் கொடிகள் மூலம் மின்சாரம் தயாரிக்கும் கண்டுபிடிப்பில் வெற்றி கண்டுள்ளனர். ஏராளமான செயற்கை இலைகளை கொண்டு கொடிகளாக தயாரிக்கப்பட்டுள்ள இதற்கு ‘சோலார் ஐவி’ என்று பெயரிடப்பட்டுள்ளது.இந்த கொடிகளை வீட்டு வெளிப்புற சுவர்களில் படரவிட்டால் போதும். இயற்கையான கொடிகளை போன்று கண்ணைக் கவரும் விதமாக அழகாக படர்ந்திருக்கும். வீட்டுக்குத் தேவையான மின்சாரத் தேவையையும் இதன் மூலம் பூர்த்தி செய்து கொள்ளலாம். இதில் நுண்ணிய போட்டோவோல்டெய்க் பேனல்கள் என்ற தகடுகள் பொருத்தப்பட்டிருக்கும். இவை சூரிய ஒளியில் இருந்து மின்சாரத்தை உற்பத்தி செய்யும். தேவைப்படும் மின்சாரத்துக்கு ஏற்ப கொடிகளை படரவிடலாம். பல வண்ணங்களிலும், வடிவங்களிலும் கொடிகள் கிடைக்கும். இதனால் எந்த பாதிப்புகளும் இருக்காது. இறுதிகட்ட ஒப்புதலையடுத்து விரைவில் பயன்பாட்டுக்கு வர உள்ளது.

உங்கள் வீட்டு கூரை பாதுகாப்பானதா?



நமது வீட்டுக்கூரை அமைக்கும்போது முக்கியமான சில விஷயங்களை அலசி ஆராய்வோம்.வெப்பத்தைத் தடுக்க வேண்டும். நீர்க்கசிவு இருக்கக்கூடாது. கரைகள் ஏற்படுத்தக்கூடாது, பாசிகள் படரக்கூடாது, முக்கியமாக வழுக்கக்கூடாது. ஆனால், நாம் வாங்கும் கூரை கட்டுமான பொருட்களுக்கு (டைல்ஸ்) இவற்றில் ஒரு தன்மை இருந்தால், இன்னொரு தன்மை இருக்காது. ஆனால், இந்த அனைத்து தன்மைகளும் ஒருங்கே பெற்ற புதிய டைல்தான் ரூஃப் ப்ளஸ் டைல்கள்.

100 சதவீத வெதரிங் கோர்ஸ் டைலான ரூஃப் ப்ளஸ் டைல்களைத் தயாரித்து அளிக்கும் ராசி டைல்ஸ் நிறுவனத்தின் உரிமையாளரான
திரு.சந்திரசேகரை கேட்ட போது  ‘‘வீடு கட்டும் சாதாரண மக்கள் தங்கள் கூரைகளை பாதுகாப்பாக அமைக்கத் தவறி விடுகிறார்கள். கூரை என்பது வெப்பத்தை தடுப்பதற்கும், நீர்க்கசிவு ஏற்படாமல் காப்பதற்கும் மட்டுமல்ல, ஒட்டுமொத்த கட்டிடத்தின் உறுதியை
காப்பாதாக அமைய வேண்டும். அதாவது, சாதாரண கூரை தளங்கள் 1 ச.அடிக்கு 15 முதல் 17 கிலோ எடையுள்ளதாகவும், அதுவே மழைக்காலத்தில் 20 கிலோ எடையுள்ளதாகவும் கனக்கிறது. ஆனால், ரூஃப் டைல்கள் கொண்டு கூரை அமைக்கும்போது எல்லா காலங்களிலும் அதிகபட்சம் 7 கிலோவிற்கு மேல் கனம் இருக்காது.
எனவே, கட்டிடத்திற்குத் தேவையற்ற கனத்தை கொடுக்காததும், சூடான வெப்பக் கதிர்களை உள் வாங்காததும், அறைகளின் குளுமையை வெளியே கடத்தாததும், நீர்க்கசிவிற்கு ஒரு துளியும் இடம் கொடுக்காததுமான வெகு சிக்கனமிக்க பசுமைக்கட்டிட பொருளான ரூஃப் ப்ளஸ் டைல்கள் உங்களுக்கு மிகச் சிறந்த பாதுகாப்பான கூரையை தரும் என்பதில்
ஐயமில்லை’’.

கூரைகளுக்கு ரூஃப் ப்ளஸ் டைல்களை பொருத்தும் முறை பற்றி...
‘‘பழங்காலம் போல, சுண்ணாம்பு பவுடர், கடுக்காய் போன்ற பல பொருட்களைக் கொண்டு நாள் கணக்கில் வெதரிங் கோர்ஸ் அமைக்க இனியும் தேவை இருக்காது. சாதாரண கான்கிரீட் தளம் மீது நமது டைல்களை அமைக்கலாம். முதலில் ரூஃப் ப்ளஸ் டைல்களை சுத்தமான நீரில் 20 நிமிடங்கள் ஊற வைத்துவிட வேண்டும். தளங்களின் மேற்பரப்பை சீர்படுத்தி, சிமெண்ட் கலவையை பூச வேண்டும். (எங்களிடம் உள்ள விசேஷ மான ரசாயன பூச்சை டைல்களின் இடையில் கிரௌட்டிங் மீது பூசிவிட்டால் நீர்க்கசிவு இருக்காது).

   பிறகு ரூஃப் ப்ளஸ்டைல்களை ஒட்டிவிட்டால் அவ்வளவு தான், வேலை முடிந்தது’’ என்றார்.
ஐ.ஜி.பி.சி (இந்தியன் கிரீன் பில்டிங் ஹவுசிங்) சான்றிதழ் பெற்ற இந்த ரூஃப் ப்ளஸ் டைல்கள் ஒரு சதுர அடி அளவில் பல வண்ணங்களில் கிடைக்கின்றன என்பதாலும், கூரைகளில் பொருத்துவது எளிது என்பதாலும் இதற்கு அதிக அளவு வரவேற்பு உள்ளது.
கட்டுநர்கள் தங்களது புராஜெக்டுகளில் பயன்படுத்த மிகவும் உகந்தது  ரூஃப் ப்ளஸ் டைல்ஸ்கள் என்பதோடு அதிக எண்ணிக்கையில் கொள்முதல் செய்யும் கட்டுநர்களுக்கு வெகு சிக்கன விலையில் கிடைக்கிறது ரூஃப் ப்ளஸ் டைல்கள்.