தமிழக கட்டுமானத்துறையில் போலி பொறியாளர்கள் !


எல்லா தரமான பொருட்களுக்குமே அதன் முதல் எதிரி அதே பெயரில் வெளியாகும் போலி தயாரிப்புகள்தான். எலெக்ட்ரானிக் சாதனங்கள், மின்னணு கருவிகள், உதிரி பாகங்கள், மருந்து மாத்திரைகள் தொடங்கி தண்ணீர் பாக்கெட் வரை நம் நாட்டில் போலிகளின் ராஜ்ஜியமே மேலோங்கி நிற்கிறது. போலி மருத்துவர்கள், போலி வக்கீல்கள், இவர்களுக்கும் இங்கு பஞ்சமில்லை.

அதே போன்று, போலி சிவில் இன்ஜினியர்களும் உருவாகத் துவங்கி தற்போது நமது கட்டுமானத்துறையில் ஏறத்தாழ 40 சதவிகிதம் போலி இன்ஜினியர்கள் நிறைந்திருக்கிறார்கள் என்பது வெளியே வராத செய்தி.

 தரமற்ற கட்டுமானங்களை உருவாக்கி, சிவில் பொறியியலுக்கு களங்கத்தைக் கற்பிக்கும் இந்த போலி பொறியாளர்கள் எவ்வாறு உருவாகிறார்கள்? எப்படி கட்டுமானத்துறையில் ஊடுறுவுகிறார்கள்? என தமிழகம் மற்றும் புதுவை கட்டிட பொறியாளர் சங்க கூட்டமைப்பின் (FACEAT) புதிய தலைவராக நியமனம் பெற்றிருக்கும் பொறி . எஸ். ராஜேந்திரன் அவர்களைக் கேட்டோம்.

 “பொறியியல் கல்வி படித்திராதவர்கள், அக்கல்வியை இடைநிறுத்தம் செய்தவர்கள், வேறுதுறை படித்தவர்கள், கைவசம் கொஞ்சம் பணத்தை வைத்திருப்பவர்கள், குறுகிய காலத்தில் கட்டுமானத்துறையில் பன்மடங்கு லாபம் பெற்று விடலாம் என்கிற எண்ணத்தில் இத்துறையில் நுழைகிறார்கள். இவர்கள் வாடிக்கையாளர்களுக்கு நம்பிக்கை ஏற்படுத்தும் வகையில் தங்களை அறிமுகப்படுத்திக் கொண்டு, தான் ஒரு கட்டுமான புராஜெக்டை மட்டும் கட்டிவிட்டு, பல கட்டுமான புராஜெக்டுகளை முடித்திருக்கிறேன் என்று பொய்யான தகவல்களைக் கூறி கட்டுமானப் பணிகளை புதிதாக பெற்றுவிடுகிறார்கள்.

 இத்துறையில் 40 சதவிகிதத்திற்கு மேற்பட்ட போலி பொறியாளர்கள் இருக்கிறார்கள் என்பது வேதனையாக இருக்கிறது. பல லட்சம் அல்லது பல கோடி முதலீடு செய்து கட்டப்படும் கட்டுமானங்களை அத்துறையில் முறையாக தேர்ச்சி பெற்ற ஒரு பொறியாளரிடம் ஒப்படைக்க வேண்டும் என்கிற அடிப்படை சிந்தனை பொதுமக்களிடையே இல்லை. இது ஒரு கட்டிடம்தானே என்று அலட்சியமாக நினைத்து கட்டிடப் பணிகளை ஒரு சாதாரண மேஸ்திரியிடமோ அல்லது குறைந்த அனுபவமே உள்ள ஒரு போலி பொறியாளரிடமோ ஒப்படைத்து விடுகிறார்கள்.

 இது போன்ற போலி பொறியாளர்களிடமோ, மேஸ்திரியிடமோ கட்டுமானப்பணிகளை ஒப்படைத்தால், அவர்களால் கட்டப்படும் கட்டுமானங்கள் குறுகிய காலத்தில் சிதிலமடைந்து பாழாகிவிடும். நீண்ட ஆயுள் கொண்டு நிலைபெற்ற கட்டிடங்களாக இருப்பதற்கு வாய்ப்பில்லாமல் போய்விடும். ஏனெனில், மண் பரிசோதனை, நிலத்தடி நீர் பரிசோதனை, அஸ்திவாரப் பணிகளில் கலவை முறைகள், அதற்குண்டான சரியான விகிதங்கள், எந்த வகையான மண்ணுக்கு எந்த வகையான அடித்தளம் அமைப்பது போன்ற முதற்கட்டப் பணிகளை முறைப்படி செய்யமாட்டார்கள்.

அவர்களுக்குத் தெரிந்த ஒரே முறையையே எல்லா கட்டுமானங்களிலும் பயன்படுத்து வார்கள். அடுத்தகட்ட பணிகளான காலம், பில்லர், கான்கிரீட் தளம், சென்ட்ரிங் ஒர்க் போன்ற பணிகளுக்கு எந்த அளவில் கம்பிகளை வாங்க வேண்டும்? எப்படி பொருத்த வேண்டும்? ஒவ்வொரு ஜங்ஷனிலும் எந்த அளவுள்ள கம்பிகளை இணைக்க வேண்டும்? எந்த வகையான ஸ்டான்டர்ட் கம்பிகளை பயன்படுத்த வேண்டும்? போன்ற விவரங்களை ஒரு பொறியியல் படித்த, அனுபவம் மிக்க இன்ஜினியரால் மட்டுமே செயல்படுத்த முடியும். அவ்வாறில்லாமல், போலி பொறியாளரைக் கொண்டு அப்பணிகளை முடித்தால் இழப்பு பொதுமக்களாகிய நம் அனைவருக்கும்தான். கடைசிக்கட்ட பணிகளான எலெக்ட்ரிகல், பிளம்பிங், மரவேலைகள், பூச்சுவேலைகள், தரைகள் அமைத்தல், பெயிண்டிங் போன்றவற்றை ஒரு பொறியாளரின் மேற்பார்வையில்தான் செய்ய வேண்டும்.

அவ்வாறில்லாமல் போலி பொறியாளர்களின் மேற்பார்வையில் இப்பணிகளை செய்து முடித்தால் அக்கட்டிடம் முழுமை பெறாத கட்டிடமாகத்தான் இருக்கும். அகில இந்திய அளவில் மருத்துவ கவுன்சில் உள்ளது போல பொறியாளர் கவுன்சில் ஒன்றை ஏற்படுத்திவிட்டால், இத்துறையில் போலி பொறியாளர்கள் நுழைய முடியாது. எங்கள் சங்கத்தில் உறுப்பினராக இணையும்போதே அவர்களின் கல்விச் சான்றிதழ்களை சரி பார்த்து போலி பொறியாளர்களை புறக்கணித்து விடுவோம். அது மட்டுமின்றி, பொதுமக்களும் இந்த விஷயத்தில் விழிப்புணர்வுடன் இருந்தால்தான் முழுமையாக போலி பொறியாளர்களை இனம் கண்டு விரட்ட முடியும்.

       ஒரு கட்டிடத்தை கட்டுவதற்கு ஒரு பொறியாளரை அணுகும்போது, அவர் கட்டிடவியல் படித்து தேறியவரா? அவரால் முடிக்கப்பட்ட புராஜெக்டுகள் எத்தனை? அவற்றின் தரம், அவர் கட்டுமானத்துறை சம்பந்தப்பட்ட சங்கங்களில் உறுப்பினராக உள்ளாரா? போன்ற விவரங்களை விசாரித்து அறிந்த பின்னரே அவரிடம் கட்டுமானப் பணியை ஒப்படைக்க வேண்டும். இது போன்ற விவரங்களை நாம் முன்கூட்டியே தெரிந்து வைத்திருந்தால், போலி பொறியாளர்கள் யார் என்று சுலபமாக கண்டறிந்து விரட்டி விடலாம்”. சிவில் பொறியாளர்கள் போதிய படிப்பை படித்திருந்தும் திறமையற்றவர்களாக இருப்பதற்கு என்ன காரணம்? “கல்வியை முடித்த பிறகு பிரபலமான கட்டுமான நிறுவனங்களில் பணிபுரிந்தவர்கள் மற்றும் பல்வேறு வகையான புராஜெக்டுகளில் அனுபவம் பெற்றவர்கள் திறமையான பொறியாளர்களாக இருக்கிறார்கள். சில சிவில் பொறியாளர்கள் கல்வியை கற்று முடித்தவுடன் அதே கல்லூரியில் பணிநியமனம் செய்யப்படுகிறார்கள்.

அவர்கள் 60 சதவிகித பொறியியல் அறிவை மட்டுமே கொண்டிருக்கிறார்கள். அதில் அவர்கள் மாணவர்களுக்கு சொல்லித்தருவதோ 40 சதவிகிதம்தான். அதிலும் மாணவர் கள் உட்கிரகிப்பது 20 சதவிகிதம் தான். கட்டுமானத்துறையில் வெளி இடங்களுக்குச் சென்று அத்துறையின் நுணுக்கங்களை அறிந்திராதவர்கள் எப்படி திறமையாக மாணவர்களுக்குக் கற்றுத் தர முடியும்? படிப்பறிவோடு கூடிய அனுபவ அறிவும் இருந்தால்தான் ஒரு சிவில் பொறியியல் மாணவர் எதிர்காலத்தில் திறமையுள்ள, அனுபவமிக்க பொறியாளராகத் திகழ முடியும்” என்றார் பொறி. எஸ். ராஜேந்திரன்.

 சென்னை கட்டிடப் பொறியாளர் சங்கத்தின் தலைவர் பொறி. லு. வெங்கடாசலம் அவர்களை கேட்டபோது:

      “பொறியாளர் இல்லாமல் கட்டிடம் கட்டுவது போலி மருத்துவரிடம் உடல்நலம் பற்றி கேட்பது போலாகும்.ஒரு கட்டிடம் கட்டுவதாக இருந்தால் ஒரு சிவில் பொறியாளரைக் கொண்டுதான் கட்ட வேண்டும்.கட்டிடம் கட்டினால் பொறியாளரைக் கொண்டுதான் கட்ட வேண்டும் என்கிற நம்பிக்கை மக்களிடையே இன்னும் வரவில்லை. தமிழகத்தைப் பொறுத்தவரை 60 சதவிகித மக்கள் மட்டும் தான் பொறியாளரைக் கொண்டு கட்டுகிறார்கள். இது மற்ற மாநிலங்களில் 75 சதவிகிதம் முதல் 85 சதவிகிதம் வரை பொறியாளரைக் கொண்டு கட்டிடப்பணிகள் நடைபெறுகின்றன.

     தமிழ்நாட்டில் இந்நிலை மாற வேண்டும். கட்டிடம் கட்டுவதற்கு முன் வாடிக்கையாளர் பொறியாளருடன் தரமான பொருட்களைக் கொண்டுதான் கட்டவேண்டும் என்ற நிபந்தனையுடன், அதற்கான தோராய மதிப்பீடு, கட்டுமானம் முடியும் தருவாயில் எவ்வளவு கூடுதல் தொகை செலவாகும் என்பது போன்ற விவரங்களை, தெளிவாக, ஒளிவுமறைவின்றி முறையான ஒப்பந்தம் செய்து கொண்டு பணிகளை மேற்கொள்ள வேண்டும்.

அப்போதுதான் வாடிக்கையாளர்களுக்கு நம்பிக்கை ஏற்படும். போலி பொறியாளருக்கு அனுபவம் மட்டுமே போதாது. போலி பொறியாளரிடம் ஒரு காலம், பீம் என்ன எடையைத் தாங்கும் என்று கேட்டால் அதன் விபரம் தெரியாது. சிமெண்ட் விகிதம் கேட்டால் தெரியாது. தரம் பற்றி கேட்டால் தெரியாது. ஆனால், ஒரு படித்தறிந்த, அனுபவமிக்க ஒரு பொறியாளரிடம் கேட்டால் அவர் துல்லியமாக இவ்விவரங்களைத் தெரிவிப்பார். போலி டாக்டர்களை கண்டுபிடிக்க அரசு உடனடியாக நடவடிக்கை எடுக்கிறது. ஆனால், தமிழகத்தில் எல்லா பகுதிகளிலும் கட்டுமானங்கள் தொடர்ந்து நடைபெற்று வருகின்றன. இப்பணிகள் பதிவுசெய்யப்பட்ட கட்டிடப் பொறியாளரைக் கொண்டு கட்டப்படுகிறதா? என்று கண்காணிப்பதற்கு குழு ஒன்றை அமைத்து அரசு முறையான நடவடிக்கை எடுக்க வேண்டும்.

எந்த ஒரு கட்டிடம் கட்டப்படும்போதும் பொறியாளரின் ஆலோசனைப்படிதான் கட்டுதல் வேண்டும் என்று சட்டம் இயற்றப்பட வேண்டும்” என்றார் பொறி. லு. வெங்கடாசலம். கட்டுமானத்துறையில் சிறிது காலம் அனுபவம் இருந்தாலே, தானும் ஒரு சிவில் பொறியாளர்தான் என்ற ரீதியில் உரிய சான்றிதழ்கள் இல்லாத, தரமில்லாத பல பொறியாளர்கள் உலவுவதற்கு கட்டுமானப் பொறியாளர்களின் பற்றாக்குறையும் ஒரு காரணம் என கூறப்படுகிறது.

     ஆகவே, மாணவர்கள் அதிக அளவில் கட்டுமானத்துறையை தேர்ந்தெடுப்பதோடு, பொதுமக்களும் தரமான, உண்மையான பொறியாளரிடம் தனது கனவு இல்லத்தை ஒப்படைப்பது மூலம் போலி பொறியாளர் பிரச்சினைக்கு முற்றுப்புள்ளி வைக்க முடியும்.