தூக்குங்க நகர்த்துங்க!ஜூன்-2013


அண்மையில் சென்னை வேளச்சேரியில் பள்ளத்தில் இருந்த ஒரு வீட்டை 6 அடி தூரம் தூக்கி கட்டி மறு சீரமைப்பு செய்திருந்தது ஒரு வட இந்திய தனியார் நிறுவனம். அதன் தொடர்ச்சியாக இன்னும் ஒரு படி மேலே போய் கோவையில் பெரிய பங்களா வீட்டை பாதியாக பிரித்து, அதில் ஒரு பாதியை 35 அடி தூரத்திற்கு நகர்த்தி சாதனை படைத்துள்ளது இன்னொரு தனியார் நிறுவனம். கோவை, சாய்பாபா காலனியில் உள்ள மூன்று தலைமுறை பழமையான மாடி வீடொன்று அதன் உள்ளே உள்ள அனைத்து பொருட்களுடனும் 35 அடி தூரம் நகர்த்தி வைக்கப்பட்டது. வீட்டை நகர்த்தும் இம் முயற்சியை ஹரியானாவைச் சேர்ந்த கட்டுமான கம்பெனி ஒன்று வெற்றிகரமாக செய்து முடித்துள்ளது. இது குறித்து அவ்வீட்டின் உரிமையாளரின் தந்தை ஆறுச்சாமி கூறியபோது, “கோவை மேட்டுப்பாளையம் சாலையில் எனது மகன் தங்கவேலுக்கு சொந்தமாக 2400 சதுர அடி பரப்பளவில் முதல் தளத்துடன் கூடிய வீடு உள்ளது. கடந்த 2000 ம் ஆண்டு கட்டப்பட்ட வீட்டின் தற்போதைய மதிப்பு ரூ.70 லட்சம் ஆகும். வீட்டின் முன்புறம் தங்கவேலுக்குச் சொந்தமாக உள்ள காலி இடத்தில் வணிக வளாகம் கட்ட முடிவு செய்யப்பட்டது. ஆனால், வணிக வளாகம் கட்டுவதற்கு 40 அடி அளவிற்கு இடப் பற்றாக்குறை ஏற்பட்டது. இதற்காக வீட்டை இடித்து புதிய வீடு கட்ட ரூ.1 கோடிக்கு மேல் செலவு ஆகும் என தெரிவிக்கப்பட்டது. இந்நிலையில், சில மாதங்களுக்கு முன்பு ஹரியானாவைச் சேர்ந்த டி.டி.பி.டி. நிறுவனத்தினர், சாய்பாபா காலனியில் உள்ள வீட்டை சில அடிகள் உயர்த்தினர். இதையடுத்து டி.டி.பி.டி. நிறுவனத்தை தொடர்பு கொண்டு கேட்டபோது, வீட்டை இடிக்காமல் எவ்வித பாதிப்பும் இன்றி இடமாற்றம் செய்ய அவர்கள் உறுதியளித்தனர். இதற்கு ரூ.20 லட்சம் வரை செலவாகும் எனவும் தெரிவித்தனர். எனவே, வீட்டை இடிக்காமல் இடமாற்றுவது என முடிவு செய்து, 300 ஜாக்கிகள் மூலம் சுமார் 1.5 அடிக்கு வீட்டை உயர்த்தி அஸ்திவாரத்தைத் துண்டித்து செங்கல் வைக்கப்பட்டது. பின்னர் 300 ரோலர்கள் பொருத்தப்பட்டு, ஒரு நாளைக்கு 3 முதல் 4 அடி வரை வீட்டை பின்னோக்கி நகர்த்தி வந்தனர். இந்த வீட்டின் கழிவுநீர் தொட்டி இணைப்பு மட்டும் துண்டிக்கப்பட்டுள்ளது. குடிநீர், மின்சாரம் உள்ளிட்ட இணைப்புகள் துண்டிக்கப்படவில்லை. ஜன்னல், கதவு போன்றவையும் அகற்றப்படவில்லை. தற்போது 15 பணியாளர்கள் உதவியுடன் 35 அடி தூரத்திற்கு வீடு நகர்த்தப்பட்டுள்ளது” என்றார். டி.டி.பி.டி.நிறுவனத்தின் நிர்வாக இயக்குநர் சுஷில் ஷிசோடியா கூறும்பொழுது, “வீட்டின் சுவர்களுக்கு பாதிப்பு இல்லாமல் 35 அடி தூரத்திற்கு நகர்த்தியுள்ளோம். இம்மாத (மே) இறுதிக்குள் 50 அடி தூரத்திற்கு நகர்த்தி, புதிதாக கட்டப்பட்டுள்ள அஸ்திவாரத்தில் வீடு நிலைநிறுத்தப்படும்” என்று தெரிவித்தார். இனிமேல் விரும்பிய வீட்டை விருப்பமான இடத்திற்கு இடம் பெயர்க்கலாம் போலும்!