ஆகாய நீர்வீழ்ச்சி !


ஒலிம்பிக் திருவிழா 2016ல் பிரேசிலில் நடக்கவிருக்கிறது என்பது அனைவரும் அறிந்ததுதான். ஒலிம்பிக் போட்டிகளை ஒட்டி, அதை நடத்தும் நாடுகள் ஸ்பெஷல் கட்டுமானங்களை உருவாக்குவது என்பது இப்பொழுது வாடிக்கையாகிவிட்டது.

சீனா துவங்கி வைத்ததை தற்போது பிரேசிலும் கடைபிடிக்க இருக்கிறது. பிரேசிலில் ரியோ டி ஜெனரியா என்கிற நகரில் ஒரு ஆகாய நீர்வீழ்ச்சி ஒன்றை உருவாக்க ஏற்பாடுகளைத் துவங்கியிருக்கிறது. ஆகாய நீர்வீழ்ச்சி என்றால் தூரத்தில் இருந்து பார்ப்பதற்கு ஆகாயத்திலிருந்து தண்ணீர் கொட்டுவது போலவே தோற்றத்தை ஏற்படுத்தும் நீர்வீழ்ச்சி இது.

கடல் மட்டத்திலிருந்து 60 மீட்டர் (ஏறக்குறைய 20 அடுக்குமாடிகளின் உயரத்திற்கு ஈடாகும்) உயரத்தில் இருந்து தண்ணீர் கொட்டும் கட்டுமானம் இது. முன்புறம் நீர்வீழ்ச்சியாகவும், பின்புறம் ஹோட்டல், ஷாப்பிங்மால், ஆடிட்டோரியம் போன்றவை உள்ளடக்கிய அதிசய கட்டுமானமாக இது விளங்கும். கடலிலிருந்து தண்ணீர் பம்ப் செய்யப்பட்டு உயரத்திற்கு கொண்டு செல்லப்பட்டு, அங்கிருந்து நீர்வீழ்ச்சியாக கொட்டுவதற்கு திட்டமிட்டிருக்கிறார்கள். இதற்கு நிறைய மின்சாரம் ஆகுமே எனக் கவலையில்லை.

இதன் முழு கட்டுமானத்திற்கும் சோலாரையே நம்பியிருக்கிறார்கள். உலகிலேயே கடல்நீரில் உருவாக்கப்படும் முதல் செயற்கை நீர்வீழ்ச்சி இது என்பதால், ஒலிம்பிக் முடிந்தபிறகும் உலகம் முழுக்க சுற்றுலாப் பயணிகளை இது ஈர்க்கும் என எதிர்பார்க்கப்படுகிறது. இருந்தாலும், பொருளாதார ரீதியாகவும்,
              தொழிற்நுட்ப ரீதியாகவும் சிரமங்கள் இருப்பதால் பிரேசில் அரசு 2016க்குள் இதன் கட்டுமானப் பணிகளை முடிக்க யோசித்து வருவதாகக் கேள்வி.