ஏறு முகத்தில் ஏ ஏ சி கான்கிரீட் !


ஒரே பொருளுக்கு இத்தனை பெயர்களா?
செல்லுலர் கான்கிரீட். இந்த ஒரு பொருளை எத்தனை விதமான பெயர்களில் குறிப்பிடுகிறார்கள் என்பது தெரியுமா உங்களுக்கு?

   ஏரேட்டட் கான்கிரீட் ஏர் க்யூர்ட் லைட் வெயிட் கான்கிரீட் ஆட்டோ க்ளேவ்ட் செல்லுலர் கான்கிரீட் செல்லுலர் லைட் வெயிட் கான்கிரீட் இத்தனை பெயர்களில் அழைக்கப்பட்டாலும் இது ஒரே பொருள்தான். செல்லுலர் கான்கிரீட் விரும்பித் தேர்ந்தெடுக்கப்படக் காரணம் என்ன? வெப்பம், தீ முதலியவற்றைத் தடுக்கும் திறனில் செல்லுலர் கான்கிரீட் முன்னணியில் நிற்கிறது. நீண்ட உழைப்பிற்கும் உத்தரவாதம் அளிப்பதாக இருக்கிறது.

        வேதிப் பொருட்களால் பாதிக்கப்படாத தன்மை இதற்கு அதிகம். இதற்கு முன்பு பயன்படுத்தப்பட்டு வந்த பிளாஸ்டிக் தன்மை கொண்ட கான்கிரீட் வகைகளைக் காட்டிலும் நான்கு மடங்கு இறுக்கத் திறன் கொண்டதாக செல்லுலர் கான்கிரீட் திகழ்கிறது. இதில் தீப்பற்றுவது கடினம். ஒலியின் வீச்சைக் குறைத்து அநேகமாக இல்லாமல் செய்துவிடும் தன்மையும் இதற்கு உண்டு. ஆற்றலை உள்ளிழுத்துக் கொள்ளும் குணமும் இருக்கிறது.

கட்டுமானத் தேவைகளுள் பலவற்றை நிறைவேற்றக் கூடிய ஒரே பொருளாக இருப்பதால் ஒவ்வொரு தேவைக்கும் ஒவ்வொரு பொருளைத் தேடிக் கொண்டிருக்க வேலை இல்லாமல் ஒன்றிலேயே பல தேவைகளை நிறைவேற்றிக் கொள்ள முடிவது செல்லுலர் கான்கிரீட்டின் சிறப்பு. இதனால்தான் செல்லுலர் கான்கிரீட் பெரிதும் விரும்பித் தேர்ந்தெடுக்கப்படுகிறது. கட்டுநர்கள் அளவில் மட்டுமல்லாமல் பொதுமக்களும் இதன் பயனை உணரத் தொடங்கியிருக்கிறார்கள். செல்லுலர் கான்கிரீட்டை எப்படித் தயாரிக்கிறார்கள்? எடை குறைவான கட்டுமானப் பொருள் என்று சொன்னதுமே எல்லோருக்கும் நினைவுக்கு வருவது செல்லுலர் கான்கிரீட்தான்.

இதைத் தயாரிக்க என்னென்ன பொருட்கள் தேவைப்படும்?

போர்ட்லண்ட் சிமென்ட். தண்ணீர். நுரைக்க வைக்கும் பொருட்கள். அழுத்தப்பட்ட காற்று. இத்தகைய பொருட்களைக் கொண்டு தயாரிக்கப்படும் செல்லுலர் கான்கிரீட் அதிக உறுதி கொண்டதாக இருக்கும். தண்ணீர் முக்கியச் சேர்மானப் பொருளாகப் பயன்படுத்தப்பட்ட போதிலும் தேவை முடிந்த பிறகு அதனை வடித்து நீக்கிவிடவும் வசதி கிடைக்கிறது. செல்லுலர் கான்கிரீட்டிற்கு மேலும் வலு சேர்ப்பதற்கு ஒட்டும் தன்மை அதிகம் உள்ள போஸலோன் என்று குறிப்பிடப்படும் பொருட்களைச் சேர்க்கலாம். அனல்மின் நிலையங்களில் நிலக்கரியை எரித்த பின் கழிவாக எஞ்சுகிற எரிசாம்பல் இத்தகைய தேவைகளுக்குப் பெரிதும் பயன்படுத்தப்படுகிறது.

சில வகை நார் இழைகளையும் கலந்து செல்லுலர் கான்கிரீட்டைத் தயாரிப்பார்கள். இவ்வாறு உருவாக்கப்படும் செல்லுலர் கான்கிரீட் அதிக உறுதி கொண்டதாகவும் நெகிழ் தன்மை தேவையான அளவுக்கு இருப்பதாகவும் விளங்கும். செல்லுலர் கான்கிரீட்டின் தனித்தன்மை மற்ற கான்கிரீட் வகைகளிலிருந்து செல்லுலர் கான்கிரீட் எப்படி வேறுபடுகிறது? வழக்கமாகக் கான்கிரீட் தயாரிப்பது என்றால் கண்டிப்பாக ஜல்லியும் மணலும் முக்கியத் தேவையாக இருக்கும். செல்லுலர் கான்கிரீட்டில் இந்த இரண்டு பொருட்களுமே கிடையாது. அதுதான் இதன் தனித் தன்மை என்று சொல்லலாம்.ஜல்லிகள், மணல் ஆகிய பொருட்கள் செய்யும் வேலையைக் காற்றுக் குமிழ்கள் செய்கின்றன. காற்றுக் குமிழ்கள், கான்கிரீட்டின் உட்பகுதியில் கொப்புளம், கொப்புளமாக இடத்தை நிரப்புகின்றன.

இதனால் ஒரு குறிப்பிட்ட கன அளவு கொண்ட கான்கிரீட்டின் எடை கணிசமாகக் குறைகிறது. உறுதியில் எந்தக் குறையும் இருப்பதில்லை. செல்லுலர் கான்கிரீட்டின் நுரை செல்லுலர் கான்கிரீட்டின் உட்பகுதியில் பெரும்பாலும் காற்றுக் குமிழ்களைக் கொண்ட நுரைதான் காணப்படும். நுரை என்றதுமே வலுவற்ற, எளிதில் அமிழ்ந்து அடங்கிவிடக் கூடிய நுரை வகைகளை மட்டுமே எடுத்துக் கொள்ளத் தேவையில்லை. நல்ல அடர்த்தி கொண்ட, வலுவான, நீடித்து நிற்கக் கூடிய நுரை வகைகள் தயாரிக்கப்படுகின்றன.

சிமென்ட்டைக் கொண்டு உருவாக்கப்படும் கசடு இதற்கு முக்கிய மூலப் பொருளாகப் பயன்படுத்தப்படுகிறது. செல்லுலர் கான்கிரீட் தயாரிப்பிற்கு ஏற்ற விதத்தில் நுரைத்தன்மையை உருவாக்குவதற்குப்பல வகைச் சாதனங்கள் பயன்படுத்தப்படுகின்றன. இவற்றைக் கொண்டு நுரைக்க வைப்பது ஒரு வழிமுறை. இதிலேயே இன்னொரு முறையும் இருக்கிறது. கான்கிரீட்டிற்குள் இருக்கக் கூடிய காலி இடங்களைப் பிளாஸ்டிக் வேதிப் பொருட்களால் நிரப்புவதுதான் அந்த இரண்டாவது முறை. விரிவாக்கப்பட்ட பாலிஸ்ட்ரீன் என்ற பொருளைக் கொண்டு கான்கிரீட்டின் உட்புறக் காலி இடங்களை நிரப்புவது இந்த உத்தியின் முக்கியப் பகுதி.மூன்றாவது வழியிலும் செல்லுலர் கான்கிரீட்டிற்குள் காற்றுக் குமிழ்களை ஏற்படுத்துவார்கள். இதற்கு அலுமினியப் பொடி பயன்படுத்தப்படுவது வழக்கம்.

 ஏஏசி கான்கிரீட் மற்றும் பிளாக்குகளை தயாரிக்க வழிவகை செய்யும் பயிற்சி மையங்கள் பெங்களூரிலும் வட மாநிலங்களிலும் ஏற்கனவே உருவாக்கப் பட்டுவிட்டன. தமிழ்நாட்டைப் பொறுத்தவரை ஒன்றிரண்டு பயிற்சி மையங்கள் உருவாகி வருகின்றன. வெகு சீக்கிரம் தமிழகத்தின் அனைத்து முக்கிய நகரங்களிலும் அமைந்து விடும். மற்ற வகை கான்கிரீட் ப்ளாக்குகளைப் போன்ற மிகப் பெரிய முதலீடும், நிலப்பரப்பும் இதற்கு தேவைப்படாது என்பதால் கட்டுநர்களும், கான்ட்ராக்டர்களும் உபதொழிலாகவே ஏஏசி கற்கள் தயாரிப்பினை மேற்கொள்ளலாம். செங்கற்களுக்கு சிறந்த மாற்றாக கருதப்படும் ஏஏசி கற்களை பொதுமக்களும் வரவேற்பர்.