ஆர்.எம்.சி .தரமான கான்கிரீட்டா ?


முன் காலத்தில் வீடு கட்ட தேவையான கலவை, கான்கிரீட் போன்ற பொருட்களை பணியிடத்திலேயே சேகரித்து தயாரிக்க வேண்டிய கட்டாயம் இருந்தது. இதனால் உண்டாகும் தூசியினால் உருவாகும் சுற்றுப்புற சூழ்நிலை மாசு அதிகமாக இருந்தது. வீடு கட்ட காலதாமதம் ஏற்பட்டதினால் பொருட்களின் தரமும் ஒரே விதமாக இருந்ததில்லை.

        சில நேரங்களில் தரம் வெகுவாக மாறுபட்டது. மேலும், இப்பொருட்களை சேகரிக்கும் நேரம், அலைச்சல் அதிகமாக இருந்தது. தொழிலாளர்களும் அதிக எண்ணிக்கையில் தேவைப்பட்டது. இவ்வாறான சிரமங்களை நீக்க ரெடிமிக்ஸ் மார்டர், ரெடிமிக்ஸ் கான்கிரீட் என்கிற கருத்து கட்டுமான வேலைகளில் அதிகமாக பரவிவிட்டது. ரெடிமிக்ஸ் கான்கிரீட் கம்பெனி சமீபத்திய சாதனங்களை தன்னுள்ளே அடக்கியிருக்க வேண்டும்.

அவையாவன: கான்கிரீட் பாட்சிங் பிளாண்ட், ட்ரான்சிட் மிக்சர், கான்கிரீட் பம்ப் முதலானவைகள். மேலும், கான்கிரீட்டை தயாரிப்பதற்கான மென்பொருட்கள் மற்றும் கன்ட்ரோலர்கள் ஆகியவைகளும் அடங்கும். ஆர்எம்சி கான்கிரீட் என்பது கனமீட்டர் என்கிற கொள்ளளவு கணக்கில்தான் வழங்கப்படுகின்றன. ஆர்எம்சி யை ஆர்எம்எக்ஸ் எனவும் குறிப்பிடுவர். வளர்ந்த நாடுகளில் தொழிலாளர் பற்றாக்குறை அதிகமாக உள்ளது. அவர்களுக்கு வழங்கப்படும் ஊதியமும் மிக அதிகமாக உள்ளது. ஆகவே, அங்கு எதையும் இயந்திரமயமாக்குதல் என்கிற கருத்து நிலவுகிறது. இதன் அடிப்படையில்தான் ஆர்எம்சி என்கிற ஓர் ஏற்பாடு உருவாயிற்று. கான்கிரீட் தயாரிப்பும் இயந்திர மயமாக்கப்பட்டது.

தற்போது நமது நாட்டில் இந்த நடைமுறை வெகுவாக பரவி விட்டதால், இதன் தரக்கட்டுபாட்டை கண்காணிக்க ரெடிமிக்ஸ் கான்கிரீட் மேனுஃபாக்சரர்ஸ் அசோசியேஷன் (RMCMA) என்கிற அமைப்பு மும்பையில் நிறுவப்பட்டுள்ளது. இவ்வமைப்பு இரு தரக்கட்டுப்பாடு கோட்பாடு நூலினை தொழிற்துறையும், மக்களும் பயன்பெறும் பொருட்டு வெளியிட்டுள்ளது. ஆர்எம்சி வியாபாரம் இந்தியாவில் தவழும் நிலையில்தான் உள்ளது. உதாரணத்திற்கு, ஜப்பான் போன்ற வளர்ந்த நாடுகளில் உற்பத்தியாகும் சிமெண்டில் 70 விழுக்காடுகள் ஆர்எம்சி வியாபாரத்திற்கு மட்டும் பயன்படுத்தப்படுகிறது. இதற்கு மாறாக இந்தியாவில் 2 விழுக்காடுகள் சிமெண்ட்தான் ஆர்எம்சி வியாபாரத்திற்கு பயன்படுத்தப்படுகிறது.

ஆர்எம்சி யின் நன்மைகள்

1. ஒரே சீரான, ஒரே பதமுள்ள மற்றும் உறுதி செய்யப்பட்ட நல்ல தரமான கான்கிரீட் கிடைக்கிறது.
2. கான்கிரீட் கலவை வடிவமைப்பில் ஓர் தளர்வு அல்லது சுதந்திர போக்கு கிடைக்கிறது.
3. மாற்று பொருட்களின் உடன் சேர்க்கைக்கான வசதி உள்ளது.
4. அதிக விரைவான மற்றும் துரிதமான கட்டுமானம் உருவாக வாய்ப்புள்ளது. 5. பணியிடத்தில் அடிப்படை பொருட்களை சேகரித்து வைப்பதில் உள்ள இடப்பற்றாக்குறைக்கு விடுதலை.
6. பணியிடத்தில் தேவையான இயந்திரங்களை வாங்கி நிறுத்தி வைப்பது அல்லது வாடகைக்கு எடுப்பது என்கிற நடைமுறை நீக்கப்படுகிறது.
7. அடிப்படை பொருட்கள் வீணாவது தடுக்கப்படுகிறது.
8. கான்கிரீட் தயாரிப்பில் ஈடுபடுத்தப்படும் அதிக எண்ணிக்கை தொழிலாளர்கள் நீக்கப்படுகின்றனர்.
9. பணியிடத்தில் கான்கிரீட் தயாரிப்பதற்கு அதிக நேரம் ஆகிறது. இது மிச்சப்படுகிறது.
10. ஒலி மற்றும் தூசி முதலான மாசு குறைகிறது.
11. பணியிடத்தில் வேலைகள் ஓர் ஒழுங்குமுறைக்கு உட்படுத்தப்படுகிறது.
12. கான்கிரீட்டின் கலவை மற்றும் அதன் பொருட்களின் அளவு துல்லியமாக இருக்கிறது.
13. சிமெண்ட், மணல், ஜல்லி, தண்ணீர் ஆகிய பொருட்களின் தரம் துல்லியமாக கட்டுப்படுத்தப்படுகிறது.
14. கலக்கும் தரம் மிக உயர்ந்த நிலையில் உள்ளது. ஏனெனில், இதில் மனித தவறு இல்லை.
15. தரக்கட்டுபாடு மிக துல்லியமாக ஒரே இடத்தில் நடைபெறுகிறது.
16. மூலப் பொருட்களை மோசமான முறையில் சேகரித்து வைத்தல்
17. சூழ்நிலையின் பாதிப்பினால் அவற்றின் தரம் குறைவது தடுக்கப்படுகிறது.
18. அதிகமான உயரத்திற்கு கான்கிரீட் பம்ப் செய்ய ஏதுவாக இருக்கிறது. இல்லையென்றால் தரையிலிருந்து அந்த உயரத்திற்கு சாரம் கட்டி ஏற்பாடு செய்ய வேண்டும்.
19. கான்கிரீட் தானாகவே மட்டப்படுத்தப்படுவதால் சமமான தரை ஏற்படுவதில் சுலபம்.
20. பணியிடத்தில் இருக்கும் வேலைகளின் நேரத்தில் மிச்சமும், குறைவும் உண்டாகிறது.
21. மோசமான தொழில் முறைகளால் உண்டாகும் கலக்கல், மோசமான பணியிடம் மற்றும் சேமிப்பிடம் ஆகிய காரணங்களால் உண்டாகும்

மூலப்பொருட்கள் வீணாவதை குறைப்பதற்கான வாய்ப்புகள் அதிகம். ஆர்எம்சி யினால் தீமைகள் ஆர்எம்சி கான்கிரீட்டினால் வாடிக்கையாளருக்கு சில தீமைகளும் உள்ளன :

1. மூலப்பொருட்கள் தொலைவிலுள்ள ஃபாக்டரியில் அளந்து எடுக்கப்பட்டு, அங்கேயே கலக்கப்பட்டு பின்பு ட்ரான்சிட் மிக்ஸர் மூலம் கொண்டு செல்லப்படுவதால் பிரயாண நேரம் இதில் முக்கியமான பங்கு வகிக்கிறது. அதிக தொலைவுக்கு எடுத்துச் செல்லப்படுவதால் கான்கிரீட்டின் தன்மை மாறுபட வாய்ப்புள்ளது.
2. இதனால் ஏற்படும் கூடுதலான போக்குவரத்து நெரிசல். மேலும், பணியிடத்திற்கு செல்லும் பாதையும், அதற்கு நடத்தி செல்லும் வழித்தடமும் ஆர்எம்சி யின் ட்ராக்டரின் அதிக பளுவை தாங்கும் சக்தி படைத்தவையாக இருக்க வேண்டும். இதில் ஒரு கன மீட்டர் சுமார் 2.5 டன் எடை என்பதை கவனத்தில் கொள்ள வேண்டும். ஆனாலும், குறுகலான சந்து பொந்துகளில் செல்வதற்கு மினிமிக்ஸ் என்கிற 4 கன மீட்டர் ட்ராக்டரை பயன்படுத்தி இந்த பிரச்சனையை ஓரளவிற்கு தீர்க்கலாம்.
3. கான்கிரீட் கலக்கல் மற்றும் ட்ரக்கில் வெளியே கொண்டு செல்லும் காரணிகளை கான்கிரீட்டின் மிக குறுகிய கால நேரத்தை கணக்கில் எடுத்துக் கொள்ளும்போது அதை சைட்டுக்கு கொண்டு சென்று 90 மணித்துளிகளில் இட்டு விட வேண்டும். இல்லை யென்றால் அந்த கான்கிரீட் வீணாகிறது. ஆனால், தற்போது கான்கிரீட்டின் செட்டிங் நேரத்தை அதிகரிக்க கெமிக்கல்கள் பயன்படுகின்றன. ஆனால் கெமிக்கல்களை பக்குவமாக பயன்படுத்த வேண்டும். இவ்வாறு பயன்படுத்தப்படும் கெமிக்கல்களை ரிடார்டர் என அழைப்பர். இதை அதிக அளவில் கலப்பதால் கான்கிரீட் செட்டாகாமல் ஈரப்பசையோடுதான் இருக்கும்.
4. தற்போது பரவலான கருத்து என்னவென்றால் ஆர்எம்சி கான்கிரீட் ஆரம்பத்திலேயே விரிசல்கள் அடைகின்றன என்பதுதான்.
5. பெரிய அளவில் கான்கிரீட் வேலை நடைபெறும்போது தொடர்ந்து சப்ளை நீடிக்க வேண்டும். போக்குவரத்து நெரிசல் மற்றும் விபத்து காரணமாக தாமதம் ஏற்பட்டால், போட்ட அனைத்து கான்கிரீட்டும் வீண்தான்.
6.ஒரே ஆர்எம்சி கம்பெனியை நம்பி இருப்பதால் நேரத்திற்கு சப்ளை செய்யாவிடில் காலதாமதம் ஏற்படுகிறது. உடனடியாக மாற்று ஏற்பாடு செய்வதும் சில நேரங்களில் முடியாமல் போய்விடுகிறது.
7. ஆர்எம்சி கான்கிரீட் பயன்படுத்துவதால் சென்ட்ரிங்கை நல்ல முறையில் சந்துகள் இல்லாமல் ஒழுகாதவாறு பார்த்துக்கொள்ள வேண்டும். இல்லை யென்றால் சிமெண்ட் பால் வீணாக வெளியேறி விடும். ஆகவே, நன்மையும் தீமையும் கலந்துள்ள ஆர்எம்சி கான்கிரீட் நாம் செலவிடும் பணத்திற்கு நீண்ட நாட்கள் கணக்கில் நல்ல பயனளிக்கும் விதமாக அமைந்துள்ளது.

          இது கட்டுமானத்தை அதிவிரைவாக கட்டுவதற்கு உதவி புரிகிறது.