கலையழகு மிக்க கான்கிரிட் !


மரத்தில் செய்யக் கூடிய அத்தனை வேலைகளையும் கான்கிரீட்டில் செய்தால் எப்படி இருக்கும். இன்னும் அழகாக அமையும். நீண்ட காலம் உழைக்கும். கடினமாக இருக்கும். பூச்சி, ஈரம் போன்றவற்றால் பாதிக்கப்படாது. விலையும் குறைவாகவே இருக்கும்.
இதை எப்படி செய்யலாம்?

கான்கிரீட் பரப்பைப் பளபளப்பாக்கவேண்டும். அதற்கு முன் அந்தப் பரப்பின் மேல் ஸ்டென்சில் எனப்படும் அச்சுத்தாளைப் பரப்பிக் கொள்ள வேண்டும். இந்த அச்சுத் தாளில் நீங்கள் விரும்பும் வடிவத்தை இடம் பெறச் செய்யலாம்.
அச்சுத்தாளைக் கான்கிரீட் பரப்பில் ஒட்டிய பின் ஒரே நேரத்தில் செதுக்கி எடுக்கும் வேலையையும், பளபளப்பாக்கும் வேலையையும் மேற்கொள்ளலாம்.

இந்தத் தொழிற்நுட்பத்தைப் பயன்படுத்தி ஒரு சிற்பத்தை உருவாக்க எவ்வளவு செலவாகும் என்று கணக்குப் போடுகிறீர்களா? பளிங்கில் இதைப் போல் செதுக்கி எடுப்பதற்கு ரூ.7 ஆயிரம் ஆகிறது என்று வைத்துக் கொள்வோம். கான்கிரீட்டில் செதுக்கினால் ஒரே ஒரு ஆயிரம்தான் ஆகும். நம்ப முடியாத சிக்கனம்.
இந்த வேலைப்பாடுகளை அலங்காரத் தேவைகளுக்குப் பயன்படுத்தலாம். விளம்பரங்களை அமைத்துக் கொடுக்கலாம். நடைபாதைகள், குளியலறைத் தரை போன்ற இடங்களில் கால்கள் வழுக்குகின்றனவா?
இந்த முறையைப் பின்பற்றி செதுக்கு வேலைகளைச் செய்தால் உராய்வை அதிகரிக்கலாம். வழுக்கிவிடுவதைக் குறைக்கலாம்.
உறுதியான, உடைந்து போகாத கலை வேலைப்பாடுகள் சாத்தியமாகும்.ஒளித் தடுப்புத் தேவைகளுக்கு ஏற்றது.
கணினியையும் பயன்படுத்தி விதவிதமான அச்செழுத்துக்களையும் வேலைப்பாட்டுக்குள் கொண்டு வர முடியும். எந்த மொழி எழுத்துக்கள் வேண்டும் என்பதை நீங்களே தீர்மானிக்கலாம். உளுத்துப் போகுமோ? கறையான் பிடிக்குமோ? வார்னீஷ் அடிக்க வேண்டுமோ? என்று கவலைப் படத்தேவையில்லை.

இயற்கையிலேயே பற்பல எழிலான தோற்றங்களை உருவாகுமாறு செய்யலாம். இயற்கை வண்ணங்களை உபயோகிக்கலாம்.
சிமெண்டின் நிறத்தை விரும்பியபடி தேர்வு செய்யலாம். சாம்பல் நிறம், வெள்ளை, கலவை நிறங்களில் சிமெண்ட் வகைகள் கிடைக்கின்றன. தேவைப்பட்டால் செயற்கைச் சாயங்களையும் பயன்படுத்தலாம். இதில் எண்ணற்ற வண்ணங்கள் இருக்கின்றன. தந்தத்தைப் போன்ற நிறம், வெள்ளை, மஞ்சள், பழுப்பு, சாம்பல், கறுப்பு, ஆலிவ் பச்சை, மரகதம், நீலம் என்று எத்தனையோ வண்ணங்கள் சாத்தியம்.ஜல்லிகளிலும் விதவிதமான வண்ணங்கள் இருக்கின்றன. சிவப்பு, பச்சை, கருப்பு முதலிய நிறங்களைத் தேர்ந்தெடுக்கலாம். பிறகென்ன? அசத்துங்கள்!