ஏன் கூரை ? ஏன் செலவு ?




ஒருவீட்டின் மொத்த கட்டுமானச் செலவில் கபளீகரம் செய்வது கூரைகளும், சுவர்களும்தான். அதற்காக அவற்றை தவிர்த்துவிட முடியுமா என்ன? எத்தனை செலவு ஆனாலும் அதை அமைத்துத்தானே ஆக வேண்டும் என நீங்கள் சளைக்கலாம். இன்னும் சொல்லப்போனால் கூரைகளையும், சுவர்களையும் வைத்துத்தான் நிறைய இன்டிரியர் பணிகள் நடக்கின்றன. அவற்றை அழகாக்குவதற்காகத்தான் நாம் நிறைய மெனக்கெடுகிறோம். ஆனால் இதெல்லாம் நம்முடைய பார்வைதான். நாம் இதற்காக வகுத்து வைத்திருக்கும் வீடு குறித்த இலக்கணங்கள் இதுகாறும் இப்படித்தான் அமைந்திருக்கின்றன.

ஆனால், இலக்கணங்களை மீறுவதும் கூட ஒரு அழகு. அப்படித்தான் ஒரு ஆர்கிடெக்ட் வீட்டின்
அடிப்படை இலக்கணங்களை மீறி  ஒரு புதிய இலக்கணத்தை தோற்றுவித்திருக்கிறார். எல்லோராலும் பெரும்பான்மையாக ஏற்றுக்கொள்ளபட முடியாத அளவிற்கு இவரது படைப்பு இருந்தாலும் ஐரோப்பிய கண்டத்தில் முக்கிய நாடுகள் இவரை திரும்பி பார்க்க செய்திருக்கிறார்.
ஃபெர்னான்டா மேத்யூஸ் என்னும் பெயருடைய பிரேசிலைச் சார்ந்த ஒரு பெண் ஆர்கிடெக்ட் அடிப்படையில் வித்தியாசமாகவே சிந்திக்கக் கூடியவர். சுவர்களும் தரைகளும் இருந்தால்தான் வீடா? மழைக்காலத்திலும், கடுமையான வெயில் காலத்திலும் மட்டும்தான் கூரைகளின் தேவை நமக்கு தேவைப்படுகிறது.

மழையும் அல்லாத வெயிலும் அல்லாத மிதமான வானிலை காலங்களில், கூரையை எதற்காக அமைக்க வேண்டும்? தேவையில்லாத பளுவினை வீட்டிற்கு ஏன் தரவேண்டும்? என சிந்தித்து தான் கட்டிய வீட்டிற்கு கூரையையே தூக்கி விட்டார். அதுமட்டுமல்லாது வீட்டிற்குள் வந்தாகிவிட்டது. முழுவதுமே நம்முடைய வீடு என்கிற போது லுக்கும், படுக்கையறைக்கும், சமையலைறைக்கும் இடையே எதற்கு சுவர்கள். கழிவறைக்கும், குளியலறைக்கும் கூட சிறு
மறைப்பு இருந்தால் போதாதா? என்றெல்லாம் யோசித்து தனக்கு பிடித்த கனவு வீட்டை அதிக செலவில்லாமல் அதேசமயம் ஆடம்பரமாக வடிவமைத்திருக்கிறார் ஃபெர்னான்டா மேத்யூஸ்.

இவர் கட்டியிருக்கும் வீடு பிரேசிலில் சாவ் பாலோ என்கிற பகுதியில் அமைந்திருப்பதால். இவரது நோக்கம் முழுவதும்
வெற்றியடைந்திருக்கிறது என்று சொல்லலாம். ஏனெனில் சாவ் பாலோவில் மழை வாய்ப்பு என்பது 1.8 சதவிகிதம் தான். அதற்காக வளைகுடா நாடுகளை போல வெயிலும் வெளுத்து வாங்காது. மிக முக்கியமான விஷயம் கூரை மேல் ஏறி  வீட்டுக்குள் குதித்து
திருடும் திருட்டு படவாக்கள்  இங்கு கிடையாது.

சுமார் 2700 சதுரடியில் (250 சதுர மீட்டர்) அமைந்திருக்கும் இந்த வீட்டில் எந்த பகுதியிலும் கூரையே கிடையாது. சுவர்கள் கூட வீட்டைச் சுற்றி  அமைந்திருக்கும் சுற்றுச்  சுவர்களே. (தாய்ச் சுவர்) அன்றி  பார்டிஷன் சுவர்கள் என்பதே கிடையாது. வெகு சில இடங்களில் ஸ்டீல் கண்ணாடி மற்றும் மரப்பலகைகள் கொண்டு சிறு தடுப்புகள் மேற்கொள்ளப்பட்டிருக்கின்றன அவையும் கலை நயத்தோடு அலங்கரிக்கப்பட்டிருக்கின்றன.

“வீட்டிற்கும், வெளியேவும் நாம் காண்கிற ஒரு பெரிய வித்தியாசம் உண்டு. சுவர்களுக்கும் கூரைகளுக்கும் உள்ளே அடைப்பட்டுக் கொள்கிற சாதாரண மக்களுக்கு அந்த வித்தியாசம் புரியாது. எனது வீட்டின் அமைப்பும் அவர்களுக்கு பிடிக்காது” என்கிறார் ஃபெர்னான்டா.
உங்களுக்கு பிடித்திருக்கிறதா ?