பூமியை செதுக்கும் டென்மார்க் ரியல் எஸ்டேட் !சதுர அங்குலம் 10 டாலர் என்ற கணக்கில் வீட்டை விற்கும் காஸ்ட்லி ரியல் எஸ்டேட் சந்தையை உடைய இங்கிலாந்தை போன்றோ வாராவாரம் ஒரு 200 மாடி டவரை திறந்து அத்தனையுமே ஒரே மாதத்தில் விற்று தீர்க்கும் ரியல் எஸ்டேட் பரகாசூரன்  என பெயரெடுத்த துபாய் போன்றோ டென்மார்க் ரியல் எஸ்டேட்டிற்கு அத்தனை பெரிய அந்தஸ்து இல்லைதான்.

நமது தென்னிந்திய ஒட்டுமொத்த பரப்பை விட துளியூண்டு அதிகம் பெரிதான டென்மார்க், பால்பண்ணை விவசாயத்திற்குத்தான் பெயர்போனது என்று இன்னமும் நீங்கள் நினைத்துக்கொண்டிருந்தால் 2000த்திற்கு பிறகு நீங்கள் டென்மார்க் செய்திகளைஅறிந்துக்கொள்ள முயற்சிக்கவில்லை என்று அர்த்தம். களிமண் கட்டடங்களாக காட்சியளிக்கும் ஆப்கானிஸ்தானில் கூட ரியல் எஸ்டேட் விஸ்வரூபம் எடுக்க துவங்கியிருக்க (படத்தை சொல்லலைங்க) சுற்றுலா, கல்வி, விருந்தோம்பல், ஆயத்த ஆடை உற்பத்தி போன்ற சிறந்து விளங்கி வரும் டென்மார்க்கில் ரியல் எஸ்டேட் வெகு வேகமாக வளர்ச்சி அடைந்து வருகிறது.

ஆனால், ரியல் எஸ்டேட் என்பது அதி உயர கட்டிடங்களின் (Vertical growth) வளர்ச்சிதான் என்பதை உடைத்தெறிந்து பரப்பளவில்
(Horizontal growth)  வளர்ச்சியடைந்து வருகிறது. அதற்கான முக்கிய உதாரணங்கள்தான் டென்மார்கில் நகரங்களை ஒட்டிய புறநகர் மற்றும் கிராமப் புறங்களில் புதிதாக அமைக்கப்பட்டு வரும் ரியல் எஸ்டேட் லே அவுட்டுகள். நம்மூரில் போன்று அல்லாமல் இங்கு ரியல் எஸ்டேட் பிஸினஸை செய்து வருவது சாட்சாத் அரசாங்கமே.

   இதற்காக பயன்படுத்தப்படாத நிலங்களை சீர் செய்வது, சமன் செய்வது, வீடுகள் கட்டுவதற்கான சுற்றுப்புற சூழ்நிலைகளை ஏற்படுத்துவது கண்கள் கவரத்தக்க வடிவங்களில் லே அவுட் அமைப்பது போன்ற வேலைகளை, ஒரு தனியார் ஆர்கிடெக்ட் நிறுவனத்துடன் ஒப்பந்தம் போட்டிருக்கிறது டென்மார்க் அரசு. இவர்களது கை வண்ணத்தில் உருவாகும் லே அவுட்டுகளை பார்த்தவுடனேயே வாங்குவதற்கு ஆவலாக பறக்கிறார்கள் டென்மார்க் மக்கள்.

     அதிலும், ஒஷாகா என்கின்ற பகுதியில் அமைந்திருக்கும் வட்ட வடிவமான சர்க்கிள் லேண்டில் இடம் பிடிக்க அத்தனை போட்டி. 400 அடி குறுக்களவு உடைய மிகப்பெரிய வட்ட நிலத்தில் சுமார் 24 தனி வீடுகளுக்கான லே அவுட்டை இந்நிறுவனம் அரசுக்காக வடிவமைத்து  தந்திருக்கிறது. ஒரு வட்டத்தின் மொத்தப் பரப்பளவு எவ்வளவு தெரியுமா? 1,25,600 சதுர அடி. இது போன்று 40 வட்ட லே அவுட்டுக்கள் உருவாக்கப்பட்டு அனைத்தும் விற்கப்பட்டுவிட்டன. ‘வட்ட வடிவமாக லே அவுட் போடப்பட்டால் ஒரு நிலத்தோடு இன்னொரு நிலம் ஒட்டாமல் ஏராளமான இடைவெளி பரப்புடன்   தனி வீடுகளை அமைக்கலாம்’ என்கிறார்கள் இந்த நிலத்தை செதுக்கும் ஆர்க்கிடெக்டுகள். இதுமட்டுமன்றி  புதுப்புது வடிவத்தில் காண்பதற்கு அழகான ரியல் எஸ்டேட் லே அவுட்டுகள் முழு வீச்சில் டென்மார்க் முழுவதும் போடப்பட்டு வருகின்றன.

வழக்கமான வடிவத்தில் அல்லாது உருவான லே அவுட்டுகளுக்கு அதிக மவுசு ஏற்பட்டதைக் கண்டு மற்றொரு ஐரோப்பிய நாடான நெதர்லாந்திலும் பூமியை செதுக்கும் பணிகள் நடைபெற்று வருகின்றன. படத்தில் உள்ள ஸ்டார் வடிவ லே அவுட் அதற்கு ஒரு உதாரணம்.