கட்டுமானத் தொழிலாளர்களை தாக்கும் எம்.எஸ்.டி நோய்!



கட்டுமானத் தொழிலாளர்களுக்கு அடிக்கடி விபத்துக்கள் ஏற்படுவது நாம் நன்கு அறிந்ததுதான். ஆனால், அன்றாடம் கூலிக்கு சூரிய ஒளியிலும், இரசாயனங்களின் நெடியிலும், அதிக சத்தத்திலும், சிமெண்ட் கலவை புழுதியிலும், ஈரத்திலும் பணிபுரியும் கட்டு
மான தொழிலாளர்களுக்கு, எண்ணற்ற வியாதிகள் ஏற்படுகிறது என்பது நாம் அரியாத ஒன்று. ஆஸ்துமா, காசநோய், அல்சர் போன்ற தொந்தரவுகள் மட்டுமன்றி தற்போது எம்.எஸ்.டி என்கிற எலும்பு சார்ந்த நோய் கட்டுமானத் தொழிலாளர்களை தாக்குவதாக கண்டறியப்பட்டுள்ளது.

கட்டுமானத் தொழிலாளர் களை மட்டுமே தாக்கும் நோய் இது என்று சொல்லமுடியாது. ஆனால், ஊட்டச்சத்தில் குறைபாடு உள்ளவர்கள், கடுமையான உழைப்பு மேற்கொண்டும் சரிவர உணவு உண்ணாதவர்கள், ஒரே நிலையில்அமர்ந்தோ,  நின்றோ பணிபுரிபவர்கள், பாரங்களை கையாளுபவர்கள், உயரங்களில் பணிபுரிபவர்கள்,

நோய் எதிர்ப்பு திறன் குறைவானவர்கள், புகை, மது பழக்கம் உடையவர்கள், பிறப்பிலேயே எலும்புகளில் போதுமான பலம் அற்றவர்கள் என பல்வேறு வகையினரையும் இது தாக்குகிறது என்றாலும் மேற்சொன்ன பல்வேறு நிலைகளில் பணிபுரியக் கூடியவர்களாக கட்டுமானத் தொழிலாளர்களே உள்ளனர் என்பது வேதனையான உண்மை.

இந்நோய் பற்றி பெரும்பாலான கட்டுமானத் தொழிலாளர்களுக்குத் தெரியாது. அவர்களால்அதை முன்கூட்டியே உணர்வதும் கடினம். ஆனால் என்ன மாதிரியான வேலைகளைச் செய்யும்போது இந்த நோயால் தாக்கப்படுவதற்கான வாய்ப்பு உள்ளது என்பதை அறிந்து கொண்டால் எச்சரிக்ககையாக இருக்கலாம்.

என்ன அது எம்எஸ்டி?

எம்.எஸ்.டி. என்பது மஸ்குலோஸ்கெலிட்டல் டிஸார்டர் (Musculoskeletal disorder) என்பதன் சுருக்கமாகும். பெயரில் இருந்தே ஓரளவுக்கு ஊகித்து விடலாம். தசை மற்றும் எலும்புகளைத் தாக்கும் ஒரு வகை நோய் இது. ஆரம்பத்தில் இந்த நோய் தாக்கி இருக்கிறது என்பதை உணர்ந்து கொள்வதே கடினம். அப்புறமல்லவா சிகிச்சையை மேற்கொள்வது?

உயரமான இடங்களில் வேலை செய்ய வேண்டிய கட்டாயம் கட்டுமானத் தொழிலாளர்களுக்கு உண்டு. அங்கே இருந்து தவறிக் கீழே விழுந்துவிடுகிறார்கள் என்போம். என்ன ஆகும்? எலும்பு முறியும். உயிருக்கே கூட ஆபத்தாக முடியும். இந்த வகை பாதிப்பை உடனே உணர்ந்து கொள்ளலாம். ஆனால், எம்.எஸ்.டி யால் ஏற்படும் விளைவுகளை உடனடியாக தெரிந்து கொள்ள முடியாது. இருப்பினும் கீழே விழுவதால் உண்டாகக் கூடிய அதே அளவுக்குப் பாதிப்பு ஏற்பட்டிருக்கும்.

எப்படி ஏற்படுகிறது?

பொதுவாக, அதிக எடையைத் தூக்கிக் கொண்டு போக வேண்டிய கட்டாயம் உள்ளவர்களுக்கு இந்த மாதிரியான நோய்த் தாக்குதல் ஏற்பட வாய்ப்பு உண்டு. கட்டுமானத் துறையில் இது பற்றிக் கேட்கவே வேண்டியதில்லை. சிமென்ட் மூட்டைகள், கம்பிகள்,பாளங்கள், கருவிகள், கற்கள், ஓடுகள் என்று கனத்திற்குக் குறைவே இருப்பதில்லை.

அதிக எடை என்று எதை எடுத்துக் கொள்வது?

25 கிலோவுக்கு மேல் போகுமானால் அது அதிக எடை என்று வைத்துக் கொள்ளலாம். இதற்கு மேற்பட்ட எடையைத் தூக்கிக் கொண்டு வேலை செய்ய வேண்டி இருக்கும்போது தண்டுவடம் பாதிப்பிற்கு உள்ளாகும். சுமார் ஒரு வருட காலத்திற்குள் இதன் விளைவுகள் மோசமாகத் தலை காட்டத் தொடங்கும். ஆளையே முடக்கிவிடும்.

மேற்கத்திய நாடுகளில் இத்தகைய பாதிப்புகளுக்கு உள்ளாகிற தொழிலாளர்கள் அதிகம். இந்தியாவிலோ
மற்ற ஆசிய, வளரும் நாடுகளிலோ இந்த நோய் பற்றிப் பலருக்கும் தெரிந்திருப்பதில்லை. அப்படியே தெரிய வந்தாலும் அவர்கள் அதைப் பெரிய விசயமாக எடுத்துக் கொள்வதில்லை.

இந்தியா போன்ற நாடுகளில் கூலித் தொழிலாளர்கள் அவ்வளவாகப் படிப்பறிவு இல்லாதவர்கள்.கடினமாக வேலை செய்வதால் உடல் வலி ஏற்படுகிறது என்று இவர்கள் தங்களுக்குத் தாங்களே சமாதானம் சொல்லிக் கொள்வார்கள். அந்த வலியை மறப்பதற்கு ஏற்ற வழியாக மது பானங்களை நாடுவார்கள். இதனால்அவர்களது உடல் நலம் மேலும் பாதிக்கப்படும்.
இன்னொரு வகையிலும் இவர்கள் இது பற்றி அலட்சியமாக இருப்பதற்குக் காரணம் இருக்கிறது. வறுமை, படிப்பறிவு இல்லாமை,கடின உழைப்பிற்குப் பழகிப்போன குணம் ஆகியவை காரணமாக இவர்கள் இந்த நோயை கண்டுகொள்ளாமலேயே காலத்தை ஓட்டிவிடுகிறார்கள். மேலும், இத்தகைய தொழிலாளர்கள் தங்களுக்கு இந்த நோய் தாக்கி இருக்கிறது என்று தெரிந்து மட்டும் என்ன செய்துவிடப் போகிறார்கள்?

அவர்களை வேலைக்கு அமர்த்தும் கட்டட உரிமையாளர்களோ கட்டுமான நிறுவனங்களோ எந்த வகையிலும் உதவப் போவதில்லை. பெரும்பாலும் அன்றாடக் கூலித் தொழிலாளர்கள் என்பதால் அவர்களுக்கு மருத்துவ உதவி போன்ற வசதிகளும் கிடைப்பது இல்லை. சாதாரணமாய் முதுகு வலிக்கிறது என்று எடுத்துக் கொள்வார்கள்.

சத்துள்ள உணவைச் சாப்பிடாததால் உடல் பலவீனம்அடைந்துவிட்டதாக நினைத்துக் கொள்வார்கள்.  கைப்பக்குவமாகக் கசாயம் வைத்துக் குடித்தால் எல்லாம் சரியாகப் போய்விடும் என்று எடுத்துக் கொள்வார்கள். வலியை மறக்க மது அருந்துவது சரியான வழி என்று பின்பற்றுவார்கள். சாதாரண வாயுப் பிடிப்பு என்று ஆரம்பிக்கும் வலி போகப்போக முற்றும். நிரந்தரமாக, கடுமையான வலி தொடரும். வேறு எந்த வேலையையும் செய்யவிடாமல் முடக்கிப் போடும்.

சிலர் இந்தக் கடும் வலியையும் பொறுத்துக் கொண்டு வேலைக்குச் செல்வார்கள். என்ன செய்வது.. நமது தலையெழுத்து அவ்வளவுதான்.. வேறு வழி என்ன இருக்கிறது... எனவே தொடர்ந்து இதே வேலைக்குத்தான் செல்ல வேண்டும் என்று எண்ணுவார்கள்.

தவிர்ப்பதற்கு வழி உண்டா?

அதிகப்படி சுமையை எடுத்துச் செல்ல வேண்டி இருக்கிறதா? அதிக தூரம் சுமையுடன் நடக்க வேண்டி இருக்கிறதா? திரும்பத் திரும்ப அதே மாதிரி வேலைதானா? வேண்டாம் என்று சொல்ல முடியாது.  கட்டட மேஸ்திரி களும் சூபர்வைசர்களும் விட மாட்டார்கள். வேலையைச் செய்தே ஆக வேண்டும் என்று விரட்டுவார்கள். வேகமாகவும் செய்ய வேண்டும் என்று கட்டாயப்படுத்துவார்கள். கூலித் தொழிலாளர்கள் இதில் சலுகைகளை எதிர்பார்க்க முடியாது.

முடிந்தவரை அதிகப்படி எடையைக் கையாளவேண்டிய வேலைகளைத் தவிர்க்கலாம். தொடர்ந்து அதே மாதிரியான வேலைகளுக்குப் போவதையும் விட்டு விடலாம். வேறு விதமான, எளிய, சுமை அதிகம் இல்லாத வேலைகளைச் செய்ய முயற்சிக்கலாம்.கொஞ்சம் படிப்பஷூவை வளர்த்துக் கொள்வதும் வேலையை மாற்றிக் கொள்ள உதவும். ஆரம்ப கட்டத்திலேயே நோய் தாக்கி இருப்பதன் அறிகுறி தெரிய வந்தால் உடனே சிகிச்சைக்குத் தயாராக வேண்டும். ஒன்றுமில்லை என்று உதாசீனப்படுத்துவதோ பிறகு பார்த்துக் கொள்ளலாம் என்று தள்ளிப் போடுவதோ கூடாது.
கட்டுநர்களும் தங்கள் கண்ணுக்கு கண்ணான தொழிலாளர்களின் நலன் குறித்த நடவடிக்கைகளைமேம்படுத்திக்கொள்ள வேண்டும்.

பார்வைத்திறன், செவித்திறன் போன்ற வற்றை இதுபோன்ற தொழிலாளர்களுக்கு ஒரு சில நிறுவனங்கள் குறிப்பிட்ட கால இடைவெளியில் பரிசோதிக்கின்றன. மேலும், ரத்த அழுத்தம், சர்க்கரை அளவு போன்றவற்றையும் பரிசோதிக்கின்றனர். இனி கட்டுமான தொழிலாளர்களின் எலும்புகளின் தன்மை, பலம் ஆகியவற்றையும் அவ்வப்போது பரிசோதிக்க ஆரம்பித்தால். எம்.எஸ்.டி நோய் ஆரம்ப கட்டத்திலேயே தெரிய ஆரம்பித்து விடும்.

எம்.எஸ்.டி நோய் தொடர்பான பிரச்சாரங்கள் சமூக நல நிறுவனங்களால் தொடர்ந்து மேற்கொள்ளப்படுகிறது