கிரியேட்டிவ் சைக்கிள் ஸ்டாண்ட் !என்னதான் நம் ஊரில் சைக்கிள்களை சுற்றுப்புறச்சூழலின் நண்பன், உடற்பயிற்சிக்கு உற்ற துணைவன் என வாயார புகழ்ந்தாலும், நகரத்துத் தெருக்களில் நம்மால் சைக்கிள்களை பார்க்கவே முடியாது. ஏனெனில், அதை இன்னமும் நாம் ஏழ்மையின் சின்னம் என்ற அளவிலேயே பார்க்கிறோம். மேல் நாடுகளில் அப்படி இல்லை. அதுவும் குறிப்பாக ஐரோப்பிய நாடுகளில் வீட்டிற்கு வீடு கார்கள் இருக்கிறதோ இல்லையோ, கட்டாயம் சைக்கிள்கள் இருக்கும். அதனாலேயே அந்த நாட்டு அரசுகள் சைக்கிள்களில் செல்வதற்குத் தனி பாதைகளும், வழிகளும் ஏற்படுத்தி வைத்திருக்கிறது.

அரசு சைக்கிள்களுக்குத் தரும் முக்கியத்துவத்தை நன்கு உணர்ந்த மேல் நாட்டு கட்டுநர்களும், ஆர்க்கிடெக்டுகளும் தாங்கள் உருவாக்கும் கட்டிடங்களுக்கு சைக்கிள் பார்க்கிங் என தனி இடங்களை தவறாமல் வடிவமைக்கிறார்கள். அங்கு குடியிருப்புக் கட்டிடம், வணிக வளாக கட்டிடம் மற்றும் அரசு கட்டிடம் என அனைத்து வகைக் கட்டிடங்களிலும் தவறாமல் சைக்கிள் பார்க்கிங் என பிரதான இடத்தை ஒதுக்கி விடுகிறார்கள். (சென்னை ஷாப்பிங் மால்களில் சைக்கிள்களில் வருபவர்களைக் கண்டால்
வெளியே துரத்தி விடுவார்கள் என்பது வேறு விஷயம்).

மேல் நாடுகளில் சைக்கிள்களுக்கென இடம் விடுகிறார்கள். இதுதானா விஷயம்? என சொல்லி நகர்ந்து விடாதீர்கள். அவர்கள் இடம் விடுவதோடு, சைக்கிள் ஸ்டாண்டுகளை அட்டகாசமாக வடிவமைக்கிறார்கள். ஒவ்வொன்றும் ஒவ்வொரு அழகு. ஒவ்வொரு வடிவம். ஒவ்வொரு நிறம். ஒவ்வொரு கான்செப்ட் என பார்ப்பதற்கு ரம்மியமாக இருக்கிறது.

நமக்குத் தெரிந்த சைக்கிள் ஸ்டாண்ட் என்பது நீளமான பைப்புகளை குறுக்கே நிறுத்தி அதில் ஒரு சங்கிலியை இணைத்து சைக்கிள்களை நிறுத்துவோம். அவ்வளவுதானே. ஆனால், இவர்கள் அத்தனை எளிதாக சைக்கிள் பார்க்கிங் ஸ்டாண்டுகளை விட்டுவிடுவதில்லை. இன்னும் சொல்லப்போனால் இதனை வடிவமைப்பதற்கென்றே தனி ஆர்க்கிடெக்டுகள் உள்ளனர் என்பது நம் புருவத்தை உயர்த்தும் விஷயம்.விலங்குகள், பூக்கள், சீப்புகள், இராட்டினங்கள் போன்ற பல கான்செப்டுகளில் இதுபோன்ற வியத்தகு கை வண்ணங்களைக் காட்டுகிறார்கள் சைக்கிள் ஸ்டாண்டு ஆர்க்கிடெக்டுகள்.

மேலும், தங்கள் இணைய தளங்களில் இது போன்ற பல்வேறு வகையான உருவாக்கங்களை வெளியிட்டு, இலவசமாகவே பயன்படுத்திக்கொள்ள அனுமதி தருகிறார்கள். (அதை அவர்களாகவே வந்து வடிவமைத்து நிறுவினால்தான் கட்டணம் வசூலிக்கப்படுகிறது). அவர்கள் உருவாக்கி வைத்திருக்கும் டிசைன்தான் என்ல்லாமல், நாம் வடிவமைக்கும் டிசைன்களிலும் சைக்கிள் பார்க்கிங் ஸ்டாண்டுகளை வடிவமைக்கவும் அவர்கள் தயார்.நம் நாட்டிலும் குடியிருப்புகள், வணிக வளாக கட்டிடங்களை உருவாக்கும் கட்டுநர்கள் இதுபோன்று புதிய முயற்சியில் ஈடுபட்டால் நன்றாகத்தானே இருக்கும் .