ஜிசிடி வளைகுடா நாட்டு தொழிற்நுட்பம் !


ஜிசிடி என்பது கல்ஃப் கான்கிரீட் டெக்னாலஜி(Gulf Concrete Technology)  என்பதன் சுருக்கமாகும். போர்டோரிகோ நாட்டைச் சேர்ந்த கட்டுமான நிறுவனம் கார்மெலோ குழுமம்.

இவர்கள்தான் ஜிசிடி தொழிற்நுட்பத்தை உருவாக்கி இருக்கிறார்கள்.இந்த டெக்னாலஜியைப் பயன்படுத்துவதில் கிடைக்கக் கூடிய
தனித் தன்மை வாய்ந்த கட்டுமான வசதிகளைப் பயன்படுத்தக் கற்றுக் கொள்வது  நன்மை தர வல்லது.
முன்னதாகவே கட்டடப் பகுதிகளைத் தயார் செய்து வைத்துக் கொண்டு தேவைப்படும் இடத்தில், தேவைப்படும் நேரத்தில் பொருத்த வேண்டும். இதுதான் இதில் அடிப்படையான விசயம். முப்பரிமாண வடிவில் எடைகுறைவான பகுதிகளை உருவாக்குவது இந்தத் தொழிற்நுட்பத்திற்கு முக்கியத் தேவையாக இருக்கிறது.

விரிவாக்கப்படும் பாலிஸ்டைரீன் கொண்டு பகுதிகளை அமைக்கிறார்கள். இரண்டு வலுவான பலகை போன்ற இடைவெளிகளுக்கு நடுவில் பாலிஸ்டைரீன் இடம்பெறச் செய்யப்படுகிறது. கால்வனைஸ் செய்யப்பட்ட இரும்பு வலைகளை ஒன்றின் மேல் ஒன்றாக அமைத்து அவற்றிற்கு இடைப்பட்ட பகுதியில் பாலிஸ்டைரீனை வைக்கிறார்கள்.
மேலும் உறுதி சேர்ப்பதற்காக, வெளியில் இருந்து இரும்பு ட்ரஸ்களைப் பாலிஸ்டைரீனுக்குள் செலுத்துகிறார்கள். இவற்றை வெளிப்படலத்தில் உள்ள இரும்பு வலைகளுடன் பற்ற வைப்புச் செய்துவிடுகிறார்கள்.
இந்தத் தகட்டின் தடிமன் 10 காஜ் அளவுக்கு உள்ளது.

இதனைக் கொண்டு போய்க் கட்டுமானம் நடைபெற வேண்டிய இடத்தில் நிறுத்துகிறார்கள். வலுவான கான்கிரீட் கலவையை இதன் இரண்டு பக்கங்களிலும் இயந்திரங்களைக் கொண்டு தெளிக்கிறார்கள்.சுவர்கள், கூரைப் பகுதிகள் போன்றவை விரைவாக உருவாகிவிடுகின்றன.இந்த தொழிற்நுட்பத்தைப் பயன்படுத்திப் பல நன்மைகளைப் பெறலாம். ஜிசிடி இன்சுலேட்டட் கான்கிரீட் பேனல் பில்டிங் சிஸ்டம் என்பது ஒட்டுமொத்த உத்தியாகும்.இதைப் பயன்படுத்திக் கட்டப்படும் கட்டடங்களின்  மீது காற்று கடும் வேகத்துடன் மோதினாலும் கட்டடத்திற்கு ஒன்றும் ஆகாது. இந்த வகைக் கட்டடங்கள் மணிக்கு40 கி.மீக்கும் அதிகமான வேகத்தில் வீசக் கூடிய சூறாவளிக் காற்றுகளையும் தாக்குப் பிடிக்கக் கூடியவையாக இருக்கும்.

மேலும் , நில நடுக்கத்தையும் தாங்கி நிலைத்து நிற்கக் கூடிய கட்டடங்களைக் கட்ட முடியும். ரிக்டர் அளவுகோலில் 8.5 புள்ளிகள் வரையிலான நிலநடுக்கத்தை எதிர்கொள்ளக் கூடிய கட்டடங்களை ஜிசிடி தொழிற்நுட்பத்தின் மூலம் அமைக்கலாம்.வெப்பத்தினால் கட்டடங்களுக்கு ஏற்படும் பாதிப்புகளையும் குறைக்கலாம். எரிச்சலூட்டக் கூடிய இரைச்சலையும் மட்டுப்படுத்தலாம்.
வளைகுடா நாட்டின் சீதோஷ்ண நிலையை ஒத்த எந்த நாட்டுக்கும் இது ஏற்றது.