நீராற்றுவதற்கு ஒரு புதிய மாற்று வழி !



வழக்கமாகக் கான்கிரீட்டைப் பக்குவமடைய வைக்க என்ன செய்கிறோம்? பலகைகளைஅடைத்து முட்டுக்கொடுத்து அந்தப் பரப்பின் மேல் கான்கிரீட் கலவையைக் கொட்டுகிறோம். குறிப்பிட்ட காலத்திற்குப் பரப்பின் மேல் தண்ணீர் தேங்கி நிற்குமாறு செய்கிறோம். அப்புறம் முட்டுப் பலகைகளை விலக்கிக் கொள்கிறோம்.

இதுதான் காலகாலமாகப் பின்பற்றப்பட்டு வரும் முறை. இப்படித்தான் நாம் கான்கிரீட்டைப் பக்குவப்படுத்துகிறோம். இது போதுமானதா? இல்லை என்றுதான் சொல்ல வேண்டும். கான்கிரீட் தயாரிப்பிற்கு எடுத்துக் கொள்ளப்பட்ட
சிமெண்ட், மணல், கம்பி எல்லாமே தர
மானவையாக இருந்திருக்கலாம். ஆனால் நீராற்றும் வேலையை முறையாகச் செய்தால்தான் கட்டடம் வலுவுள்ளதாக இருக்கும். இதில் குறை வைத்தோமானால் கட்டடத்தின் ஆயுள் குறையத்தான் செய்யும். கான்கிரீட்டின் உட்பகுதியில் இருக்கும் தண்ணீர் மெல்லிய துளைகள் வழியாக மேலே உயரும். இப்படி உயரும் நீரானது ஆவியாகி மறைந்து போகும். அவ்வாறு நேராமல் இருப்பதற்காகத்தான் கான்கிரீட் பரப்பின் மேல் எப்போதும் தண்ணீர் தேங்கி நிற்குமாறு பார்த்துக் கொள்ள வேண்டி இருக்கிறது.தண்ணீர் தேங்கி நிற்பதால் கான்கிரீட்டின் மேல் தூசி படிவதும் தடுக்கப்படுகிறது. சுருங்குதல்  முதலிய  குறைபாடுகள் தவிர்க்கப்படுகின்றன.

விதவிதமான வழிமுறைகள்:

நீராற்றும் வேலையைச் செய்ய பல வழிகள் பின்பற்றப்படுகின்றன.கான்கிரீட் தளத்தின் மேல் பாத்தி கட்டி தண்ணீரைத் தேக்குவது, தண்ணீரைத் தெளிப்பது, ஈரக் கோணிகளைக் கொண்டு மூடி வைப்பது, பாலிதீன் தாள்களைப் பரப்புவது, இப்படிப் பல வழிகளில் நீராற்றல் வேலையை மேற்கொள்கிறோம். இந்த வழிமுறைகள் பொருத்தமானவைதானா? இந்த வகையில் செயல்பட அதிக நேரம் தேவைப்படும். உடல் உழைப்பும் அதிகமாக ஆகும். அதனால் கூலிச் செலவும் அதிகரிக்கும். தேவைப்படும் தண்ணீரின் அளவு கணிசமானதாக இருக்கும்.நீராற்றும் காலமும் அதிகமாக அமையும். தண்ணீர் ஆவியாக வறண்டுவிட்டால் வெடிப்புகள் தோன்றும்.

மாற்று வழி:

வழக்கத்தில் உள்ள வழிமுறைகளைப் பின்பற்றி  நீராற்றும் வேலையைச் செய்வதில் பல மாற்றங்கள் வந்திருக்கின்றன. கான்கிரீட் கலவை இடப்பட்ட உடனேயே அதன் மேல் தண்ணீரைத் தேக்கி வைக்க வேண்டும். இதற்குப் பதிலாக அக்ரிலின் எமல்ஷன் வகையிலான பூச்சுக்களைக் கான்கிரீட் பரப்பின் மேல் பூசலாம்.  இந்த வகைப் பூச்சை ஏற்படுத்துவதற்குத் தூவல் முறையைப் பின்பற்றலாம். அல்லது பெயின்ட் அடிப்பதைப் போல் பிரஷ் கொண்டும் பூசலாம்.கான்கிரீட் ஆனாலும் கலவை ஆனாலும் இவ்வாறு ஒரே ஒரு முறை செய்தால் போதும். ஆரம்ப கட்டத்தில் இறுகும் வேலை நடக்கும் போது இது சரியான அணுகுமுறையாக இருக்கும். பூசப்படும் பூச்சு கான்கிரீட் பரப்பின்மேல் சீரான படலமாகப் பரவும். இந்தப் படலம் கான்கிரீட்டிற்குள் இருக்கும் தண்ணீர் வீணாக ஆவியாகி வெளியேறிவிடாமல் தடுக்கும் வேலையைச் செய்யும். கான்கிரீட் வெகு விரைவில் உலர்ந்து போகாமல் காக்கும். இதனால் வெடிப்புகள் ஏற்படுவது தடுக்கப்படும். கான்கிரீட்டுக்குள் இருக்கும் தண்ணீர் வெளியேற வகையில்லாமல் சிறைப்படுத்தப்படும். ஆகவே, கான்கிரீட் நன்கு இறுகிக் கெட்டிப்படும். அதுதானே நமக்குத் தேவை?