கரியமில வாயு இல்லாத கட்டுமானப்பொருள் !


இங்கிலாந்தில் உள்ள இலண்டனைச் சேர்ந்தது லிக்னாசைட் நிறுவனம். 
இவர்கள் உருவாக்கி இருக்கும் உலகின் முதல் கரி எதிர் கட்டுமானப் பொருள் அறிமுகப்படுத்தப்பட்டு இருக்கிறது. இந்தக் கட்டுமானக் கட்டிக்குக் கார்பன் பஸ்டர் என்று பெயர் வைத்திருக்கிறார்கள்.கார்பன் பஸ்டரில் சுமார்பாதி அளவுக்கு மறுசுழற்சி செய்யப்பட்ட பொருட்களே பயன்படுத்தப்படுகின்றன.

பழைய குப்பைகளை எரித்து மின்சாரம் தயாரிக்கும் ஆலைகளில் துணைத் தயாரிப்புப் பொருளாகக் கிடைக்கும் பொருட்களைக் கொண்டு கார்பன் பஸ்டரைத் தயாரிக்கலாம். கார்பன் பஸ்டரின் தனிச் சிறப்பு என்ன தெரியுமா?

இது கணிசமானஅளவுக்குக் கரியமில வாயுவை உள்ளிழுத்துக் கொள்ளக் கூடியது. ஒரு பொருளை உருவாக்கும்போது எந்த அளவுக்குக் கரியமிலவாயு உற்பத்தி ஆகிறதோ அதைவிட அதிகஅளவு கரியமிலவாயுவை அது உறிஞ்சிக் கொள்ளுமானால் அது சுற்றுச் சூழலுக்கு நன்மை செய்வதாக அமையும். கார்பன் பஸ்டர் அப்படித்தான் செயல்படுகிறது.
ஒரு டன் எடை கொண்ட கார்பன் பஸ்டர் சுமார் 14 கிலோ அளவிலான கரியமில வாயுவை உள்ளிழுத்துக் கொள்ளக் கூடியது. கிரீன்விச் பல்கலைக் கழகத்தில் கார்பன்பஸ்டரை முற்றிலுமாக ஆராய்ந்திருக்கிறார்கள். அனல் மின் உற்பத்தி நிலையங்கள் போன்ற ஆலைகளில் கிடைக்கும் கழிவுப் பொருட்களைத் தண்ணீருடன் கலந்து, கரியமில வாயுவை உள்ளிழுக்கும் புது வகைக் கட்டுமானப் பொருளைத் தயாரிக்கலாம்.

இயற்கையில் கிடைக்கும் ஜல்லிகளுக்குச் சரியான மாற்றாகக் கார்பன்பஸ்டரைப் பயன்படுத்தலாம். பயன்படுத்தப்பட்ட மரச் சீவல், கண்ணாடி, கிளிஞ்சல்கள் போன்றவற்றைக் கொண்ட கலவையைக் கொண்டும் கார்பன் பஸ்டரை உருவாக்க முடியும். இத்தகைய கட்டுமானப் பொருளை உருவாக்கும் போது கரியமில வாயு குறைந்த அளவுக்கே உற்பத்தியாகிறது. இது சுற்றுச் சூழலுக்கு மிகவும் ஏற்றது. உலகிலேயே உற்பத்தியின் போது குறைந்த அளவு கரியமிலவாயுவை வெளியிட்டு, தயாரிக்கப்படும் அதிநவீன கட்டுமானப் பொருள் கார்பன் பஸ்டர்தான் என்று இதன் தயாரிப்பாளர்கள் பெருமை பொங்கக் கூறுகிறார்கள்.
இங்கிலாந்தில் 2016 ஆம் ஆண்டிற்கெல்லாம் அனைத்து வீடுகளும் கரியமிலவாயுவை வெளியிடாத கட்டுமானப் பொருட்களால் கட்டப்பட வேண்டும் என்பதை இலட்சியமாக வைத்திருக்கிறார்களாம்.