இம்பாலா காரில் இன்டீரியர் ஆர்கிடெக்சர் !ஜாலியாக காரை எடுத்துக் கொண்டு குடும்பத்தினருடன் டூர் செல்கிறோம். ஆனால், போய் சேர்ந்த பிறகு வாகனத்தை விட்டு விட்டு நல்ல ஹோட்டல் எது என தேடி களைத்துப் போகிறோம். நமது பர்சும் இளைத்துப் போகிறது. இப்படிக் களைத்துப் போன ஒரு நபர் கைதேர்ந்த இன்டிரியர் ஆர்க்கிடெக்டாக இருந்தால் என்ன செய்திருப்பார்?

ஹாலந்தைச் சார்ந்த ஒரு இன்டிரியர் ஆர்க்கிடெக்ட் ஜோசப் பெனஸ்கி என்பவர் தனது காரை ஒரு நடமாடும் மினி வீடாக மெனக்கெட்டு மாற்றியிருக்கிறார். அடிக்கடி டூர் செல்லும் அவருக்கு தங்குமிடம் என்பது மிகவும் கடினமாக இருக்கவே மாற்று வழி தேடி ஆராய்ந்ததின் பலன்தான் அவரது வீல் ஹவுஸ்.

  அதிகபட்சம் 15 நிமிடங்களில் இந்தக் கார் வீடாகிறது. மறுபடியும் 15 நிமிடங்களில் வீடு காராகி பறக்க ஆரம்பித்து விடுகிறது. இதன் கதவுகள் மேற்புற திறப்பு வகையைச் சார்ந்தது என்பதால் காரை நிறுத்தி விட்டு கதவை மேல்நோக்கித் திறந்து வைத்தால் மிகப் பெரிதான இடம் காரைச் சுற்றியும் கிடைக்கிறது. இந்தக் காரின் இருக்கைகளை மாற்றி  அமைத்தால் படுக்கையறை கிடைத்துவிடும். மேலும், இதில் கிச்சன், ரெஃப்ரிஜரேட்டர், பாத்ரூம் போன்றவையும் உண்டு.

மினி வீடாகவும், மினி ஹோட்டலாகவும் தனது காரை மாற்றிக் கொள்வதால் தனக்கு துவக்கத்தில் செலவிருந்தாலும், இப்போதெல்லாம் தங்கும் இடத்திற்கென தனியே செலவு செய்ய வேண்டியதில்லை என்கிறார் பெனஸ்கி. இவரது ஹாலிடே காரைப் பார்த்த நண்பர்களும், அக்கம் பக்கத்தினரும் தங்களுக்கும் இதே போன்ற காரை செய்து தரச் சொல்லி ஆர்டர் செய்திருக்கிறார்களாம். பெனஸ்கி தற்போது இம்பாலா கார்களை மினி வீடாக மாற்றி அமைக்கும் முயற்சியில் படு பிஸியாக இருக்கிறார்.
வெள்ளைக்காரர் ஒருவர் இம்பாலா காரில் கைவண்ணத்தைக் காட்டும் போது நமது டூர் பிரியர்கள் இன்னோவா கார்களை டூ இன் ஒன்னாக மாற்றி அமைத்தால் ஹோட்டல்களைத் தவிர்க்கலாமே!