தமிழ்நாட்டுக்கும் வருமா 'தானே'வின் நிலைமை?மே-2013

தேர்வுகளின் தீவிரம் துவங்கியிருந்த ஏப்ரல் மாதம். மாலை 5.10. மராட்டிய மாநிலத்தில் தானே மாவட்டம், மகாவே சாலையில் 5 தளங்கள் கொண்ட அந்த அடுக்குமாடி குடியிருப்பில் மக்கள் வழக்கம்போல இயங்கிக் கொண்டிருந்தார்கள். ஒருபுறம் பரீட்சைக்கு எந்தக் கேள்விகளைப் படிப்பது? எந்தக் கேள்விகளை விடுவது என பதைத்துக் கொண்டிருந்த மாணவர்கள். ஒருபுறம் அப்போதுதான் அலுவலகத்திலிருந்து வீட்டிற்கு வந்து சேர்ந்த பெற்றோர்கள். ஒருபுறம் உறங்கிக் கொண்டும், விளையாடிக் கொண்டும் இருந்த குழந்தைகள். சட் சட் சட், சடார்... அத்தனைப் பேருக்கும் என்ன நடந்தது என்று புரியவில்லை. பூகம்பமா? வெடிகுண்டா? என யோசிப்பதற்குள் புழுதிக்காடாய் சரிந்து விழுந்தது அந்த தானே குடியிருப்பு. அந்தக் குடியிருப்பில் வசித்த 28 குடும்பங்களில் சுமார் 74 பேர் உயிர் இழக்க, 60 பேர் படுகாயம் அடைந்ததாக பிறகு வந்த தகவல்கள் பதிவு செய்தன. ஏன்? என்னவாயிற்று அந்தக் கட்டிடத்திற்கு? 2011 ல் துவங்கப்பட்ட அந்த குடியிருப்பு புராஜெக்ட் 2013 பிப்ரவரியில் முடிவுற்றது. அதற்குப் பிறகு வாக்களித்தபடி தங்களது வாடிக்கையாளர்களுக்கு வீடுகளை ஒப்படைத்திருக்கிறார் அதன் கட்டுநர். அதன் பிறகு தொடர்ந்து அந்த குறிப்பிட்ட கட்டுமானத்தின் மீதே 6, 7 அடுக்குமாடிகளை தொடர்ந்து கட்டியிருக்கிறார் அந்த பேராசை கொண்ட கட்டுநர்.முதலில் கட்டிய 5 அடுக்குகளுக்கும் சரி, பின்னர் கட்டிய 2 அடுக்குகளுக்கும் சரி, யாதொரு அனுமதியும் பெறவில்லை என செய்தி வெளியிட்டது தூக்கம் கலைந்து எழுந்த அந்த மாவட்ட நகராட்சி. கட்டிட விதிகளை மீறிய தவறுகளைத் தவிர, மண் பரிசோதனை, கட்டிட வடிவமைப்பு ஆகியவற்றில் கோட்டை விட்டது. மற்றும் தரமற்ற கட்டுமானப் பொருட்களை பயன்படுத்தியது எனப் பல்வேறு குற்றச்சாட்டுகளை ஊடகங்களும், கட்டிடவியல் நிபுணர்களும் அள்ளித் தெளிக்கின்றனர். இது தவிர, மேலும் பல முறைகேடுகள் இந்த குடியிருப்பு கட்டுமானத்தில் நடந்திருக்கின்றன. 1. விதிகளின்படி ஒரு கட்டுமானம் முழுமையாக நிறைவுற்ற பிறகு பணி முடிவு சான்றிதழ் நகராட்சியால் வழங்கப்படும். அதற்குப் பின்பே, குடும்பங்கள் குடியமர்த்தப்பட வேண்டும். இந்த விக்ஷயத்தில் அது நடைபெறவில்லை. (இந்த நிலைமை சென்னையிலும் உண்டு. உரிய கால அவகாசத்தில் பணி நிறைவு சான்றிதழைத் தராமல் சி.எம்.டி.ஏ. அதிகாரிகள் இழுத்தடிக்கிறார்கள் என்பது கட்டுநர்களின் குற்றச்சாட்டு). 2. சில கட்டுநர்கள் தங்களது கட்டுமானத்தை பகுதி பகுதியாக முடித்து விற்பனை செய்வார்கள். அதாவது 2 பேஸ் (பிளாக்குகள்) கொண்ட குடியிருப்பு எனில், ஒரு பிளாக் கட்டிடம் முடிந்த பிறகு வாடிக்கையாளர்களைக் குடியமர்த்தி விட்டு அருகாமையிலேயே இன்னொரு பிளாக் கட்டுமானத்தை நடத்திக் கொண்டிருப்பார்கள். இதனால், ஒலி மற்றும் சுற்றுப்புற மாசுத்தொல்லை ஏற்படும் என்பதால் இது தவிர்க்கப்பட வேண்டியதாகும். மேலும், கட்டுமானப் பணி நடைபெறும்போது ஒரு பக்கம், இயந்திரங்கள், வாகனங்கள் வருவதும், போவதுமாக இருக்கும். அந்த சமயத்தில் பணிகள் முடிவுற்ற கட்டுமானத்தில் வசிக்கும் சிறுவர்கள், குழந்தைகளுக்கு விபத்துகள் ஏற்படக்கூடிய சூழ்நிலை உருவாகும். ஆகவே, குறைந்தபட்சம் முடிவுற்ற பிளாக்குகளை தனிக் கட்டிடமாக வழி ஏற்படுத்தி, தடுப்புகளையாவது கட்டுநர் நிறுவ வேண்டும். ‘தானே’ குடியிருப்பில் இதுவும் நிறைவேற்றப்படவில்லை. 3. எக்காரணத்தைக் கொண்டும் எந்தச் சூழ்நிலையிலும் ஒரு முடிவுற்ற கட்டுமானத்தில் மனிதர்கள் வாழும்போது அதற்கு மேல் கட்டுமானங்கள் அமைப்பதற்கு அனுமதியில்லை.(மிகச் சிறிய கட்டுமானங்களை மட்டும் அனுமதிக்கிறார்கள். உதாரணம், தண்ணீர் தொட்டி கட்டுதல், சிறிய ரூம் அமைத்தல்).ஆனால், அடுத்தடுத்து இரண்டு மாடிகளை மிகவும் புதிதாகக் கட்டப்பட்ட கட்டுமானத்தின் மீது யாதொரு பயமுமின்றி தொழிற்நுட்ப அறிவுமின்றி, ஒரு கட்டுநர் கட்டுகிறார் எனில் அவருக்கு எத்தனை பேராசை இருந்திருக்க வேண்டும்? 4. இது தவிர, அங்கு வசித்த குடும்பங்களைப் பற்றியும் நாம் சொல்லியாக வேண்டும். ரூ.30 லட்சம், ரூ.40 லட்சம் பணத்தைக் கொடுத்து வீட்டை வாங்கிய மக்கள் எனும்போது நிச்சயம் அவர்கள் படிக்காத கீழ்த்தட்டு மக்களாக இருந்திருக்க மாட்டார்கள். நகராட்சியால் வழங்கப்படுகிற பணிநிறைவு சான்றிதழை வாங்கி சரி பார்க்காமல், உடனேயே புது வீட்டுக்கு சென்றுவிட வேண்டும் என பேராவல் கொண்டது, மற்றும் தாங்கள் குடியிருக்கும்போதே தங்கள் வீட்டிற்கு மேல் நடைபெறும் கட்டுமானத்தை எதிர்க்காமல் போனது ஆகியவை இரண்டுமே வருந்தத்தக்கது மட்டுமல்ல, கண்டிக்கத்தக்கதும் கூட என்பது சற்று ஆராய்ந்து பார்த்தால் நன்கு புலனாகிறது. “ ‘தானே’ கட்டிடம் ஒரு வெளிப்பட்ட உதாரணமே தவிர, அதைப் போன்றே பெரும்பாலான கட்டிடங்கள் நாடு முழுவதிலும், ஏன்? நம் தமிழ்நாட்டிலும் உருவாகி வருகின்றன” என ஒரு குண்டை தூக்கிப் போடுகிறார் திரு. ராஜாராம்.கட்டிடவியல் நிபுணரான திரு. ராஜாராமிடமும், ‘தானே’வில் நடந்த இந்த கோர கட்டிட விபத்து தமிழ்நாட்டிலும் நடைபெறுவதற்கு வாய்ப்புண்டா? எனக் கேட்டபோது “இதற்கு முன்பு கோவையில் ஒரு கட்டிடம் புதைந்துபோனது உங்களுக்கு நினைவில்லையா? அதைப்பற்றி சில நாட்கள் எல்லோரும் பேசினார்கள், எழுதினார்கள். பின்பு அதைப்பற்றி மறந்தே போனார்கள். காலம் காலமாக மண்பரிசோதனை செய்யாமலும், கட்டிட வடிவமைப்புகளை ஆராயமலும் கட்டிடங்களைக் கட்டுவது என்பது தமிழ்நாட்டிலும் உண்டு. சென்னை நகருக்குள்ளாவது பரவாயில்லை. கொஞ்சம் புறநகர் வந்து பாருங்கள். எத்தனை கட்டிடங்களை விதிகள் மீறி கட்டிக் கொண்டிருக்கிறார்கள்? என்பது தெளிவாகப் புரியும். ஊரப்பாக்கம் போன்ற புறநகர் பகுதிகளில் தரைதளம், மற்றும் ஓரடுக்கு கட்டுமானங்களுக்கு (ஜி+1) டி.டி.சி.பி. அப்ரூவல் தேவையில்லை என்பதால் உள்ளூர் பஞ்சாயத்து அனுமதி இருந்தாலே போதும் என்கிற நிலைமை உள்ளது. கட்டிடம் பற்றிய விழிப்புணர்களை ஏற்படுத்த விருப்பம் இல்லை என்பதை எளிதாகப் புரிந்து கொள்ளலாம். ஒரு கட்டிடம் சரிந்து, விபத்தினை ஏற்படுத்தி பல குடும்பங்களை பலி கொள்கிறது என்றால் அதற்கு கட்டுநர்கள் மட்டுமே காரணம் இல்லை. முதலில் அரசு, பிறகு உள்ளூர் நகராட்சி அமைப்பு, அதற்குப் பிறகு கட்டுநர், அவரிடம் பணிபுரியும் அதிகாரிகள், முறைகேடான கட்டு மானத்தில் முறையாக விசாரிக்காமல் வந்து குடியமர்ந்து மக்கள் இவர்கள் அனைவருக்குமே அந்த உயிர்ச்சேதத்தில் பங்கு இருக்கிறது என்று அர்த்தம்” என்கிறார் ராஜா. அடுக்குமாடி கட்டிடங்களை கட்டும் நிறுவனங்கள், பாதுகாப்புக்கு எந்த அளவுக்கு முக்கியத்துவம் கொடுக்கின்றன? இவற்றுக்கு அனுமதி அளிக்கும் அரசு துறைகள் எப்படி கண்காணிக் கின்றன? கட்டிடத்தின்பாதுகாப்புக்கு யார் பொறுப்பு? என்பது போன்ற கேள்விகளுக்கு பதில் தேட வேண்டிய அவசியம் ஏற்பட்டுள்ளது. வாழ்நாள் முழுவதும் சேர்த்த பணத்தை மட்டுமல்லாது, நம் பாதுகாப்பையும் வீடு கட்டுபவரை நம்பிக் கொடுக்கிறோம்.ஆனால்,இந்த கட்டிடத்தை கட்டி முடித்து விற்பனை செய்தால் இவ்வளவு லாபம் கிடைக்கும் என்பதை மட்டும் கணக்கு போட்டு செயல்படும் சில கட்டுமான நிறுவனங்களால் இத்துறையில் நியாயமாக செயல்பட நினைப் பவர்கள் பெயரும் கெடுகிறது.குறைந்த காலத்தில், அதிக லாபம் பார்க்க வேண்டும் என்பதில் ஏற்பட்டுள்ள போட்டியும், ‘தானே’ சம்பவத்துக்கு ஒரு காரணமாக உள்ளது என்பது உண்மை. கட்டுமானத் தொழிலில் விதிமுறைப்படி செயல்பட வேண்டும் என்பதற்காக, அரசு தரப்பில் பல்வேறு விதிமுறைகள் வகுக்கப்பட்டாலும், அவை எந்த அளவுக்கு அமலாக்கப்படுகின்றன என்பது பொறுத்துதான் தானேவின் நிலைமை தமிழ்நாட்டிலும் வெளிப்படுமா? என்கிற கேள்விக்கு பதில் இருக்கிறது.