சோலார் பெயிண்டும் சோலார் கொடியும் !


ஒவ்வொரு வீட்டிலும் சோலார் மின்சாரம் தயாரிக்க அரசு மற்றும் சமூக ஆர்வலர்கள் வற்புறுத்தினாலும், அது நடைமுறையில் பொருளாதார சிக்கல்களை உடையதாக இருப்பதால் பெரும்பாலும் பரவலாக்கப்படாமல் இருக்கிறது.ஆனால், தற்போது கட்டுமானத்துறையில் பரபரப்பாக பேசப்படுவது திரவ நிலையில் சோலார் பேனல்கள்.
அதாவது,சோலார் பெயிண்டுகள் மூலம் மின்சாரம் தயாரிப்பது பற்றிதான்.

சூரிய ஒளியில் இருந்து மின்சாரம் தயாரிக்கும் சோலார் பேனல்களை திரவ வடிவில் உருவாக்கும் காலம் வெகு தொலைவில் இல்லை.தரையிலும்,சுவரிலும் சோலார் பேனல் பெயின்டை அடித்தால் வீட்டுக்கு வீடு, தரைக்கு தரை, சுவருக்கு சுவர் மின் உற்பத்தி நடக்கும் என்கின்றனர் விஞ்ஞானிகள்.இதுபற்றி அமெரிக்காவின் நியூயார்க் மாநிலத்தில் உள்ள பஃபல்லோ பல்கலைக்கழக எலெக்ட்ரிகல் இன்ஜினியரிங் துறை பேராசிரியரும், ஆராய்ச்சியாளருமான கியாவ்கியாங் கான் கூறியபோது:

  “ஒளி ஆற்றலை மின்சாரமாக மாற்றும் திறன் பெற்ற சோலார் செல்களின் தொகுப்புதான் சோலார் பேனல் எனப்படுகிறது. பொதுவாக பாலி கிரிஸ்டலைன் சிலிகானை கொண்டுதான் இந்த பேனல் உருவாக்கப்படுகிறது. மெலிதான பிலிம் போல பேனலை தயாரிப்பதென்றால்  அதிகசெலவு ஏற்படுத்தக்கூடியவை. குறைந்த செலவிலான சோலார் பேனல்களை உருவாக்கும் முயற்சி உலகம் முழுக்க நடக்கிறது. அந்த வகையில் பிளாஸ்மோனிக் தன்மை கொண்ட ஆர்கானிக் வகை பொருட்களை சோலார் பேனலாக பயன்படுத்தினால் அதிக மின் உற்பத்தி செய்ய முடியும், செலவும் குறைவு என கண்டறியப்பட்டுள்ளது.மேலும், இது திரவ வடிவில் இருப்பதால் பயன்படுத்துவதும் எளிது. திரவ வடிவில் இருக்கும் சோலார் பேனலை சுவர், தரை என எந்த பகுதியிலும் பெயின்ட் போல எளிதில் பூச முடியும். வெளிச்சம் கிடைக்கும் எல்லா இடத்திலும் இந்த பெயின்ட் அடித்தால் மின் உற்பத்தியும் அதிகளவில் நடக்கும். இது மட்டுமன்றி, கார்பனை அடிப்படையாக கொண்ட சிறு மூலக்கூறுகள், பாலிமர்கள் ஆகியவற்றை பயன்படுத்தி பிலிம் வகை சோலார் பேனல் உருவாக்கும் முயற்சியிலும் ஈடுபட்டுள்ளோம். இவற்றையும் குறைந்த செலவில் தயாரிக்க முடியும்” என்று
கியாவ்கியாங் கான் கூறினார்.

இது ஒருபுறம் இருக்க, நியூயார்க்கில் இன்னொரு குழுவினர் சோலார் கொடிகள் மூலம் மின்சாரம் தயாரிக்கும் கண்டுபிடிப்பில் வெற்றி கண்டுள்ளனர். ஏராளமான செயற்கை இலைகளை கொண்டு கொடிகளாக தயாரிக்கப்பட்டுள்ள இதற்கு ‘சோலார் ஐவி’ என்று பெயரிடப்பட்டுள்ளது.இந்த கொடிகளை வீட்டு வெளிப்புற சுவர்களில் படரவிட்டால் போதும். இயற்கையான கொடிகளை போன்று கண்ணைக் கவரும் விதமாக அழகாக படர்ந்திருக்கும். வீட்டுக்குத் தேவையான மின்சாரத் தேவையையும் இதன் மூலம் பூர்த்தி செய்து கொள்ளலாம். இதில் நுண்ணிய போட்டோவோல்டெய்க் பேனல்கள் என்ற தகடுகள் பொருத்தப்பட்டிருக்கும். இவை சூரிய ஒளியில் இருந்து மின்சாரத்தை உற்பத்தி செய்யும். தேவைப்படும் மின்சாரத்துக்கு ஏற்ப கொடிகளை படரவிடலாம். பல வண்ணங்களிலும், வடிவங்களிலும் கொடிகள் கிடைக்கும். இதனால் எந்த பாதிப்புகளும் இருக்காது. இறுதிகட்ட ஒப்புதலையடுத்து விரைவில் பயன்பாட்டுக்கு வர உள்ளது.