இரும்பு கழிவில் கட்டுமான கற்கள் !


சில செங்கல்களை எடுத்துப் பார்க்கும் போது என்ன இது..இரும்பைப் போல் இருக்கிறதே என்று வியப்படையத் தோன்றும். கொஞ்சம் பொறுங்கள். இரும்புச் செங்கற்களே வரப் போகின்றன.  உண்மைதான்.இரும்பு உற்பத்தி ஆலைகளில் உருவாகும் கழிவுகளைப் பயன்படுத்திக் கற்களைத் தயாரிக்கலாம் என்று கண்டுபிடித்திருக்கிறார்கள். இரும்பு ஆலைகளில் தூசி வடிவில் திரளும் குப்பைகளின் அளவு மலைப்பூட்டுவதாக இருக்கிறது.

ஐரோப்பிய நாடுகளில் இந்த வகைக் கழிவு ஆண்டொன்றுக்கு 7 இலட்சம் டன் என்ற அளவில் இருக்கிறது. அமெரிக்காவில் இது 1.2 கோடி டன் வரை இருக்கும் என்கிறார்கள். இவ்வளவு பெரிய அளவிலான கழிவை அப்படியே விட்டு வைத்துக் கொண்டிருந்தார்கள்.
இந்தக் கழிவை மூலப் பொருளாகக் கொண்டு கற்களைத் தயாரித்துக் கட்டுமானத் தேவைகளை நிறைவு செய்ய முடியும் என்று கண்டுபிடித்திருக்கிறார்கள்.

இரும்பு உற்பத்தி ஆலைகளில் உருவாகும் கழிவுகளை வேல்ஜ் ஸ்லாக் (Waelz slag) என்று குறிப்பிடுவார்கள். சாதாரணமாக இது
பாறாங்கற்களைப் போல் காணப்படும். இதற்குப் பெரிய உபயோகம் எதுவும் இல்லை என்று போட்டு வைத்துவிடுவார்கள். எங்காவது பள்ளங்களை நிரப்ப வேண்டி இருந்தால் அங்கு இதைக் கொண்டு போய்க் கொட்டிவிடுவார்கள்.  இது விலைமதிக்க முடியாத நல்ல கட்டுமானப் பொருளாக மாற்றப் படலாம் என்று இப்போது கண்டு கொண்டிருக்கிறார்கள்.

வேல்ஜ் ஸ்லாக்கில் இரும்பு இருக்கிறது. சுண்ணாம்பு இடம் பெற்றிருக்கிறது. சிலிகான் ஆக்ஸைடும் உண்டு.  மாங்கனீஸ், காரீயம், துத்தநாகம் போன்ற உலோக ஆக்ஸைடுகளையும் காணலாம். இத்தனை நல்ல பொருட்களைக் கொண்டுள்ள இந்தக் கசடை எப்படிப் பயனுள்ள வகையில் பயன்படுத்தலாம் என்று ஆராய்ந்திருக்கிறார்கள்.
கட்டுமானத்திற்கான கற்கள், ஓடுகள், பிற பீங்கான் பொருட்களைத் தயாரிக்க இதை மூலப் பொருளாக எடுத்துக் கொள்ளலாம் என்பது அண்மைக்கால ஆராய்ச்சிகளின் முடிவாகும். இதை வணிக ரீதியில் கட்டுப்படியாகக் கூடிய விலையில் உற்பத்தி செய்து பயன்படுத்தலாம்.

மூலப்பொருட்களில் உள்ள சில நச்சுக்கள் தயாரிப்புப் பொருளிலும் இடம் பெற்றுவிட நேர்வது விரும்பத்தக்கதல்ல.  இருப்பினும் இந்த நச்சுக்களின் விகிதம் தர நிர்ணய விதிமுறைகளின்படி ஏற்றுக் கொள்ளக் கூடிய அளவை விடக் குறைவாகவே காணப்படுகிறது.இரும்பாலைக் கழிவுகளில் இருந்து தயாரிக்கப்படும் கற்களும் ஓடுகளும் மிகச் சிறந்த வலுவைக் கொண்டவையாக இருப்பதால் இவற்றில் உள்ள சிறு சிறு குறைகளைக் கண்டு கொள்ளத் தேவையில்லை என்பது ஆராய்ச்சியாளர்களின் கருத்து.
கனமான தாய்ச்சுவர்களுக்கு இந்த இரும்பு கற்கள் மிகப் பொருத்தமாக இருக்கும்.