கட்டுமானத்துறையில் லிஃப்டில் ஏற்படும் விபத்துகளை தவிர்ப்பது எப்படி ?


உலகிலேயே விபத்துக்களை ஏற்படுத்தும் பல்வேறு துறைகளுள் சுரங்க தொழிலும், சாலை விபத்துக்களும், கட்டுமானத்துறையும் முதன்மையானது. அவற்றுள் கட்டுமானத்துறை விபத்துக்களை மட்டும் ஆராய்ந்தால், அவை பெரும்பாலும் பாரங்களை கையாள்வதால் ஏற்படும் விபத்துக்களே ஆகும்.

அதிலும் குறிப்பாக கட்டிட பொருட்களை அடுத்தடுத்த தளங்களுக்கு கொண்டு செல்லும் மின் தூக்கிகள் ஏற்படுத்தும் விபத்துக்கள் கொஞ்ச நஞ்சமல்ல. கட்டிடப் பணித்தளங்களில் லிஃப்டுகள் எனப்படும் பளு தூக்கிகளால் ஏற்படும் விபத்துக்கான காரணங்களும் தடுக்கும் முறைகளும்:
 விபத்துக்கள் நடைபெறக் காரணங்கள்:
 தனி நபர்களின் தவறு
1. போதிய அனுபவமற்ற அல்லது திறமையற்ற ஆப்பரேட்டர்கள்
மூலம் லிப்டுகள் இயக்கப்படுதல்.
2. ஆப்பரேட்டருக்கு ஓய்வு அளிக்கப்படாமல் தொடர்ந்து கூடுதல் நேரம் பணியில் ஈடுபடுத்துதல்.
3. பொருட்களுக்கு மட்டும் வடிவமைக்கப்பட்டுள்ள பளுதூக்கி களில் பணியாளர்கள் பயணித்தல்.
4. பளு மேடையில் பொருட்களை சரியான நிலையில் வைக்காமல் அவசரகதியில் உயர்த்துதல்.
5. முட்டுகள், வலுவூட்டிக் கம்பிகள் போன்ற நீளமான பொருட்களை செங்குத்தாக நிறுத்தி சரியாக பிணைக்காமல் ஒன்றோ இரண்டோ பணியாளர்கள் பிடித்துக்கொண்டு தூக்குதல்/இறக்குதல்.
6. அளவுக்கதிகமான பளுக்களை ஏற்றுதல்.
7. அவசர கதியில் வேகமாக பளுமேடைகளை கீழிறக்குதல் மற்றும் திடீர் பிரேக் மூலம் நிறுத்துதல்.
8. லிஃப்டுகள் தளத்தை அடைந்து நிறுத்தப்படுமுன் தளத்துக்குத் தாவுதல்.
9. பணியாளர் தலைக்கவசம், பாதுகாப்பு பெல்ட் போன்ற உபகரணங்களை அணியாமை;மாறாக நீளமான, காற்றில் பறக்கக்கூடிய உடைகளை அணிந்துகொண்டு லிஃப்டில் பயணித்தல்.

இயந்திரக் கோளாறு

1. இந்திய தர நிர்ணய விதிகளை நிறைவு செய்யாத பளுதூக்கிகளைப் பயன்படுத்துதல்.
2. விலை மலிவாய் கிடைக்கும், தரமற்ற பாகங்களைக் கொண்ட, சரியாக வடிவமைக்கப்படாத, தானியங்கிக் கட்டுப்பாட்டு அமைப்பு இல்லாத பளுதூக்கிகளைப் பயன்படுத்துதல்.
3. சுற்றிலும் பாதுகாப்புக் கம்பித்தடைகள், கைப்பிடிகள், பிணைப்பு வளையங்கள் அற்ற பளு மேடைகளைப் பயன்படுத்துதல்.
4. இயந்திரங்களைச் சீராக பராமரிக்காமை.
5. பழுதுகள் உள்ள மற்றும் அடிக்கடி பிரச்சினைகள் கொடுக்கும் பளுதூக்கிகளை முழுமையாக பழுது நீக்காமல் தொடர்ந்து பயன்படுத்துதல்.
6. பளுதூக்கிகள் சரியாக நிறுவப்படாமை, பளுமேடையும் கட்டிட தளமும் சமமட்டத்தில் அமையாமை, பளுமேடைக்கும், கட்டிட தளத்திற்கும் அதிகமான இடைவெளி இருத்தல்.
7. பிற பணியாளர் மற்றும் பார்வையாளர்கள் லிஃப்டின் அருகே செல்லாதவாறு தடுப்பு வேலி அமைக்கப்படாமை.
8. லிஃப்டுகள் பழுதுபடுகையில் உரிய மெக்கானிக்குகளை அழைக்காமல், ஆப்பரேட்டரோ, பிற பணியாளர்களோ பழுதை நீக்கி இயக்க முயற்சித்தல்.
9. மின்கசிவு ஏற்படுதல்.
10. தேய்மான மிகுதியால் செயின், கயிறு போன்ற பாகங்கள் அறுதல்.

எதிர்பாரா நிகழ்வுகள்

1. காற்று, மழை, வெள்ளம் போன்ற இயற்கையின் சீற்றங்களால் லிஃப்டுகளின் தாங்கிகள் விழுதல்/இறங்குதல்/சரிதல்.
2. சுற்றுப்புற சார அமைப்புகள் சாய்தல்.
3. மின்தடை நீங்குகையில் இயந்திரங்களின் திடீர் இயக்கம்.
4. எரியும் பொருட்கள் தீப்பற்றுதல்.
5. வெடி விபத்துகள் மற்றும் வாயு கசிவு.

விபத்துக்களைத் தடுக்கும் முறைகள்

1. இந்திய தர நிர்ணய விதிகளைப் பூர்த்தி செய்யும் தரமான பளுதூக்கிகளைப் பயன்படுத்த வேண்டும்.
2. பளுதூக்கி தயாரிக்கும் நிறுவனத்தின் அனுபவம் மற்றும் திறமை படைத்த ஊழியர்கள் மூலம் பணித்தள தேவைகளுக்கேற்ப
லிஃப்டுகள் நிறுவப்பட வேண்டும்.
3. அங்கீகாரம்/லைசன்ஸ் பெற்ற நபர்களால் குறிப்பிட்ட கால இடைவெளியில் லிஃப்டுகள் ஆய்வு செய்யப்பட்டு, பாகங்களுக்குத் தேவையான கிரீஸ்/ஆயில் இடப்பட்டு முறையாகப் பராமரிக்கப்பட வேண்டும்.
4. பழுதடைந்த பாகங்கள் உடனுக்குடன் மாற்றப்பட வேண்டும்.
5. தகுதியும், அனுபவமும் உள்ள ஆப்பரேட்டர்கள் மூலம் மட்டுமே லிஃப்டுகள் இயக்கப்பட வேண்டும். 6. பளுக்களோடு பணியாளர்கள் லிஃப்டில் பயணிப்பது தவிர்க்கப்பட வேண்டும்.
7. லிஃப்ட் அமைந்துள்ள இடத்திற்கருகில் பிற பணியாளர்கள், சிறுவர்கள் மற்றும் பார்வையாளர்கள் செல்லாத வண்ணம் தடுப்புவேலி அமைக்கப்பட வேண்டும்.
8. பிணைக்கப்படாத செங்கல், ஓடுகள், கற்கள், மணல் போன்ற பளுக்கள், உரிய பெட்டிகள் அல்லது தள்ளு வண்டிகள் மூலம் மட்டுமே பளுமேடையில் ஏற்றப்பட வேண்டும்.
9. குறிப்பிட்ட/அனுமதிக்கப்பட்ட அளவுக்கதிகமான பொருட்களை ஏற்றக்கூடாது.
10. பணியாளர்கள் மற்றும் ஆப்பரேட்டர்கள் பாதுகாப்பு உபகரணங்களை கண்டிப்பாய் அணிய வேண்டும்.
11. புதிதாய் பணியில் சேருவோருக்கு பாதுகாப்பு முறைகள் பற்றிய விளக்கமும், அறிவுரைகளும் வழங்கப்பட வேண்டும்.
12. சாரங்கள், ஏணிகள், கயிறுகள், பெல்டுகள், செயின்கள், மின் ஒயர்கள்/கேபிள்கள் போன்றவை பழுதின்றி சரியாக உள்ளனவா என்பதை தினமும் பணிமேற்பார்வையாளர் மற்றும் பொறுப்பு பொறியாளர் கண்காணிக்க வேண்டும்.

எத்தனை தடவைதான் நாம் பாதுகாப்பு விதிகளை பட்டியலிட்டு கூறினாலும், அதை பின்பற்ற வேண்டிய பொறுப்பு கட்டுமான தொழிலாளர்களுக்கும், அவற்றை கண்காணிக்க வேண்டிய பொறுப்பு மேற்பார்வையாளர்களுக்கும் இருக்கிறது. இவர்களோடு கட்டுநர்களுக்கும், கான்ட்ராக்டர்களுக்கும் பாதுகாப்பு விதிகளைப் பற்றிய விழிப்புணர்வும் ஈடுபாடும் இருந்தால்தான் முற்றிலுமாக கட்டுமானத் துறையில் ஏற்படும்
விபத்துகளை தவிர்க்க முடியும்.

செய்வார்கள் என நம்புவோமாக.