கட்டிட பொருட்களை பாதுகாக்க டிப்ஸ்கள் !


சொந்தமாக வீடு கட்டுவோர்களுக்கும் சரி, கட்டுநர்களுக்கும், கான்ட்ராக்டர்களுக்கும் சரி, காஸ்ட்லியான விஷயம் என்பது நிலத்திற்கு அடுத்தபடியாக, கட்டுமானப் பொருட்களைத்தான் குறிப்பிட முடியும்.

தேவைக்கேற்ப கொள்முதல் செய்வது, சரக்கிருப்பை வைத்துக் கொள்வது தொடர்பான முக்கிய டிப்ஸ்களை இங்கு காண்போம்.

          இவை ஸ்டோர் கீப்பர்களுக்கும், பர்ச்சேஸ் மேனேஜர்களுக்கும் பயன்படக்கூடியது.

1. கிடங்கில் சரக்கிருப்பு வைத்துக் கொள்வது என்பது மட்டும் மெட்டீரியல் மேனேஜ்மென்ட் ஆகிவிடாது. தேவைக்கு மிகுதியான இருப்பும் கூடாது, பற்றாக்குறையும் ஏற்படக்கூடாது என்கிற இரு புள்ளிகளுக்கு இடையே பயணிப்பது என்பதுதான் உண்மையான மெட்டீரியல் மேனேஜ்மென்ட்.

2. தகுந்த நபர் துணை கொண்டு, ஒரு கட்டுமானத்திற்குத் தேவையான மொத்த கட்டுமான பொருட்களையோ அல்லது குறிப்பிட்ட காலத்திற்குத் தேவையான கட்டுமான பொருட்களையோ மிகத் துல்லியமாகக் கணக்கிட்டு, முன்கூட்டியே வாங்கி பாதுகாப்பான முறையில் வைத்திடல் வேண்டும்.

3. அதிகம் கிடைக்காத அல்லது கிடைப்பதற்கு அரிய பிராண்டின் பொருட்களை முன்கூட்டியே தேவையான அளவில் வாங்கி வைத்திடல் வேண்டும்.

4. நமது தேவையை அறிந்து, அதற்கேற்ப உடனே மெட்டீரியலை சப்ளை செய்யும் டீலர்களுடன் பல தொடர்புகளை ஏற்படுத்திக் கொள்ள வேண்டும்.

5. ஒரு குறிப்பிட்ட பிராண்டின் பொருளை வாங்குவதற்கு முன் அதன் நிறை குறைகளை ஆராய வேண்டும். அதன் போட்டிப் பொருளோடு ஒப்பிட வேண்டும்.

6. சரக்கு என்பதின் எதிர் காரணி விலை ஆகும். எனவே, சரக்கினை வாங்குவதற்கு முன்பு அதன் விலை பற்றி பல தடவை யோசித்திடல் வேண்டும். இவற்றைப் பற்றிய சரியான கணக்கிடல் இருந்தால் மட்டுமே நம்மால் முழுக் கட்டுமானத்தையும் சிரமமின்றி முடிக்க இயலும்.

7. தேவை ஏற்படுகிற போது மட்டுமே சரக்கினை வாங்குவது அனைவராலும் ஏற்றுக் கொள்ளப்பட்ட முறையாகும். நம்முடைய தவறான யூகங்களின் காரணமாக, பொருளை வாங்கி குவித்து வைப்பது ஒரு வித மறைமுக வட்டியில்லாத முதலீடு ஆகும். இது நமக்கு நஷ்டத்தினை ஏற்படுத்தும்.

8. நமக்கு 45 முதல் 90 நாட்கள் கடனில் தருவதாக கடைக்காரர் அல்லது டீலர்கள் சொல்லலாம். அப்போது, அவர்கள் மொத்தத் தொகைக்கு வட்டி வசூலிக்கிறார்களா? என்பதை நன்கு விசாரியுங்கள்.

9. ரொக்கப்பணம் கொடுத்து வாங்குவதற்கும், கடனில் வாங்குவதற்கும் விலை வித்தியாசம் இருக்கிறதா? என்பதை விசாரியுங்கள்.அந்த வேறுபாடு அதிகமாக இருந்தால், நீங்கள் ரொக்கப்பணம் கொடுத்தே பொருட்களை வாங்க முயற்சிக்கலாம். ஆனால், அதற்கு முன்பாக வட்டிக் கணக்கீடு அவசியம்.

10. சிக்கனப்படுத்துகிறேன் என்பதற்காக, மட்டமானப்பொருட்களைப் பயன்படுத்தாதீர்கள். பெரும்பாலும் வீடு கட்டுபவர்கள் தங்கள் வீடுகளுக்கு நல்ல தரமான டைல்களும், கேபிள்களும் வாங்குவார்கள். வாடகைக்கு விடும் வீடுகளுக்கு மட்டமான நான் பிராண்டட் டைல்ஸ் பெயிண்ட் மற்றும் கேபிள்களைப் போட்டு விடுவார்கள். அவர்கள் மூன்று ஆண்டு காலம் இருந்துவிட்டுச் சென்ற பிறகு, நாம் போய் பார்த்தோமெனில் வீடு அலங்கோலமாக இருக்கும். திரும்பவும் நாம் அவற்றைச் சரி செய்ய செலவழிக்க வேண்டும்.

11. கட்டுமானப் பணிகளுக்குத் தேவையான பொருட்கள், அவை பணிகளுக்கு எடுத்துக் கொள்ளப்படும் வரை மிக ஜாக்கிரதையாக பாதுகாத்து வைக்க வேண்டும். அதிக சூரிய வெளிச்சத்தில் கட்டுமான ரசாயனங்களை வைப்பது, எளிதில் தீப்பற்றக் கூடிய பொருட்களுக்கு அருகே வெல்டிங் மற்றும் எலெக்ட்ரிகல் வேலைகளை அனுமதிப்பது, தகுந்த கூரைகள் இன்றி கட்டுமானப் பொருட்களை அடுக்கி வைத்திருப்பது, மழையில் அவற்றை நனைய வைப்பது, குறைந்தபட்சம் தார்ப்பாலின் போன்ற கூரைகளால் கட்டுமானப் பொருட்களை மூடாமல் வைத்திருப்பது, தகுந்த பாதுகாப்பு இன்றி கிடங்கினை அமைப்பது, இவை அனைத்துமே தவறானவையாகும், தவிர்க்கப்பட வேண்டியதுமாகும்.

12. நல்ல ஸ்டோர்கீப்பர் என்பவர் அமைந்து விட்டால், வீடு கட்டுவோருக்கும் சரி, பர்ச்சேஸ் மேனேஜருக்கும் சரி, சரக்கிருப்பில் எந்தப் பிரச்சனையும் இருக்காது. ஒவ்வொரு நாளும் பணி இறுதியில் அப்போதைய சரக்கிருப்பு நிலவரத்தை உயர் அதிகாரியிடம் தெரிவித்திட வேண்டும். மேலும், நாளைய பணித்திட்டம் என்ன? அதற்கேற்ற பொருட்கள் உள்ளனவா? என்பதைப் பற்றியும் தகவல் தெரிவிக்க வேண்டும். பெரும்பாலும் சொந்தமாக வீடு கட்டுபவர்களுக்கு அவர்களேதான் ஸ்டோர்கீப்பராகவும் செயல்பட வேண்டியிருக்கிறது. எனவே, மெட்டீரியல் ஸ்டாக்கின் மீது முழு கவனமும் இருக்க வேண்டும்.

13. மெட்டீரியலைப் பாதுகாத்தல் போலவே, மெட்டீரியலைச் சிக்கனமாகச் செலவழித்தலும் இன்றியமையாதது. எத்தனை சதுர அடிக்கு எவ்வளவு பொருட்கள் தேவைப்படுகின்றன என்பதை பொறியாளர் போன்ற நிபுணர்களுடன் கணக்கிட்டு, அவை சரியான அளவில், சரியான முறையில் செலவிடப்படுகின்றனவா? என்பதைக் கண்காணிக்க வேண்டும்.

14. நிறுவனங்கள், கான்ட்ராக்டர்கள் தங்கள் வசதிக்கேற்ப கிடங்குகளை அமைத்து அதில் சிமெண்ட் போன்ற கட்டுமான பொருட்களை பாதுகாப்பர். ஆனால், தமக்கென சொந்த வீடு கட்டும் பொதுமக்கள் சாதாரண ஓலை குடிசைகளையோ, தார்பாலின் டென்ட் அமைத்தோ சிமெண்ட் மூட்டைகளை அடுக்குவர். அதிக ஈரம், காற்று படக்கூடிய வகையில் சிமெண்ட் மூட்டைகளுக்கு கொட்டகைகள் அமைக்கக் கூடாது. அதேபோன்று வெயில் காலம்தானே என்று இரவு திறந்த வெளியில் சிமெண்ட் மூட்டைகளை வைத்துவிடவும் கூடாது.

15. தொழிலாளர்கள் பணிபுரியும்போது அவர்கள் செய்யும் பணி முறையினைக் கண்காணிக்க வேண்டும். பொருட்களை வேண்டுமென்றே வீண் செய்கிறார்களா? அல்லது திறமைக் குறைவால் வீண் செய்யப்படுகிறதா? அல்லது தவறான கட்டுமான முறையால் மெட்டீரியல் வீணாகிறதா? என்பதை நன்கு ஆராய்ந்து குறைகளைக் களைய வேண்டும்.

16. ஒரு கட்டுமானத்தைப் பொறுத்தவரை கட்டுமானப் பொருட்கள் குறைந்தபட்சம் 5 சதவீதமாவது வீணாவதற்கு அவற்றைத் தவறாகக் கையாளுதலே காரணம் என ஓர் அறிக்கை கூறுகிறது. எனவே, தொழிலாளர்களிடம் கலந்து பேசி, அவர்களை அலட்சியமின்றி பணிபுரிய ஊக்குவிக்க வேண்டும்.அடிக்கடி பாராட்ட வேண்டும்.

17. வீடுகளைக் கட்டும் தனி நபரை விட, சரக்கிருப்பில் தொழில்முறை கட்டுநர்கள் அதிக கவனம் செலுத்த வேண்டியது அவசியம். பொருள் உள்வரவு, வெளிச் செல்லல் ஆகியவற்றை கண்காணித்தல், ஏடுகளை பராமரித்தல், உலகப் புகழ்பெற்ற முறையான ஃபிஃபோ (FIFO) முறையை கடைபிடித்தல் (அதாவது முதலில் வருவதைFirst In, முதலில் பட்டுவாடா செய்தல் First Out) என பல்வேறு அம்சங்கள் சரக்கிருப்பில் உள்ளன. அவற்றின்படி கட்டுநர்களும், கான்ட்ராக்டர்களும் நடந்து கொள்ள வேண்டும்.