கிரீன் ஃ பீல்ட் விமானநிலையம் ஒரு ரியல் எஸ்டேட் மோசடியா !


தமிழகத்தில் வளர்ச்சி திட்டங்களுக்கான அறிவிப்பின் தேதிக்கும், அதன் அடிக்கல் நாட்டு விழாவின் தேதிக்கும் மிகப்பெரிய கால இடைவெளி இருக்கும். அதைவிட கொடுமை, அடிக்கல் நாட்டு விழா தேதிக்கும், பணி நிறைவு நாள் தேதிக்கும் மிகப்பெரிய யுகங்களின் இடைவெளி இருக்கும். அப்படி எத்தனையோ திட்டங்களை நாம் சொல்ல முடியும்.

          சென்னை, மதுரவாயல் துறைமுகம் சாலை திட்டத்தில் தொடங்கி சேது சமுத்திர திட்டம், கூடங்குளம் அணுமின் நிலைய திட்டம் என சொல்லிக்கொண்டே போகலாம். அந்த வரிசையில் இப்போது சென்னை ஸ்ரீபெரும்புதூர் கிரீன் ஃபீல்ட் ஏர்போர்ட். சாமான்ய மனிதனுக்கு இதைப்பற்றி உரையாடக் கூட செய்தி அறிவு இல்லையென்பதால் நாளிதழ்களில் ஏதேனும் ஒரு ஓரத்தில் சென்னை ஏர்போர்ட் பற்றிய லேடஸ்ட் செய்திகள் அவ்வப்போது முரண்பட்ட தகவல்களைத் தெரிவித்துக்கொண்டிருக்கின்றன.

        தென்னிந்தியாவில் ஏதோ ஒரு மூலையில் இருக்கும் ஸ்ரீபெரும்புதூர் ரியல் எஸ்டேட்டிற்கும், மத்திய,மாநில அரசு சதுரங்க காய் ஆட்டத்திற்கும் தொடர்பு இருக்கிறது என்றால் உங்களால் நம்ப முடிகிறதா? இதனைச் சற்று விரிவாக ஆராய்வதற்கு முன்பு கிரீன் ஃபீல்ட் விமான நிலையம் என்றால் என்ன என்பதை தெரிந்து கொள்வோம். கிரீன் ஃபீல்ட் விமான நிலையம்என்பது சென்னையில் மட்டும் அமைக்கப்படக் கூடிய திட்டம் அல்ல.

சென்னை போன்ற எம்.என்.சி நிறுவனங்கள் நிறைந்திருக்கும் அனைத்து இந்திய நகரங்களிலும் பசுமைக் கட்டிட விமான நிலையங்கள் உருவாக்கப்பட வேண்டும் என்பது மத்திய அரசின் எண்ணமாக இருந்தது. ஆந்திரா, கர்நாடகா, கேரளா, டெல்லி போன்ற மாநிலங்களில் கிரீன்ஃபீல்ட் விமான நிலையங்கள் அமைக்கப்பட்டு வருகின்றன. தமிழகத்தில் பரபரப்பாக இயங்கும் சென்னை மீனம்பாக்கம் விமான நிலையத்தில் அதிகப்படியான விமானங்கள், சரக்குகள் கையாளப்படுவதால் வருங்கால தேவையை முன்னிட்டு மீனம்பாக்கத்திலிருந்து 40 கி.மீ தொலைவிலுள்ள ஸ்ரீபெரும்புதூர் அருகே கிரீன் ஃபீல்ட் விமான நிலையம் அமைக்க மத்திய அரசு முடிவு செய்து 2009 செப்டம்பரில் அறிவித்தது.(இதற்கான சர்வகட்சிகளின் கூட்டம் தி.மு.க ஆட்சி காலத்தில் 2007 ல் நடைபெற்றது). இதற்காக 4,500 ஏக்கர் நிலத்தை கையகப்படுத்த அப்போதைய மாநில அரசு முடிவெடுத்தது.

நிலம் கையகப்படுத்தும் பணிகள் முடிந்து, கட்டுமானப் பணிகள் துவக்கப்படும் நாளிலிருந்து 28 மாதங்களில் கிரீன் ஃபீல்ட் ஏர்போர்ட் கட்டுமானப் பணிகள் நிறைவடையும் என்றும், இதற்கென ரூ.2,000 கோடி நிதி ஒதுக்கப்படும் என்றும் அறிவிக்கப்பட்டது.

அப்போதே அ.தி.மு.க, பா.ம.க.போன்ற கட்சிகள் நிலத்தை கையகப்படுத்த எதிர்ப்பை தெரிவித்தனர். கிராம மக்களின் விவசாய நிலங்களுக்கு அருகில் விமானநிலையம் அமையவிருப்பதை அனுமதிக்க முடியாது என்று கூக்குரலிட்டனர்.என்றாலும், அப்போதைய மத்திய அரசும், மாநில அரசும் ஒருமித்த கருத்தில் இருந்ததால் ஸ்ரீபெரும்புதூர் அருகே விமான நிலையம் வருவது உறுதியாக இருந்தது. இதன் அதிரடி விளைவாக அங்கு ரியல் எஸ்டேட் வரலாறு காணாத உச்சத்தைத் தொட்டது.

2011 ல் தமிழகத்தில் ஆட்சி மாற்றம் ஏற்பட்டது. எதிர்பார்த்தது போலவே அ.தி.மு.க அரசு மத்திய அரசின் கிரீன் ஃபீல்ட் விமான நிலைய திட்டத்தை ஏற்றுக்கொள்ள மறுத்தது. ஏற்கனவே சென்னை விமான நிலையம் போதுமான அளவிற்கு விஸ்தாரமாக இருப்பதால் கிரீன் ஃபீல்ட் விமான நிலையம் தேவையில்லை என்றும், அப்பாவி கிராம மக்களின் விளை நிலங்களும், வாழ்வாதார இடங்களும் பாதிப்புக்குள்ளாகும் என்று திட்டம் கிடப்பில் போடப்பட்டது. இதுதான் 2013 செப்டம்பர் வரை இருக்கும் நிலைமை. ஆனால், ஒரு சில ரியல் எஸ்டேட் நிறுவனங்களும், கட்டுமான நிறுவனங்களும் தங்களது புராஜெக்டை விற்பதற்காக உத்தேச விமான நிலையம் அருகே வரவிருக்கும் அறிவிப்பை உபயோகித்து பொதுமக்களை குழப்பிவருகின்றன. நிறுவனங்களின் வாக்குறுதிகளை நம்பி, விமான நிலையம் அருகே தங்களுக்கான நிலமோ, வீடோ இருந்தால் நல்லதுதானே என்று பொதுமக்களும் முதலீடு செய்ய ஆர்வமாக உள்ளனர். உண்மையில் ஸ்ரீபெரும்புதூர் அருகே விமான நிலையம் வருகிறதா? அப்படி வருவதாக இருந்தால் எந்த ஆண்டு பணிகள் துவங்கும்? எப்போது நிறைவடையும்? இந்த தேதிகளை ஆதாரபூர்வ மாக சொல்ல குறிப்பிட்ட ரியல் எஸ்டேட் நிறுவனங்களும், கட்டுமான நிறுவனங்களும் தயாராக உள்ளனவா? ஏன் இதுபற்றிய தீர்மானமான செய்திகளை நாளிதழ்கள் வெளியிட தயங்குகின்றன? ஒரு வேளை அங்கு விமான நிலையம் வந்தாலும் கூட அதனால் நமது மனைக்கு கிடைக்கக்கூடிய கூடுதல் பயன்கள் என்ன?

          இதெல்லாம் மில்லியன் டாலர் பெறுமானமுள்ள கேள்விகளாகும். அதே சமயம், ஸ்ரீபெரும்புதூர், பேரம்பாக்கம் இங்கெல்லாம் வீடு, மனை வாங்க நினைக்கும் சாமானிய மனிதனுக்கு கேட்கத் தெரியாத கேள்விகளாகும். அ.தி.மு.க அரசு ஆட்சியில் இருக்கும் வரை கிரீன் ஃபீல்ட் விமான நிலைய புராஜெக்ட் என்ற பேச்சுக்கு இடமே இல்லை என்பது ஸ்ரீபெரும்புதூர், பேரம்பாக்கம் ஆகிய இடங்களில் புராஜெக்டை மேற்கொள்ளும் ரியல் எஸ்டேட் மற்றும் கட்டுமான நிறுவனங்களுக்கு தெரிந்திருந்தாலும் கூட உத்தேச விமான நிலையம் அருகே என்று தங்களது விளம்பரங்களிலும், புரௌசர்களிலும் குறிப்பிட்டு ஏன் அதை மார்கெட்டிங்கிற்கு பயன்படுத்துகிறார்கள் என்று விளக்க அவர்கள் முன் வரவேண்டும். இது தொடர்பான உண்மை செய்திகளை வெளியிட பெரும்பாலான நாளிதழ்கள் தவறுகின்றன என்பதுவும் உண்மை. ‘ஸ்ரீபெரும்புதூரில் ரூ.2000 கோடி செலவில் பிரமாண்ட கிரீன் ஃபீல்ட் ஏர்போர்ட்’ என செய்திகளை வெளியிட்டு, சில மாதங்களிலேயே ‘நவீன விமான நிலையம் கிடையாது. டில்லி, மும்பைக்கு மட்டும் மத்திய அரசு பச்சைக்கொடி’ என்று மறுசெய்தியை வெளியிடுகின்றனர்.

ஒரு புறம் ‘இரண்டாவது விமான நிலைய திட்டம் கனவாகி போய்விடுமோ?’ ‘தமிழக அரசு முயற்சி எடுக்குமா?’ என்று செய்தியை வெளியிட்டுவிட்டு பிறகு, ‘ஸ்ரீபெரும்புதூரில் இந்த ஆண்டு பசுமை விமான நிலையம். பிரதமர் தலைமையில் நடந்த கூட்டத்தில் முடிவு’ என்று செய்தி வெளியிடுகிறார்கள். செய்தியை வெளியிடுகிற எல்லா நாளிதழ்களுக்கும் மிக நன்றாக தெரியும் அ.தி.மு.க அரசு அரியணையில் இருக்கும் வரை கிரீன்ஃபீல்ட் திட்டம் இம்மி கூட நகரப்போவதில்லை என்று. நிலைமை அவ்வாறு இருக்க, யார் தலைமையில் கூட்டம் நடந்தால் என்ன?

இந்திய விமானநிலைய ஆணையதலைவர் திரு.அகர்வால் சமீபத்தில் தெரிவித்திருப்பதாக மற்றுமொரு செய்தி வெளியிடப்பட்டது.

‘ஸ்ரீபெரும்புதூர் கிரீன்ஃபீல்ட் திட்டத்திற்கான மதிப்பீடு ரூ.20,000 கோடியாக உயர்த்தப்பட்டிருக்கிறது. இதற்காக 5000 ஏக்கர் நிலத்தை தமிழக அரசு கையகப்படுத்தியிருக்கிறது. இது குறித்து தலைமைச் செயலர் மற்றும் அதிகாரிகளுடன் விவாதிக்க உள்ளேன்‘ எனக் கூறியதாக செய்திகள் வெளியாகின. 2009 ம் ஆண்டில் கிரீன் ஃபீல்ட் திட்டமைப்பு ரூ.2,000 கோடி என்று மத்திய அரசு அறிவித்தது. இடைப்பட்ட நாட்களில் ரூ.4,000 கோடி என சொல்லப்பட்டது. தற்போது இந்திய விமான நிலையத்தின் தலைவரே திட்டமதிப்பு ரூ.20,000 கோடி என்கிறார். அப்படியென்றால் எது உண்மை? திட்டமதிப்பை யார் சொல்ல வேண்டும்? விமான ஆணையதலைவரா? விமான போக்குவரத்து துறை அமைச்சரா? பிரதமரா? நிதியமைச்சரா? முதலில் 4,000 ஏக்கரில் விமான நிலையம் என்றார்கள். இப்போது 5,000 ஏக்கர் என்கிறார்கள். உண்மையில் எத்தனை ஏக்கரில் எந்த இடத்தில் விமான நிலையம் வரப்போகிறது? இதெல்லாம் கூட பரவாயில்லை, விமான நிலைய ஆணய தலைவர் கிரீன் ஃபீல்ட் திட்டம் குறித்து தமிழக தலைமைச் செயலர் மற்றும் அதிகாரிகளுடன் விவாதிப்பதாக தெரிவித்திருந்தார் என்றால் அதற்கு பிந்தைய செய்தி என்ன? விவாதம் மேற்கொள்ளப்பட்டதா? மேற்கொள்ளப் பட்டதெனில் விவாதங்களின் இறுதியில் முடிவுசெய்யப்பட்ட தீர்மானம் என்ன? அதுகுறித்த தமிழக அரசின் நிலைப்பாடு என்ன?இது பற்றிய எந்த செய்திகளுமே இதுவரை வெளியாகவில்லை என்பதுதான் உண்மை.

     ஸ்ரீபெரும்புதூர் வருவாய்த்துறை மற்றும் தாலுகா அலுவலகங்கள் என எந்த உள்ளாட்சி அமைப்புமே ஸ்ரீபெரும்புதூரில் விமான நிலையம் வரவிருப்பதை உறுதி செய்யவில்லை. நிலைமை அவ்வாறு இருக்க உத்தேச விமான நிலையம் அருகே எனக்கூறி தற்போது நிலவி வரும் அரசியல் குழப்பங்களை பயன்படுத்தி தங்களது புராஜெக்டுகளை மார்க்கெடிங் செய்யும் நிறுவனங்களை ஏன் இதுவரை தமிழக அரசு கட்டுப்படுத்தவில்லை என்பதும் புதிராகவே இருக்கிறது.

தமிழக முதல்வர் கிரீன் ஃபீல்ட் திட்டம் வேண்டாம் என்கிறார். மத்திய அரசு மௌனமாக இருக்கிறது. அதே சமயம் விமான நிலைய ஆணைய தலைவர் கூடிய விரைவில் திட்டம் துவங்கப்பட இருப்பதாக கூறுகிறார். ஆக, மக்களை பெருங்குழப்பத்தில் ஆழ்த்தியிருக்கும் கிரீன் ஃபீல்ட் விமான நிலைய திட்டம் குறித்த இறுதியான, உறுதியான, தீர்மானமான தமிழக அரசின் அறிவிப்பு இதுவரை வெளியாகவில்லை. அறிவிப்பதில் உள்ள குழப்பம் மட்டுமன்றி, மேலும் சிலகுழப்பங்களும் நிலவுகின்றன.

குழப்பம் நம்பர் 1: இதே இடத்தில் சிப்காட் தொழிற் பேட்டைக்கு நிலம் கையகப்படுத்துகிறது. இதையும் ஒரு சில ரியல் எஸ்டேட் நிறுவனங்கள், பார்த்தீர்களா, ஏர்போட்டிற்கு நிலம் வாங்குகிறார்கள் என மார்க்கெடிங் செய்கிறார்கள்.

குழப்பம் நம்பர் 2 : மீனம்பாக்கம் விமான நிலையத்தின் புதிய டெர்மினல் திறப்பதை உள்ளூர் கிராம மக்களுக்கு கிரீன் ஃபீல்ட் விமான நிலையம் திறக்கப் போவதாக தவறாக செய்திகள் சொல்லப்படுகிறதாம்.

குழப்பம் நம்பர் 3 : அடிக்கடி விழும் மீனம்பாக்கம் விமான நிலையத்தின் கூரை விபத்துக்களால், ஸ்ரீபெரும்புதூரில் புதிய விமான நிலையம் திறக்கப் போகிறார்கள் என்றும் செய்திகள் பரப்பப்படுகின்றன.சரி, ஒருவேளை நிறைய அதிசயங்கள் நடந்து கிரீன் ஃபீல்ட் திட்டம் நிறைவேறுகின்றது என்று வைத்துக்கொள்வோம், மனை வாங்கியவருக்கு அதனால் என்ன நன்மைகள் ஏற்படும்? க்ஷாப்பிங் மால்கள், மல்டி ப்ளக்ஸ் தியேட்டர்கள், சூப்பர் மார்கெட்டுகள், மருத்துவமனைகள், கல்லூரி, பள்ளிக்கூடம் இதெல்லாம் விமான நிலையம் சுற்றி வந்துவிடுமா என்றால் அதற்கு ஏதும் வாய்ப்பு இல்லை என்பது, நமது மீனம்பாக்கம் ஏர்போர்ட்டை சுற்றிப்பார்த்துவிட்டு சொல்லிவிடலாம்.

         விமான நிலைய எல்லையிலிருந்து சில கி.மீ தொலைவிலுள்ள கிராமங்களில் அதிகபட்சம் இரண்டு மாடிதான் கட்ட அனுமதிக்கப்படும். மேலும், விமானத்தின் இரைச்சல் பெரும் இடைஞ்சலாக இருக்கும். அந்த வகையில், விமான நிலையம் அருகே என்கிற கவர்ச்சிகரமான விளம்பரத்தை நம்பி மனை அல்லது வீடு வாங்குவது புத்திசாலிதித்தனமான முடிவாக இருக்காது. தவறான வதந்திகளைப் பரப்பி, பெருவாரியான பொதுமக்களை ஏமாற்றி பொய்யான செய்திகளை சொல்லி பணம் பறிக்கும் ஒரு சில கட்டுமான நிறுவனங்களும், ரியல் எஸ்டேட் நிறுவனங்களும் கிரீன் ஃபீல்ட் விமான நிலையம் பற்றிய உண்மைச் செய்திகளை வெளிக் கொண்டுவர முயற்சி செய்ய வேண்டும்.

        மேலும், ஸ்ரீபெரும்புதூரில் குறிப்பிட்ட இடத்தில் கிரீன்ஃபீல்ட் விமான நிலையம் வந்தாலும், வராமல் போனாலும் அதைப்பற்றிய அறிவிப்பினை வெளியிடும் பொறுப்பு தமிழக அரசுக்கும் மற்றும் உள்ளாட்சி அமைப்புகளுக்கும் உண்டு.

           அதுவரை ரியல் எஸ்டேட் புரோக்கர்களின் கொடிதான் பறக்கும்.