எலெக்ட்ஷியன் டிப்ஸ்கள் !


மின்சாரம் இன்றி உலகில் எந்த தொழிலும் இருக்க முடியாது. மின்சாரத்திற்கு மாற்றாக வேறு எந்த புதிய சக்தி வந்தாலும், இதே ஒயரிங், ஸ்விட்ச் பாக்ஸ், மெயின் சப்ளை போன்றவை மாறாது. ஆக, எலெக்ட்ரீசியன் பணியின்றி எதுவுமே நடக்காது,சிறக்காது. அதே சமயம், இந்தப்பணி உயிரோடு விளையாடுவது ஆகும்.

உங்கள் உயிர் மட்டுமல்லாமல் மற்றவர்களின் உயிர்களோடும் கூடத்தான். எத்தனை ரிஸ்க் இருந்தாலும் இந்த தொழிலைப் பலரும் தேர்ந்தெடுப்பதற்குக் காரணம் இதில் வரக்கூடிய வருமானம்தான்.

மின் பணியாளர்கள் எனப்படும் எலெக்ட்ஷியன்களுக்கு உபயோகமான டிப்ஸ்களை இங்கே காண்போம்.
1. பாதுகாப்பு விஷயத்தில் எப்போதும் விழிப்பாக இருங்கள். பாதுகாப்பு வழிமுறைகளை கண்டிப்பாகக் கடைபிடியுங்கள்.
2. அவசரத் தேவைகளுக்கு மருத்துவர்களைத் தேடுவதைப் போலவேதான் உங்களையும் தேடுவார்கள். எனவே. உங்களிடம் இரு சக்கர வாகனமாவது இருந்தாக வேண்டும்.
3. உங்களது முகவரி, அலைபேசி விவரங்களை உங்கள் வாடிக்கையாளர்களிடம் கொடுத்து வைத்திருக்கிறீர்களா? அவர்கள் எந்நேரத்தில் கூப்பிட்டாலும் ஓடிப் போய்ச் செய்து கொடுப்பீர்களா?
4. எதையும் புதிதாக வாங்குவதை விட, இருப்பதையே கொஞ்சம் சரி செய்து போடுங்களேன் என்று சில வீட்டு உரிமையாளர்கள் சொல்வார்கள். ஆபத்து விளைவிக்கக் கூடிய நிலையில் உள்ள பழைய வயர்கள் முதலியவற்றை மாற்றியே ஆக வேண்டியதன் அவசியத்தை எடுத்துச் சொல்லுங்கள்.
5. வீட்டுச்சொந்தக்காரர்கள் எவ்வளவு செலவில் வயரிங் வேலைகளை முடிக்க எண்ணுகிறார்கள் என்பதைத் தெரிந்து கொள்ளுங்கள். அவசியத் திற்கும். ஆடம்பரத்திற்கும் உள்ள வேறுபாட்டை உணர்த்துங்கள்.
6. உங்களுடைய வேலைக்கு எப்படிக் கூலி கொடுக்கப்பட வேண்டும் என்பதை முதலிலேயே தெளிவாக்கிவிடுங்கள்.நீங்கள் கொடுப்பதைக் கொடுங்கள் என்னும் போக்கும் வேண்டாம்.
7. சிக்கனம் கருதி எங்களுக்கு இது போதும் என்று சில வீட்டுக்காரர்கள் சொல்வார்கள். இப்போதே செய்து வைத்துக் கொள்வதில் உள்ள நன்மைகளை அவர்களுக்கு விளக்குங்கள்.
8.எல்லா வேலைகளையும் நீங்களே செய்யப் போகிறீர்களா? வெளியில் கொடுத்துவாங்கப் போகிறீர்களா? அப்படி வாங்கும் வேலைகள் தரமானவையாக இருக்குமா? தீர்மானியுங்கள்.
9. உரிய உரிமங்கள், தகுதிகள் உள்ளவர்களையே உதவிக்கு வைத்துக் கொள்ளுங்கள். கற்றுக் குட்டிகளால் தொல்லை வராத வகையில் கவனமாக நடந்து கொள்ளுங்கள்.
10. தேவைப்படும் கருவிகளை நீங்களே சொந்த முதலீட்டில் வாங்கிக் கொள்வது வேலைகள் தடையில்லாமல் செய்யப்பட உதவும். விலை அதிகமான கருவிகள் என்றால் வாடகைக்கு எடுத்துக் கொள்ளலாம்.
11.ஒரு கட்டத்தில் நீங்களே வாடகைக்கு விடும் வகையில் அமைத்துக் கொள்ளலாம்.
12. உங்கள் தொழிலுக்கே உரிய மரியாதை மற்றும் பாதுகாப்புத் தேவைகளுக்குரிய உடைகளைத் தேர்வு செய்யுங்கள்.நீங்கள் அணியும் ஆடைகள் உங்கள் வேலைகளுக்கு இடையூறு செய்யாதவையாக இருக்க வேண்டும்.
13. உங்களது தொழிலுக்காக நீங்கள் எடுத்துச் செல்லும் பெட்டியில், தேவைப்படும் அனைத்தும் இருக்குமாறு பார்த்துக் கொள்ள வேண்டும். போகிற இடத்தில் தேடிக் கொண்டிருக்கக் கூடாது.
14. சில நேரங்களில் இரவு, பகல் பாராமல் வேலையைத் தொடர வேண்டி வரலாம். இரவு நேரங்களில் அதிகப்படி எச்சரிக்கையோடு பணியாற்ற வேண்டும்.தொடர்ந்து தூக்கத்தைக் கெடுத்துக் கொண்டு வேலை செய்தால் உங்கள் அசதி மற்றும் கவனக் குறைவினால் விபத்துக்கள் நேரிட்டுவிடலாம். எச்சரிக்கை.
15. காலில் ஷூ, கைகளில் உறை இல்லாமல் வேலை செய்வதில்லை என்று கொள்கை வைத்துக் கொள்ளுங்கள்.
16. அலட்சியம் காரணமாகவே பல விபத்துக்கள் நிகழ்கின்றன. உங்களிடம் அந்த அலட்சியம் கூடவே கூடாது. இதில் நீங்கள் கண்டிப்புக் காட்டியே ஆக வேண்டும். முக்கியமாக மெயின்சுவிட்சை ஆன் செய்த நிலையிலேயே வைத்துக் கொண்டு உங்கள் வேலைகளைத் தொடர்வதைத் தவிர்க்க வேண்டும்.
17.வயரிங் வேலைகள் பல வகைப்பட்டவையாக ஆகிவிட்டன. இவற்றில் ஒரு குறிப்பிட்ட துறையில் நீங்கள் வல்லுநர் ஆக வழி காண வேண்டும்.
18. உதவியாளர்களைக் கொண்டு பல வேலைகளைச் செய்து முடிப்பீர்கள். அவர்கள் செய்து வைத்த வேலைகள் சரியாக இருக்கின்றனவா என்பதை ஒரு முறைக்கு இருமுறை சோதியுங்கள்.அரைகுறை ஆட்களை உதவிக்கு வைத்துக்கொள்ளாதீர்கள். அசட்டுப் பேர்வழிகளால் மற்றவர்களுக்கும் ஆபத்து வந்துவிடும்.
19. ஒப்பந்த வேலைகளை முடித்த பின்னும் வெகு காலத்திற்குப் பணம் கொடுக்காமல் இழுத்தடிப்பவர்கள் இருப்பார்கள். அத்தகையவர்களிடம் முன்பணம் வாங்கிக்கொண்டு பகுதி பகுதியாக முடித்துக் கொடுக்க வேண்டும். 20. கண்டிப்பாக வங்கிக் கணக்கு வைத்துக் கொள்ளுங்கள். உங்கள் வேலைகளுக்கான கூலியைக் காசோலை வழியாகப் பெற்று கணக்கில் வரவு வையுங்கள்.
21. உங்களுக்குக் கிடைக்கும் ஆர்டர்கள் பெரிய அளவில் அமைந்தால் அப்போது உங்களது வங்கிக் கணக்கின்வரவு செலவு விவரங்கள்தான் உங்களுக்கு மிகப் பெரிய சிபாரிசாக அமையும்.
22. ஒப்பந்த வேலைகளுக்குக் காப்புத் தொகை கட்ட வேண்டி இருக்கும். உரிமங்களுக்கும் செலவாகும். இதற்கெல்லாம் யாரையும் எதிர் பார்த்துக்கொண்டு இருக்காமல் உங்களது சேமிப்பிலிருந்தே எடுத்துக் கொள்ள வழி செய்யுங்கள்.
23. உயிருக்கு ஆபத்துநேரும் தொழில் இது என்பதால் உங்களது உயிர் அருமைவாய்ந்தது. உங்களை நம்பி இருப்பவர்களுக்கும் பாதுகாப்பாக அமையும்விதத்தில் காப்பீடு செய்து கொள்ளுங்கள்.
24. கருவிகள் ஒரு கைப்படக் கையாளப்படுவது நல்லது. அடுத்தவர்களுக்குக் கொடுத்தாலும் அவர்களிடமிருந்து வாங்கினாலும் கருவிகளைப் பற்றிய முழு அறிவு அவசியம்.
25. கம்ப்யூட்டர் கற்றுக் கொள்ளுங்கள். மின்சுற்றுக்களை முதலில் கம்ப்யூட்டரில் வரைந்து பார்த்துவிட்டுஅதற்குப் பிறகே கடைக்குப் போய் வாங்கி வரலாம். தொழில் நுணுக்கங்களைக் கற்றுக் கொள்ளுங்கள்.
26. கமிஷன் கிடைக்கிறது என்பதற்காகத் தரம் குறைவான பொருட்களை விற்கும் கடைகளை நாடாதீர்கள்.கடைக்காரர்களின் தூண்டிலில் சிக்கிக்கொள்ள வேண்டாம்.
27. ஆங்கில அறிவை வளர்த்துக் கொள்ளுங்கள். கருவிகள்,சாதனங்களின் பெயர்களைச் சரியாகத் தெரிந்து கொள்ளுங்கள். கூடுதலாக வேறு சில மொழிகளையும் கற்று வைத்துக் கொள்வதும் நல்லது.
28. விதிமுறைகளுக்குப் புறம்பாக எதையும் செய்யாதீர்கள். சிலர் மின்திருட்டை நியாயப்படுத்தி உங்களைத் துணைக்கு வரச் சொல்வார்கள். அத்தகைய நடவடிக்கைகளுக்கு உதவாதீர்கள்.
29. நீங்கள் உங்கள் தொழிலில் கற்றுக் கொண்ட அனுபவப் பாடங்களை ஒரு பதிவேட்டில் குறித்து வைத்துக்கொள்ளுங்கள். தேவைப்படும்போது திருத்தங்களைச் செய்யுங்கள்.
30. நீங்கள் ஒரு குழுவாகச் செயல்பட முயற்சியுங்கள். உங்களது உதவியாளர்கள், பொறியாளர்கள், கணக்காளர்கள், ஒப்பந்தக்காரர்கள், கடைக்காரர்கள், வாடிக்கையாளர்கள் என்கிற வட்டத்தை வளர்த்துக் கொள்ளுங்கள்.
31. உங்களது வாடிக்கையாளர்கள் அனைவரிடமும் உங்களது தொடர்பு விவரங்கள் இருக்குமாறு பார்த்துக் கொள்ளுங்கள்.
32. உங்களது வாடிக்கையாளர்கள் அவசரமாகஅழைக்க நேர்ந்து உங்களால் உடனடியாகப் போக முடியவில்லை என்றால் உண்மை நிலையைச் சொல்லுங்கள். சாக்குப் போக்குச் சொல்லவோ, புளுகவோ முயற்சிக்க வேண்டாம்.உங்களால் நேரடியாக ஒரு வேலையை மேற் கொள்ள முடியாத போது மாற்று ஏற்பாடுகளைச் செய்ய வசதி செய்து கொள்ளுங்கள். அவர்கள் உங்களது நம்பிக்கைக்கு உரியவர்களாக இருக்க வேண்டும்.
33. இன்டீரியர் டெக்கரேஷனுக்கு உதவும் பல்வேறு விதமான லைட்டிங் மற்றும் ஃபிக்ஸர்ஸ்களைப் பற்றி நன்கு தெரிந்து கொள்ளுங்கள். அலுவலகங்கள் மட்டுமன்றி, வீடுகளுக்கும் லைட்டிங் ஸ்டைல்கள் வந்து விட்டன என்பதை நினைவில் கொள்ளவேண்டும்.
34. ஃபால்ஸ் சீலிங்கைப் பிரித்து வேலை செய்வதை தற்போதுள்ள எலெக்ட்ரீஷியன்கள் கடினமான வேலையாக நினைத்துக் கொள்கிறார்கள். அது போன்ற வேலைகள் வந்தால் தவிர்க்கப் பார்க்கிறார்கள், அல்லது அதிகக் கூலி கேட்கிறார்கள். இதே தவறை நீங்களும் செய்யாதீர்கள்.
35. மின்னியல் மற்றும் மின்னணுவியல் தொடர்பான கண்காட்சிகள் மற்றும் கருத்தரங்குகளைக் கட்டணம் செலுத்தியாகினும்
தவறாமல் சென்று பாருங்கள்.