பிவிசி ஸ்கஃப் ஃபோல்டிங் !


கான்கிரீட்டைத் தாங்கிப் பிடிப்பதற்கான (ஃபார்ம் ஒர்க்) பலகை அடைப்பு வேலைகளுக்குப் பலவிதமான பொருட்களைப் பயன்படுத்துகிறார்கள். மரப் பலகைதான் இவற்றுள் முதலிடம் பெறுகிறது. அப்புறம் அலுமினிய, இரும்புத் தகடுகளைச் சொல்லலாம். ஃபைபர் கிளாஸ் என்று சொல்லப்படும் கண்ணாடி நார் இழைப் பலகைகளையும் இந்த வேலைகளுக்குப் பயன்படுத்துகிறார்கள்.
       
          இன்னும் சொல்லப் போனால் பிளைவுட்டைக் கூட எடுத்துக் கொள்ளலாம்.இவை எல்லாவற்றையும் விட பிளாஸ்டிக் படுபொருத்தமானதாக இருக்கும். ஏன்?புறப்பரப்பு விசை என்று கேள்விப்பட்டிருப்பீர்கள். இயற்பியல் படித்தவர்களுக்குத் தெரிந்திருக்கும். ஸர்ஃபேஸ் டென்கஷன் என்று குறிப்பிடுவார்கள்.

  நீர்க் குமிழி துளி ஏன் உருண்டையான வடிவத்தை எட்டுகிறது என்பதற்கு இந்த விசையே காரணம் என்பார்கள். கான்கிரீட் இடும் வேலையில் இந்தப் புறப்பரப்பு விசையைக் கொஞ்சம் புரிந்து கொள்ள வேண்டும். கான்கிரீட் ஒட்டும் தன்மை கொண்டது. அதை எந்தப் பரப்பின் மீது போட்டாலும் ஒட்டிக் கொள்ளும். கான்கிரீட் இறுகிப் பதமாகும் வரை அதன் கனத்தைத் தாங்கிப் பிடிப்பதற்காகக் கீழ்த்தளம் ஒன்றை அமைக்க வேண்டும்.

இப்படி அமைக்கப்படும் தளம் கான்கிரீட்டுடன் ஒட்டாத தன்மை கொண்டதாக இருக்க வேண்டும். இங்குதான் புறப்பரப்பு விசை முக்கிய அம்சமாகக் கருதப்படுகிறது. பிளாஸ்டிக் பலகைகளைக் கொண்டு அடைப்பு வேலைகளைச் செய்தீர்கள் என்றால் பிளாஸ்டிக்கிற்கு இருக்கக் கூடிய குறைந்த அளவு புறப்பரப்பு விசை உங்கள் உதவிக்கு வரும்.பிளாஸ்டிக்கின் மேல் இடப்படும் கான்கிரீட் அந்தப் பரப்பின் மேல் ஒட்டிக்கொள்ளாது. எனவே, கான்கிரீட் இறுகிய பிறகு பலகைகளை வெகு எளிதில் பிரித்து எடுத்துவிடலாம். மீண்டும், மீண்டும் பயன்படுத்துவதில் சிக்கல் இருக்காது.
ஒட்டிக் கொண்டிருக்கும் பிசிறுகளை நீக்குவதே பெரிய தொல்லையாக இருக்கிறது என்று அலுத்துக் கொள்ளவும் அவசியம் இல்லை.

பலகைகளை அடைத்து முடித்ததும் அந்தப் பரப்பின் மேல் சென்ட்ரிங் ஆயில் என்ற எண்ணெயைத் தடவுவது வழக்கம். இப்படி எண்ணெயைத் தடவி வைத்தால்தான் கான்கிரீட்டானது பலகைகளின் மேல் ஒட்டிப்பிடித்துக் கொள்ளாமல் இருக்கும். பலகைகளைக் கழற்றி எடுப்பது சுலபமாகும்.பிளாஸ்டிக் ஃபார்ம் ஒர்க்குகளைப் பயன்படுத்தி வேலைகளைச் செய்தீர்கள் என்றால் இந்த சென்ட்ரிங் ஆயிலைப் பயன்படுத்துவதற்கும் வேலை இல்லாமல் போய்விடும்.

இணைப்புகள் நெருக்கமாக, உறுதியாக அமைவதால் கசிவு என்ற பேச்சுக்கே இடமில்லை. எனவே கான்கிரீட்டில் இருந்து சிமென்ட் பால் வழியாது. பலகைகளைக் கழற்றி எடுத்ததும் கான்கிரீட் பரப்பு அழகான தோற்றத்தைத் தரும்.பிளாஸ்டிக் ஃபார்ம் ஒர்க்குகளைப் பயன்படுத்திக் கான்கிரீட் போடப்பட்ட இடங்களில் பூச்சு வேலைக்கும் அவசியம் இல்லை.

        அப்படியே பட்டி பார்த்து பெயின்ட் அடித்துவிட்டுப் போய்விடலாம். எவ்வளவு வேலை மிச்சம்? மீண்டும் மீண்டும் பயன்படுத்த முடியும் என்பதால் ஒரு முறை இதில் முதலீடு செய்தால் நீண்ட காலத்திற்கு கவலை இல்லாமல் இருக்கலாம். ஆயுட்காலம் அதிகம் என்பதால் செலவுச் சிக்கனம் அதிகம் கிடைக்கும். நீங்கள் கட்டுமானத் தேவைகளுக்கான பொருட்களை வாடகைக்கு விடுபவரா? குறிப்பாக சென்ட்ரிங் பலகைகளை? ஆம் எனில் நீங்கள் பிளாஸ்டிக் ஃபார்ம் ஒர்க்குகளுக்கு மாறிவிட வேண்டும்.

           ஏன் என்கிறீர்களா? பிளாஸ்டிக் ஃபார்ம் ஒர்க்குகளை மீண்டும் மீண்டும் பயன்படுத்தலாம். இவற்றைத் தயாரிப்பவர்களே கூட 80 முதல் 100 தடவைகள் வரைதான் பயன்படுத்த முடியும் என்று உறுதி கூறுவார்கள். ஆனால், நீங்கள் கொஞ்சம் பொறுப்பாக அவ்வப்போது சுத்தம் செய்து வைத்துக் கொண்டீர்கள் என்றால் 130 தடவைகள் வரை பயன்படுத்த முடியும். சில இடங்களில் இதற்கு மேலும் கூடப் பயன்படுத்துவதைக் காண முடியும். உங்களுக்குத் தலைவலி தரக் கூடிய இன்னொரு பிரச்சனை, பலகைகளை அடுக்கி வைப்பதற்கான இட வசதி. ஏகப்பட்ட இடம் தேவைப்படும். வாடகை, போக்குவரத்துச் செலவு வகையிலும் அதிகமாக ஆகும். பிளாஸ்டிக் ஃபார்ம் ஒர்க்குகளை அடுக்கடுக்காக அடுக்கி வைக்கலாம்.

குறைந்த இடம் போதும். ஆகவே, மற்ற செலவுகள் குறையும். இருப்பு வைக்கும் இடத்தில் தரையில் நீர்க்கசிவு இருக்கிறதா? இரும்புத் தகடு என்றால் துருப்பிடித்து வீணாகப் போய்விடும். பிளாஸ்டிக் ஃபார்ம் ஒர்க்குகளில் அந்தக் கவலை இல்லை. திறந்த வெளியில் போட்டு வைத்திருந்தாலும் கூட நிம்மதியாக இருக்கலாம்.

         வெயில், மழையால் பாதிப்பு ஏற்படாது. சூரியனிடமிருந்து வரும் புற ஊதாக் கதிர்களாலும் எந்த பாதிப்பும் ஏற்படாது. வேலை நடந்தபின் சுத்தம் செய்ய வேண்டுமா? கொஞ்சம் வேகமாகத் தண்ணீரைப் பீய்ச்சி அடித்தால் போதும் . சுத்தமாகிவிடும்.வேறென்ன வேண்டும்?

             உடனே தாவுங்கள் பிளாஸ்டிக் ஸ்கஃப் ஃபோல்டிங்கிற்கு!