அண்மையில் சுவிட்சர்லாந்தைச் சேர்ந்த ஜோஸப் பெர்னாடிக் என்கிற இன்டீரியர் ஆர்க்கிடெக்ட் தனது கெஸ்ட் ஹவுஸ் ஒன்றின் உட்புறத்தை முழுக்க முழுக்க மரத்தினாலேயே இழைத்திருக்கிறார். சாதாரணமாக தரைகளுக்கு மட்டுமே மரப்பலகைகளைப் பயன்படுத்துவது மரபு. ஆனால், ஜோஸப் தரைகளுக்கு மட்டுமன்றி, சுவர்களுக்கும், சீலிங்குகளுக்கும் மரத்தைக் கொண்டு கவசம் பூட்டியிருக்கிறார்.இதற்காக 3 டன் மரங்கள் பயன்படுத்தப்பட்டிருக்கின்றன.
தரைத்தளத்துடன் இரண்டு அடுக்குகளையுடைய இந்த வீடு 30க்கு 40 என 1200 சதுர அடி பரப்பில் அமைந்துள்ளது. வெளிப்புறத்தில் பார்ப்பதற்கு முழுக்க முழுக்க கான்கிரீட்டினால் ஆனதாக காட்சியளிக்கிறது.அதைத் தவிர்த்து சிமென்ட் கலவைப் பூச்சு அல்லது வர்ணங்கள் எதுவும் பூசப்படவில்லை.உட்புறத்திலும் சிமென்ட் கலவைப்பூச்சு, வர்ணங்கள், டைல்கள் என எதுவுமே பயன்படுத்தாமல் மரப்பலகை கொண்டே சுவர் அலங்காரத்தை மேற்கொண்டிருக்கிறார் ஜோஸப்..
தன்னுடைய உதவி ஆட்கள் இருவரின் துணை மட்டும் கொண்டு, இரண்டு ஆண்டுகளாக இந்த வீட்டின் ஒட்டுமொத்த இன்டீரியர் பணிகளையும் மேற்கொண்டிருக்கிறார் ஜோஸப். “முழுவதுமே மரத்தினாலான வீட்டைக் கட்டத்தான் திட்டமிட்டிருந்தேன். ஆனால், வெயில், பனி, மழை மற்றும் பூச்சித் தொல்லைகளுக்காக அந்தத் திட்டத்தினைக் கைவிட நேர்ந்தது. கான்கிரீட் கட்டிடம்தான் இதுபோன்ற வனாந்திர காட்டுப் பகுதிகளுக்கு ஏற்றது.
அதே சமயம் உட்புறத்தில் மரப்பலகைகள் கொண்டு பொருத்திவிட வெளியே உஷ்ணம் இருந்தாலும், குளிர் இருந்தாலும் வீட்டிற்குள் தெரியாது. தாராளமாக வெளிச்சம் வருவதற்காக 12 முக்கிய இடங்களில் எட்டுக்கு நான்கு அடி அளவுடைய கண்ணாடிகளைப் பயன்படுத்தியிருக்கிறேன். ஃபர்னிச்சர்களைப் பொறுத்தவரை மிக ஜாக்கிரதையாக மரத்தினைத் தவிர்த்து விட்டேன். ஏனெனில், மரத் தரைகளோடு உட்டன் ஃபர்னிச்சர்களைப் பயன்படுத்துவது சிறப்பானது அல்ல. பராமரிப்பும் கடினம். எளிதில் தரையும் பாழ்படும்.
எனவேதான், ஃபைபர், கண்ணாடி ஆகியவைகளிலான ஃபர்னிச்சர்கள் கொண்டு வீட்டினை அலங்கரித்திருக்கிறேன்” என ஜோஸப் தனது சமூக வலைதளத்தில் எழுதியிருக்கிறார். உலகம் முழுக்க அதிக அளவில் இன்டீரியர் ஆர்க்கிடெக்டுகளினால் இவரது வீட்டின் இன்டீரியர் புகைப்படங்கள் பார்க்கப்படவே, அதனை ஜெர்மனியில் நடைபெறும் வருடாந்திர பெஸ்ட் ஆர்க்கிடெக்சர் போட்டிக்கும் அனுப்பி வைத்திருக்கிறார் ஜோஸப் பெர்னாடிக்.
நம்மூர் இன்டீரியர் ஆர்க்கிடெக்டுகளும் இதுபோன்று முயற்சிக்கலாமே!